திண்ணை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திண்ணை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, பிப்ரவரி 07, 2010

தமிழ்ச்செல்வனுக்கு ...

கடந்த 08.01.2010 திண்ணை இதழில் வெளியான எனது "புதுவகை நோய்: இமி-4" எதிர்வினைக் கட்டுரை[சுட்டி-01]இல் "தம் உறவினர்களின் நலனுக்காக, சொந்த நாட்டின் இராணுவ இரகசியங்களை எதிரி நாட்டுக்குக் கசியவிடுதல் ஒரு முஸ்லிமுக்குத் தகாது என்பது இங்கு இஸ்லாத்தின் மார்க்கக் கட்டளையாகக் கூறப் படுகிறது.

இந்தியாவின் பிரிவினை சதிக்குப் பிறகு முளைத்த பாகிஸ்தானில் இந்திய முஸ்லிம்களின் உறவினர்கள் இன்றும் வாழ்கிறார்கள் என்பதும் இந்திய இராணுவ இரகசியங்களைப் பாகிஸ்தானுக்குப் 'போட்டுக் கொடுத்தவர்'களின் பட்டியலில் இந்திய முஸ்லிம் எவரும் இடம்பெறவில்லை என்பதும் இங்குக் குறிப்பிடத் தக்கது" எனும் வரிகளை மறுத்து, "வஹ்ஹாபியின் மோசடி" எனும் தலைப்பில் தமிழ்ச்செல்வன் என்பார் பாகிஸ்தானுக்குப் போட்டுக் கொடுத்த இந்திய முஸ்லிம்கள் என்பதாக ஐந்து சுட்டிகளைக் கொடுத்திருந்தார் [ சுட்டி-02].

அவற்றுள் முதலாவதில் [சுட்டி-03] அஃப்ரோஸ் என்பவன் நமது இராணுவ முகாம்களைப் பற்றிய தகவல்களைப் பாகிஸ்தானுக்குப் 'போட்டுக் கொடுக்க' முயன்று கடந்த 11.08.2006ஆம் தேதி ராம்பூரில் கைது செய்யப் பட்டு, 19.02.2009 அன்று லக்னவ் நீதிமன்றத் தீர்ப்புப்படி பத்தாண்டு காலம் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டவன்.

அஃப்ரோஸ் வழக்கில் நாம் கருத்தில் கொள்ள வேண்டுவது யாதெனில், தன் உறவினர்களின் பொது நலன் கருதி அவன் போட்டுக் கொடுத்தவன் அல்லன். யாரோ போட்டுக் கொடுத்ததைக் காசுக்காக "வாங்கிக் கொடுக்க" முயன்று தோற்றுப் போனவன்.

"அஃப்ரோஸிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் இரகசியக் குறியீடுகளைக் கொண்டவை என்றும் ஆனால் இரகசியத் தகவல்களை அவன் எவ்வாறு பெற்றான் என்பதைக் கண்டு பிடிக்க முடியவில்லை என்றும் நமது இராணுவ அதிகாரி ஒருவர் உறுதிப் படுத்தியிருக்கிறார்" என்பதாக மாவட்டக் குற்றப் பிரிவின் துணை ஆலோசகர் இர்ஃபான் அஹ்மது கான் குறிப்பிட்டதை இந்தியன் எக்ஸ்ப்ரஸ் 21.02.2009 இதழ் Pakistani spy gets 10-year jail term என்று பொருள் மயக்கம் தரும் தலைப்போடு வெளியிட்டுள்ளது [சுட்டி-04].

ஏறத்தாழ மூன்றாண்டு காலம் நடைபெற்ற விசாரணையில் நமது இராணுவ இரகசியங்களை அவனுக்குப் 'போட்டுக் கொடுத்த' புள்ளி யார் எனும் தகவலை அவனிடமிருந்து கறக்க முடியவில்லையா? அல்லது புள்ளி பெரியது என்பதால் வெளியிடவில்லையா? என்பதெல்லாம் நமக்குப் புரியாத புதிர்கள்.

தண்டனை கொடுக்கப்பட்ட இன்னொரு வழக்கில், ஜஹான் ஆரா எனும் பெண் வருகிறாள். தொலைக்காட்சி வழியாக உலகம் முழுக்கக் காண்பிக்கப் படும் நமது குடியரசு நாள் அணிவகுப்பில் இடம்பெறும் ஆயுதங்களை நிழற்படம் எடுத்துப் பாகிஸ்தானைச் சேர்ந்த மாலிக் என்பவனுக்குக் கொடுத்ததாகவும் அவனிடமிருந்து 10 கையெறி குண்டுகளைப் பெற்று அவற்றுள் எட்டை முஸாஃபர் நகரைச் சேர்ந்த இஃப்திகார் என்பவனுக்குக் கொடுத்ததாகவும் வழக்கு. அவள் 20.09.1994இல் கைது செய்யப்பட்ட இடம் பாகிஸ்தான் ஹை கமிஷன் அலுவலகம். Terrorist And Disruptive Activities (Prevention) Act (TADA) மற்றும் Official Secrets Act (OSA) விதிகளின்படி அவளுக்கு ஆறாண்டு கடுங்காவல் தண்டனையும் ரூபாய் ஐயாயிரம் அபராதமும் விதித்து (ஏழாண்டுகள் கழித்து) 07.03.2001இல் உ.பி. நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கையெறி குண்டுகள் பெற்றுக் கொண்டதற்கான சான்றுகளை இஃப்திகாரிடமிருந்து கைப்பற்ற முடியாமல் அரசுத் தரப்புக் கையைப் பிசைந்து நின்றதால் அவன் வழக்கிலிருந்தே விடுவிக்கப் பட்டான் [சுட்டி-05].

மற்ற மூன்று சுட்டிகளில் உள்ள தகவல்கள் கைதுப் படலம்வரை நின்று விடுபவை. வழக்கு நடந்ததா? தீர்ப்பு வந்ததா? போன்ற கூடுதல் விபரங்களைப் பெற முடியவில்லை. அவற்றுள் 1995இல் இராணுவத்தில் இணைந்த முஹம்மது நஸீம் என்பவனது வழக்கு முக்கியமானது. அவன், கார்கில் தியாகி அஹ்மது அலீ [சுட்டி-06] வகித்த Lance Naik பதவி வகித்தவன். அவன் 2006 மார்ச் மாதம் அலீ ஜாட்டூன் எனும் ஐ.எஸ்.ஐ ஏஜண்டோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு நமது இராணுவ நிலைகள், வீரர்கள் பயன்படுத்தும் ஆயுதங்கள் போன்ற தகவல்களை ஏஜண்டுக்குத் தெரிவித்ததாக 29.06.2007இல் டெல்லியில் வைத்துக் கைது செய்யப் பட்டான்.

நமது இராணுவம் ஒளிந்து கொண்டோ துப்பாக்கிகளை ஒளித்து வைத்துக் கொண்டோ போர் செய்யவில்லை. வேண்டிய தகவல்களை வெளிப்படையாகவே வைத்திருக்கிறோம் [சுட்டி-07]. அமெரிக்காவினால் இரண்டாவது செல்லப் பிள்ளையாகத் தத்து எடுக்கப்பட்ட பாகிஸ்தான்காரன் இதுபோன்ற சப்பைத் தகவல்களுக்கு 50,000 ரூபாய் கொடுத்திருக்கிறான் [சுட்டி-08] என்றால் நிச்சயம் அவன் கேனையன்தான். அவன் கேனையனாகவே இருக்கட்டும்; அதுதான் நமக்கு நல்லது.

அதேபோல், பாகிஸ்தானில் உள்ள உறவினர்களைக் காணச் சென்ற மோரீகான் மற்றும் அப்பாஸ்கான் ஆகிய இருவரையும் பாகிஸ்தானின் உளவுத்துறையினர் என்று 'சொல்லப் படுகின்ற' சிலர் அணுகி இந்திய இராணுவத்தைக் குறித்துத் தகவல் கேட்டதாகவும் கைப்பேசி வழியாக இருவரும் காசுக்காகத் தகவல்கள் கொடுத்ததாகவும் 'சொல்லப் படுகின்ற' வழக்கும் ஒன்று. இதில் reportedly working as spies, Morey apparently told cops போன்ற சொற்கள் மூலம், வழக்குக் கெட்டிப் படுத்தப் படாமல் இருப்பதாக அறிய முடிகிறது [சுட்டி-09].

இறுதியாக, கைப்பேசிகளும் பாகிஸ்தானியப் பணமும் வைத்திருந்ததாக அனீஸ்கான், அனீக்கான், கோராகான் ஆகிய மூவரை 04.05.2007இல் கைது செய்த வழக்கு [சுட்டி-10]. மூவரையும் Official Secrets Act (OSA) விதியின்கீழ் நமது இராணுவம் கைது செய்து ஃபாஸில்கா காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளது. கூடுதல் விபரங்கள் கிடைக்கவில்லை.

தமிழ்ச்செல்வன் வெறும் சுட்டிகளாகக் கொடுத்தவற்றைத் தேடிப் பிடித்து இங்கு நான் விளக்கமாக எடுத்து வைப்பதற்குக் காரணம், என்னைப் போன்றே வாசகர்கள் பலருக்கு/சிலருக்கு மேற்காண்பவை புதிய தகவல்களாக இருக்கக் கூடும். இணையத்தில் "உளவு" எனும் சொல் குறித்துத் தேடியபோது மாலிக் என்பவனைப் பற்றி மரைக்காயர் எனும் பதிவர் தனது வலையில் விபரம் கொடுத்திருந்தார் [சுட்டி-11]. அப்பதிவின் அடியில் கண்ட தொடர்புடைய அவரது பழைய பதிவுகளான

ஆகியவற்றைப் படித்துப் பார்த்து அதிர்ந்து போனேன்! திண்ணை வாசகர்கள் சிலருக்காவது அவை புதிய தகவலாக இருக்கக் கூடும். தகவல் தெரியாத திண்ணை வாசகர்களை, "மோசடி"க்காரர்கள் என்று தமிழ்ச்செல்வன் சொல்ல மாட்டார் என்று நம்புவோமாக!

எவ்வாறாயினும், எனது "புதுவகை நோய்: இமி-4" எதிர்வினைக் கட்டுரை[சுட்டி-01]இல் "தம் உறவினர்களின் நலனுக்காக, சொந்த நாட்டின் இராணுவ இரகசியங்களை எதிரி நாட்டுக்குக் கசியவிடுதல் ஒரு முஸ்லிமுக்குத் தகாது என்பது இங்கு இஸ்லாத்தின் மார்க்கக் கட்டளையாகக் கூறப் படுகிறது" எனும் பேசுபொருளிலும் அவ்வாறு தகாத செயல்களைச் செய்வோர் இஸ்லாத்தின் கட்டளைகளை மீறியோர் என்பதிலும் தண்டனைக்கு உரியோர் என்பதிலும் எவ்வித மாற்றமும் இல்லை.

நன்றி!
ஃஃஃ


சுட்டிகள்:
01 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=81001081&format=html
02 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=81001153&format=html
03 - http://newshopper.sulekha.com/man-gets-10-year-jail-for-spying-for-pakistan_news_1038667.htm
04 - http://www.indianexpress.com/news/pakistani-spy-gets-10year-jail-term/426409/
05 - http://www.hinduonnet.com/2001/03/08/stories/0208000q.htm
06 - http://www.kashmir-information.com/Heroes/ali.html
07 - http://indianarmy.nic.in/Index.aspx?flag=LfcULYFlbeQ=
08 - http://news.webindia123.com/news/ar_showdetails.asp?id=706300614&cat=&n_date=20070630
09 - http://www.tribuneindia.com/2009/20090620/nation.htm#11
10 - http://www.dailyexcelsior.com/web1/06may07/news.htm#10
11 - http://maricair.blogspot.com/2007/06/raw.html
12 - http://maricair.blogspot.com/2006/08/blog-post.html
13 - http://maricair.blogspot.com/2006/10/blog-post.html
14 - http://maricair.blogspot.com/2006/10/blog-post_24.html
15 - http://maricair.blogspot.com/2006/11/blog-post_05.html
16 - http://maricair.blogspot.com/2006/11/blog-post_12.html

சனி, ஜனவரி 30, 2010

புதுவகை நோய்: இமி-முற்றியது

அகழிப் போரைப் பற்றிய அனைத்து விபரங்களும் வரலாற்றுப் பதிவுகளாகும். அவை அகழாய்வு செய்து கண்டுபிடிக்க வேண்டிய தேவையிற்றி பல மொழிகளிலும் இணையத்தில் விரவிக் கிடக்கின்றன.

அகழிப் போரை ஏற்பாடு செய்தவர்கள் யூதர்கள் ஆவர்! அவர்களது துரோகத்தாலும் சூழ்ச்சியாலும் உருவானதே அகழிப் போர்.

இணைகற்பிப்பவர்களான மக்காவாசிகளுக்கும் இஸ்லாமியப் படை வீரர்களான மதீனத்து முஸ்லிம்களுக்கும் மதீனாவை அடுத்துள்ள மலைப் பகுதியான உஹதில் ஒரு போர் நடைபெற்றது. காலம் ஹிஜ்ரீ மூன்றாம் ஆண்டு ஷவ்வால் (பத்தாவது) மாதம். அப்போரின் இறுதியில், "அடுத்த ஆண்டு பத்ருக் களத்தில் ஷஅபான் (எட்டாவது) மாதம் நாம் உங்களைச் சந்திப்போம்'' என்று முஸ்லிம்களுக்கு மக்காவின் தலைவர் அபூஸுஃப்யான் சவால் விட்டிருந்தார்; முஸ்லிம்களும் ஏற்றுக் கொண்டிருந்தனர் [சுட்டி-42].

ஆனால் ஒப்புக் கொண்டபடி மக்காவிலிருந்து அடுத்த ஆண்டில் எவரும் படை திரட்டி வரவில்லை.

யூதத் தலைவர்களுள் 20 பேர் மக்கத்துக் குறைஷிகளிடம் வந்து, அவர்களை நபியவர்களுக்கு எதிராகப் போர் புரியத் தூண்டினர். குறைஷிகள் மதீனாவின் மீது படையெடுத்தால் அதற்கு உதவியும் செய்வதாக வாக்களித்தனர். "பத்ருக் களத்தில் அடுத்த ஆண்டு சந்திப்போம்" என்று உஹதுப் போர்க்களத்தில் சவால் விடுத்து, அதை நிறைவேற்றாமல் வாக்கை மீறிவிட்ட குறைஷிகள், தற்போது தங்களது பெருமையைத் தக்கவைத்துக் கொள்ள விரும்பி யூதர்களின் தூண்டுகோலுக்கு இரையானார்கள்.

இத்துணைக்கும் யூதர்களும் முஸ்லிம்களும் ஒப்புக் கொண்ட, கீழ்க்காணும் 12 அம்ச உடன்படிக்கை ஒன்று ஏற்கனவே உருவாக்கப் பட்டிருந்தது:

(01) அவ்ஃப் கிளையினரைச் சேர்ந்த யூதர்கள், முஸ்லிம்களுடன் இணைந்த ஒரே சமுதாயத்தினராகக் கருதப்படுவர். இந்த யூதர்களுக்கு அவர்களது மார்க்கத்தில் முழு உரிமை உண்டு. முஸ்லிம்களுக்கும் அவர்களுடன் நட்பு கொண்டவர்களுக்கும் அவர்களின் மார்க்கத்தில் முழுச் சுதந்திரம் உண்டு. இவ்வாறே அவ்ஃப் கிளையினரைச் சாராத மற்ற யூதர்களுக்கும் அவர்களது மார்க்கத்தில் முழுச் சுதந்திரம் உண்டு.
(02) யூதர்கள் தங்களின் செலவுகளுக்குத் தாங்களே பொறுப்பாளிகளாவர். அவ்வாறே முஸ்லிம்களும் தங்களின் செலவுகளுக்குத் தாங்களே பொறுப்பாளிகளாவர்.
(03) இந்த உடன்படிக்கை உடையவர்களிடம் யார் போர் தொடுத்தாலும் அவருக்கு எதிராக முஸ்லிம்களும் யூதர்களும் தங்களுக்குள் ஒருவர் மற்றவருக்கு உதவி செய்துகொள்ள வேண்டும்.
(04) யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலுள்ள தொடர்பு - நலம் நாடுதல், ஒருவருக்கொருவர் நல்லுபதேசம் செய்தல், உபகாரம் புரிதல் - என்ற அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும்; குற்றம் புரிவதில் துணை போவது கூடாது.
(05) ஒருவரின் நண்பன் செய்த குற்றத்திற்காக அவர் குற்றவாளியாக மாட்டார்.
(06) அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
(07) பிறருக்கு எதிரானப் போரில் முஸ்லிம்களுடன் யூதர்கள் கலந்துகொள்ளும்போது யூதர்களும் போர்ச் செலவுகளில் பங்கெடுக்க வேண்டும்.
(08) இவ்வுடன்படிக்கையில் கலந்து கொள்பவர்கள் மதீனாவில் குழப்பம் விளைவிப்பதோ, விஷமத்தனம் செய்வதோ, இரத்தம் சிந்தச் செய்வதோ முற்றிலும் தடுக்கப்பட்டதாகும்.
(09) இந்த உடன்படிக்கையில் கலந்து கொண்டவர்களுக்கு மத்தியில் ஆபத்தான சண்டை, சச்சரவுகள் அல்லது ஏதும் பிரச்னைகள் நிகழ்ந்தால் அதற்குரிய தீர்வு, அல்லாஹ்வும் அவனது தூதர் முஹம்மது (ஸல்) மூலம் பெறப் படும்.
(10) குறைஷிகளுக்கும், குறைஷிகளுக்கு உதவி செய்பவர்களுக்கும் பாதுகாப்புக் கொடுக்கக் கூடாது.
(11) யாராவது மதீனாவின் மீது முற்றுகையிட்டால் அவர்களுக்கெதிராக அனைவரும் போர் புரிய வேண்டும். தங்களுக்குள் உதவி செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தாங்கள் இருக்கும் பகுதியைப் பாதுகாக்க வேண்டும்.
(12) இந்த உடன்படிக்கை, அநியாயக்காரனையும், குற்றவாளியையும் தண்டனையிலிருந்து பாதுகாக்காது [சுட்டி-43].

மேற்காணும் உடன்படிக்கையை யூதர்கள் முறித்தனர்.

மக்காவின் குறைஷியர், திஹாமாவின் கினானாவினர், ளஹ்ரானின் ஸுலைமியர், கீழ்த்திசையின் கத்ஃபானியர், ஃபஜாராவினர், முர்ராவினர், அஷ்ஜவினர், அஸதியர், ஆகிய பல குலத்தவரை முஸ்லிம்களுக்கு எதிராக ஒருங்கிணைப்பதில் அயராது ஈடுபட்ட 20 யூதக் தலைவர்கள் அடங்கிய குழு, ஏறத்தாழப் பத்தாயிரம் பேர் கொண்ட படையைத் திரட்டி மதீனாவை முற்றுகையிட அனுப்பி வைப்பதில் வெற்றி பெற்றனர்.

மதீனத்து முஸ்லிம்களுள் போரில் ஈடுபடத் தகுதியுடையோர் அப்போது ஏறத்தாழ மூவாயிரம் பேர் மட்டுமே. மதீனாவை எதிரிகளிடமிருந்து எவ்வாறு காப்பது?

அது புலப்பெயர்வின் (ஹிஜ்ரீ) ஐந்தாம் ஆண்டின் இறுதிக் கட்டம். அக்கால கட்டத்தில் புதுமையான போர்த் தந்திரம் ஒன்று (இதைப் புனித மோசடியார் 'சூழ்ச்சி' என்று சொல்வார்) நபித்தோழர் ஸல்மான் அல் ஃபார்ஸீ (ரலி) அவர்களால் முன்மொழியப் பட்டது. மக்காவிலிருந்து மதீனாவுக்கு வரும் வழியைச் சுற்றிலும் அகழ் தோண்டி, எதிரிகளைத் தடுப்பது என்பது திட்டம்.

இன்றைக்கு நபியின் பள்ளிவாயில் இருக்குமிடத்திலிருந்து ஏறத்தாழ மூன்று மைல் தூரத்தில், மதீனாவின் அன்றைய நகர் எல்லையின் இறுதியில் நெடிய அகழி ஒன்று தோண்டப் பட்டது. எதிரிகள் மதீனாவில் எல்லையில் வந்து சேர்ந்து அகழைப் பார்த்துத் திகைத்து நின்றனர்.

இஸ்லாமிய எதிரிகள் மிகக் கோபத்துடன் அகழைச் சுற்றி வந்தார்கள். எங்காவது ஒரு சிறு வழி கிடைத்தால் அதன் மூலம் சென்று விடலாம் என்று முயன்றனர். ஆனால், முஸ்லிம்கள் அகழின் பக்கம் எதிரிகளை நெருங்கவிடாமல் அம்பால் தாக்கினர். அகழை நெருங்குவதோ அகழில் இறங்குவதோ அகழை மண்ணால் மூடி பாதை அமைப்பதோ எதிரிகளால் முடியாமலாகி விட்டது. முற்றுகையின்போது எதிரிகள் பலமுறை அகழியில் இறங்குவதற்கும் அதன் மீது பாதை அமைப்பதற்கும் மிகத் தீவிரமாக முயன்றனர். ஆனால், முஸ்லிம்களின் அம்பு மழைக்கு முன்னர் எதிரிகளின் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன.

இவ்வாறாக எதிரிகளின் 'அகழ் முற்றுகை' ஏறத்தாழ ஒருமாத காலம் நீடித்தது.

இதற்கிடையில், சாகசம் செய்வதாக எண்ணிக் கொண்டு அகழைக் கடக்க முனைந்த அம்ரு இப்னு அப்து உத், இக்ரிமா இப்னு அபூஜஹ்ல், ழரார் இப்னு கத்தாப் போன்றோர் அகழின் ஒரு குறுகிய இடத்தைத் தேடிப் பிடித்துத் தம் குதிரைகளுடன் இறங்கினர். அகழிக்கும் 'ஸல்உ' மலைக்கும் இடையிலுள்ள சதுப்பான இடத்தில் அவர்களது குதிரைகள் சிக்கித் தடுமாறின. இதைப் பார்த்த அலீ இப்னு அபூதாலிப் (ரலி), முஸ்லிம்கள் சிலரை அழைத்துச் சென்று எதிரிகள் திரும்ப ஓட முடியாதவாறு அவர்கள் வந்த வழியை அடைத்து விட்டார். இப்போது எதிரிகளும் முஸ்லிம்களும் நேருக்கு நேர் சந்தித்தனர். அம்ரு, "என்னிடம் நேருக்கு நேர் யார் மோதுவது?" என்று கேட்க, அலீ (ரலி) "நான்" என்றார்கள். அம்ருக்கு முன் நின்ற அலீ (ரலி), அவன் கோபமடையும்படி சில சொற்களைக் கூறவே அவன் கொதித்தெழுந்தான். தனது குதிரையின் காலை வெட்டி அதன் முகத்தில் வாளால் அறைந்து விட்டு அலீயை நோக்கிச் சீறினான். இருவரும் தங்களின் வாளைச் சுழற்ற, சில நொடிகளில் அலீ (ரலி) அவர்களின் வாள் அம்ரின் தலையைச் சீவியது. ஆயிரம் வீரர்களுக்குச் சமமானவன் என்று பெயர் பெற்ற அம்ரைப் பிண்டமாகப் பார்த்த மற்றவர்கள் பயந்து அகழைத் தாண்டி ஓட்டம் பிடித்தனர். குறைஷியருள் மாபெரும் வீரராக விளங்கிய இக்ரிமாகூட பயத்தால் தனது ஈட்டியையும் போட்டுவிட்டு ஓடினார்.

அந்நிகழ்வுதான் அகழிப் போர் வெற்றியின் திறவுகோல்.

இரண்டாவது தந்திரம் செய்தவர் இஸ்லாத்தில் அண்மையில் இணைந்திருந்த நுஐம் என்பார். இவரைத்தான் புனித மோசடியார் தனது மோசடிப் பதிவில் குறிப்பிட்டிருந்தார். எனவே, நுஐம் இப்னு மஸ்ஊத் இப்னு ஆமிர் என்பவரைப் பற்றி விளக்கமாகவே பார்த்து விடுவோம்.

உண்மையில் நுஐம், முஸ்லிம்களின் எதிரிப் படைகளுக்குத்தான் நன்மை செய்தார்; எவ்வாறு என்பதை இறுதியில் பார்ப்போம்.

பல்குலக் கலவையான எதிரிப் படைகளில் கத்ஃபான் எனும் ஒரு குலம் இடம் பெற்றிருந்ததை முன்னர் கண்டோம். அந்தக் குலத்தைச் சேர்ந்த நுஐம் இப்னு மஸ்ஊத் இப்னு ஆமிர் என்பவர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் முஸ்லிமாகி விட்டேன். ஆனால், நான் முஸ்லிமானது எனது கூட்டத்தினருக்குத் தெரியாது. எனவே, நீங்கள் முஸ்லிம்களுக்குச் சாதகமாக ஏதாவது செய்யச் சொன்னால், நான் அதன்படி செய்வேன்" என்றார். அதற்கு நபியவர்கள், "நீ தனியாக என்ன செய்துவிட முடியும்? உன்னால் முடிந்தால் எதிரிகளைத் திசை திருப்பும் தந்திரம் எதையாவது செய். ஏனெனில், போர் என்பதே ஒரு சூழ்ச்சிதான்" என்று கூறினார்கள்.

முதன் முதலாக நுஐம் சென்று சந்தித்தவர்கள், மதீனாவின் எல்லையோரத்தில் வசித்துக் கொண்டு இஸ்லாமிய எதிரிப் படையினருக்கு உணவுக்கான ஏற்பாடுகள் செய்து கொடுத்துக் கொண்டிருந்த மதீனத்து எட்டப்பர்களான குரைளா எனும் யூதக் குலத்தினர். நுஐம் குரைளா குலத்தாரிடம், "நான் உங்களை எந்தளவு விரும்புகிறேன் என்பதையும் எனக்கும் உங்களுக்கும் இடையிலுள்ள வலுவான தொடர்பையும் நீங்கள் நன்கு அறிவீர்கள்தானே?" எனக் கேட்டார். அதற்கவர்கள், "ஆம்!" என்றனர். "இந்த மதீனா உங்களுடைய ஊராகும். இதில்தான் உங்களுடைய சொத்துகளும் பிள்ளைகளும் பெண்களும் இருக்கின்றனர். நீங்கள் இந்த ஊரைவிட்டு வேறு எங்கும் தப்பித்துச் செல்ல முடியாது. ஆனால், குறைஷிகளின் நிலை வேறு. அவர்களும் கத்ஃபான்களும் முஹம்மதிடம் போர் செய்வதற்காக இங்கு வந்திருக்கின்றனர். நீங்களும் முஹம்மதுக்கு எதிராக அவர்களுக்கு உதவி செய்கிறீர்கள். ஆனால், அவர்களது ஊர் இதுவல்ல. அவர்களது செல்வங்களும் பிள்ளைகளும் இங்கு இல்லை. அவர்களுக்கு நல்ல வாய்ப்புக் கிடைத்தால் அதைப் பயன்படுத்திக் கொள்வார்கள். அப்படி வாய்ப்புக் கிட்டவில்லை என்றாலோ போரில் தோல்வியுற்றாலோ அவர்கள் தங்களது ஊர்களுக்குத் திரும்பச் சென்று உயிர் பிழைத்துக் கொள்வார்கள். நீங்கள் முஹம்மதிடம் வசமாக மாட்டிக் கொள்வீர்கள். முஹம்மது உங்களிடம் பழிதீர்த்துக் கொள்வார். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?" என்று கேட்டார். அதற்கு யூதர்கள், "நுஐமே! நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீ கூறுகிறாய்?" எனக் கேட்டனர். அதற்கவர், "நீங்கள் குறைஷியரிடம் அவர்களுள் சிலரை உங்களிடம் அடைமானமாக வைத்துக் கொள்ளக் கேளுங்கள். அவர்கள் சிலரை ஒப்படைக்காதவரை நீங்கள் அவர்களுக்கு ஆதரவாகப் போர் புரியாதீர்கள்" என்று அறிவுறுத்தினார். அதற்கு யூதர்கள், "நீ எங்களுக்குச் சரியான ஆலோசனை கூறிவிட்டாய்" என்று கூறினர்.

இதற்குப் பின் நேரடியாக நுஐம் குறைஷிகளைச் சந்தித்தார். அவர்களிடம், "உங்களை நான் நேசிப்பதையும் உங்களுக்கு நான் நல்லதையே செய்வேன் என்பதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள் தானே?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "ஆம்! அப்படித்தான்" என்றனர். அப்போது குறைஷிகளிடம் நுஐம், "யூதர்கள் முஸ்லிம்களோடு செய்திருந்த உடன்படிக்கையை முறித்தது பற்றி இப்போது மிகவும் வருந்துகின்றனர். அதனால் உங்களிடமிருந்து உங்களின் சிலரை அடைமானமாக உங்களிடமிருந்து வாங்கி, அவர்களை முஹம்மதிடம் கொடுத்துத் தாங்கள் செய்த குற்றத்திற்குப் பரிகாரம் தேடிக்கொள்ள எண்ணுகின்றனர். ஆகையால், அவர்கள் உங்களிடம் உங்களின் ஆட்களை அடைமானமாகக் கேட்டால் நீங்கள் ஏற்றுக் கொள்ளாதீர்கள்" என்று கூறினார். அவ்வாறே கத்ஃபானியரைச் சந்தித்து குறைஷிகளிடம் கூறியது போன்று கூறினார்.

ஹிஜ்ரீ 5, ஷவ்வால் (பத்தாம்) மாதம் குறைஷிகள் யூதர்களுக்கு ஒரு செய்தி அனுப்பினர். அதாவது, "நாங்கள் இப்போது அந்நிய ஊருக்கு வந்திருக்கிறோம். எங்களின் குதிரைகளும் ஒட்டகங்களும் அழிந்துவிட்டன. நீங்கள் எங்களுடன் புறப்படுங்கள். நாம் அனைவரும் சேர்ந்து முஹம்மதிடம் போர் புரிவோம்" என்பதுதான் அந்தச் செய்தியின் சுருக்கம்.

அந்தச் செய்தி அனுப்பப் பட்ட நாள் சனிக்கிழமை!

குறைஷிகளின் அக்கோரிக்கையை யூதர்கள் நிராகரித்ததுடன், "இன்று சனிக்கிழமை. இந்நாளில் நாங்கள் செய்த குற்றத்திற்காக எங்களுக்கு இறைவனிடமிருந்து கிடைத்த தண்டனை [007:163] என்னவென்று உங்களுக்குத் தெரியும். எனவே, நீங்கள் உங்களின் ஆட்களை அடைமானமாக எங்களிடம் தரும்வரை நாங்கள் உங்களுக்கு ஆதரவாகச் சண்டையிட மாட்டோம்" என்று பதில் கூறினர். இச்செய்தியைத் தூதுக்குழு குறைஷிகளிடம் சேர்த்தபோது, "நுஐம் நமக்கு உண்மைதான் கூறியிருக்கிறார்" என்று குறைஷிகளும் கத்ஃபான்களும் கூறினர்.

அதற்குப்பின் இவர்கள் மீண்டும் யூதர்களிடம் தங்களின் குழுவை அனுப்பி, "நாங்கள் உங்களிடம் எங்கள் ஆட்களில் எவரையும் அனுப்ப மாட்டோம். நீங்கள் எங்களோடு இணைந்து கொள்ளுங்கள். நாம் சேர்ந்து முஹம்மதிடம் போர் புரிவோம்" என்றனர். இதைக் கேட்ட யூதர்கள், "அல்லாஹ்வின் மீது ஆணையாக! நுஐம் நம்மிடம் உண்மையைத்தான் கூறினார்" என்று தங்களுக்குள் கூறிவிட்டு, வந்த குறைஷித் தூதர்களைத் திருப்பி அனுப்பி விட்டனர். இதன்மூலம் இரு தரப்பினருக்குமிடையில் பிரிவினை ஏற்பட்டது. மதீனத்து யூதர்கள் குறைஷிகளுக்கு உதவுவதைக் கைவிட்டனர். இதனால் குறைஷிகளின் உறுதி குலைந்தது [சுட்டி-44].

ஏறக்குறைய முற்றுகை முடிவுக்கு வந்தது. முற்றுகையின் மொத்த நாட்களிலும் - அதாவது அகழிப் போரின்போது - பத்தாயிரம் எதிரிகளுள் பத்துப் பேர் மட்டுமே கொல்லப் பட்டனர். இறுதியில், எல்லாரும் 'வெற்றிகரமாகப் பின்வாங்கி' உயிர் பிழைத்து, அவரவர் ஊருக்குப் போய்ச் சேர்ந்தனர்.

முற்றுகையின்போது மேட்டுப் பகுதியில் முஸ்லிம் வில்லாளிகள். தாழ்வான பகுதியில் எதிரிகள். இடையில் அகழி. போர் நடந்திருந்தால் எதிரிகள் முக்கால்வாசிப் பேர் உயிரிழந்திருப்பர்.

நுஐம் செய்த சூழ்ச்சியினால் அதிக இலாபம் அடைந்தவர்கள் இஸ்லாத்தின் எதிரிப் படையினர்தாம்.

ஒருமை-பன்மை வேறுபாடுகூட விளங்காத புனித மோசடியாருக்கு இந்த வேறுபாடு விளங்கும் என்று எதிர் பார்க்க முடியாதுதான்.

- புதுவகை நோய்: இமி முற்றியது -

நன்றி!

ஃஃஃ

சுட்டிகள்:
42 - http://www.tamilislam.com/history/Raheequl_makthooom/madinah_first_phase.htm#110
43 - http://www.tamilislam.com/history/Raheequl_makthooom/madinah_first_phase.htm#7
44 - http://www.tamilislam.com/history/Raheequl_makthooom/madinah_first_phase.htm#116

ஞாயிறு, ஜனவரி 10, 2010

புதுவகை நோய்: இமி-4

உற்ற நண்பர்கள் யாவர்?
அரைகுறை-5 சுரா (3:28) முஃமீன்கள் (தங்களைப் போன்ற) முஃமின்களையின்றி காஃபிர்களைத் தம் உற்ற துணைவர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; அவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அன்றி, (உங்களில்) எவரேனும் அப்படிச் செய்தால், (அவருக்கு) அல்லாஹ் விடத்தில் எவ்விஷயத்திலும் சம்பந்தம் இல்லை; இன்னும் அல்லாஹ் தன்னைப்பற்றி உங்களை எச்சரிக்கின்றான்; மேலும் அல்லாஹ்விடமே (நீங்கள்) மீள வேண்டியதிருக்கிறது.

மேற்காணும் இறைவசனத்தை எடுத்துப் போட்டு, "பிறமதத்தவரோடு முஸ்லிம்கள் உள்ளார்ந்த நட்பு கொள்ள மாட்டார்கள்" என்பதாகத் திண்ணையில் புனித மோசடி செய்யப் பட்டது.

முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காகத் திண்ணையில் எழுதும் சில முஸ்லிம்கள், திண்ணையில் எழுதப்பட்ட என் பள்ளித் தோழன் ஜீனா கணேசனை [சுட்டி-31] விட எனக்கு நெருக்கமானவர்கள் அல்லர். அவன் இன்றும் என் தோழன்தான். எனக்கோ நான் சார்ந்த சமயத்துக்கோ அணுவளவும் கேடு நினைக்காத ஜீனா கணேசனை எதிரியாகக் கொள்ள வேண்டும் என்று எனது மார்க்கம் எனக்குப் போதிக்கவில்லை.

ஏனெனில், வெறும் நண்பர்கள் என்பதற்கும் உற்ற தோழர்கள்/துணைவர்கள் என்பதற்கும் உறவின் கால அளவு, இணைந்து வாழும் சூழல், தூய்மையான அன்பு/நட்பு ஆகியன அளவுகோள்களாக அமைகின்றன. தன்னையும் தனது வாழ்க்கை நெறியையும் மதிக்கக் கூடிய, தன்னைச் சார்ந்த இன்னொருவரை விடுத்து,  தன்னையும் தன் வாழ்க்கை நெறியையும் அழித்தொழிக்க அயராது முயல்பவரை உற்ற தோழராக, உதவியாளராகக் கொள்ள எந்த மதத்தினரும் முன்வர மாட்டார். அதைத்தான் மேற்காணும் இறைவசனங்களும் அதன் பின்னணியும் சுட்டுகின்றன:
"இறைநம்பிக்கையாளர்கள் (தம்மைச் சார்ந்த) இறைநம்பிக்கையாளர்களை விடுத்து, இறைமறுப்பாளர்களைத் தம் உற்ற தோழர்களாக / துணைவர்களாகக் கொள்ள வேண்டாம் - தங்களை அவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காகவன்றி - அவ்வாறு கொள்பவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து எந்தவித உதவியும் இருக்காது. அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறான்! அல்லாஹ்விடமே நீங்கள் அனைவரும் மீள வேண்டியிருக்கிறது. (நபியே!) சொல்லுங்கள்: நீங்கள் மறைத்தாலும் வெளிப்பட உரைத்தாலும் உங்கள் அகத்தில் உள்ளதை அல்லாஹ் நன்கறிவான் ..." [அல் குர்ஆன் 003:028-029] Let not the believers Take for friends or helpers Unbelievers rather than believers: if any do that, in nothing will there be help from Allah: except by way of precaution, that ye may Guard yourselves from them. But Allah cautions you (To remember) Himself; for the final goal is to Allah.Say: "Whether ye hide what is in your hearts or reveal it, Allah knows it all ..." [சுட்டி-32].

"இறைநம்பிக்கையாளர்களே! எனது வழியில் அறப்போர் புரியவும் எனது பொருத்தத்தை வேண்டியும் நீங்கள் (உங்கள் பிறந்த மண்ணைத் துறந்து) புலம் பெயர்ந்திருப்பது உண்மையாயின், எனக்கும் உங்களுக்கும் விரோதியாகத் திகழ்பவர்களை, அவர்கள் மீது நீங்கள் கொண்ட (பழைய) பரிவின் காரணத்தால் (நாட்டின்) இரகசியத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் உற்ற நண்பர்களாக/ பாதுகாவலர்களாகக் கொள்ளாதீர்கள். அவர்கள் உங்களிடம் வந்துள்ள சத்திய(வேத)த்தை மறுத்தவர்கள்; அல்லாஹ்வை உங்கள் (ஒரே) இறைவனாக நீங்கள் ஏற்றுக் கொண்டதற்காக உங்களையும் (என்) தூதரையும் (பிறந்த மண்ணை விட்டு) வெளியேற்றியவர்கள். என்றாலும்கூட நீங்கள் அவர்கள் மீது கொண்ட (பழைய) பரிவினால் (நாட்டின்) இரகசியத்தை அவர்களிடத்தில் வெளிப்படுத்தி விடுகின்றீர்கள். நீங்கள் மறைப்பதையும் வெளிப்பட உரைப்பதையும் நான் நன்கு அறிவேன் ..." [அல் குர்ஆன் 060:001] O ye who believe! Take not my enemies and yours as friends (or protectors),- offering them (your) love, even though they have rejected the Truth that has come to you, and have (on the contrary) driven out the Prophet and yourselves (from your homes), (simply) because ye believe in Allah your Lord! If ye have come out to strive in My Way and to seek My Good Pleasure, (take them not as friends), holding secret converse of love (and friendship) with them: for I know full well all that ye conceal and all that ye reveal ..." [சுட்டி-33].
மேற்காணும் வசனங்களின் பின்னணி:
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் குதிரை வீரர்களான என்னையும் ஸுபைர் இப்னு அவ்வாம் (ரலி),  அபூ மர்ஸத் கினாஸ் இப்னு ஹுஸைன் அல்ஃகனவீ (ரலி) ஆகியோரையும் அழைத்து, "நீங்கள் புறப்பட்டு, 'ரவ்ளத்து காக்' எனும் இடம் வரை செல்லுங்கள்; அங்கு (ஒட்டகப் பல்லக்கில்) இணைவைப்பாளர்களில் ஒருத்தி இருப்பாள். இணைவைப்பாளர்க(ளின் மக்கத்துத் தலைவர்க)ளுக்கு (மதீனாவாசியான) ஹாத்திப் இப்னு அபீ பல்த்தஆ அனுப்பியுள்ள (நம்முடைய படைகளைப் பற்றிய தகவல்களைத் தெரிவிக்கும்) கடிதம் ஒன்று அவளிடம் இருக்கும். (அவளிடமிருந்து அக்கடிதத்தைக் கைப்பற்றி வாருங்கள்)" என்று கூறி அனுப்பினார்கள்.

(நாங்கள் புறப்பட்டுச் சென்றோம்) இறைத்தூதர் (ஸல்) எங்களிடம் குறிப்பிட்ட இடத்தில் அந்தப் பெண் தன்னுடைய ஒட்டகத்தில் சென்று கொண்டிருந்தபோது அவளை நாங்கள் அடைந்தோம். "உன்னிடம் உள்ள கடிதம் எங்கே? (அதை எடு)" என்று கேட்டோம். அவள், "என்னிடம் கடிதம் ஏதுமில்லை" என்று பதிலளித்தாள். அவள் பயணித்த ஒட்டகத்தை நாங்கள் படுக்க வைத்து, அதன் பல்லக்கினுள் (அந்தக் கடிதத்தைத்) தேடினோம்; (கடிதம்) ஏதும் கிடைக்கவில்லை. என் தோழர்கள் இருவரும், "கடிதம் ஏதும் நமக்குக் கிடைக்கவில்லையே!" என்றார்கள்.

நான் (அவளிடம்), "இறைத்தூதர் (ஸல்) பொய் சொல்லமாட்டார் என்று நான் உறுதியாக அறிந்துள்ளேன். எவன் மீது சத்தியம் செய்யப்படுமோ அ(ந்த இறை)வன் மீதாணையாக! நீயாகக் கடிதத்தை எடு(த்துக் கொடு); அல்லது (சோதனையிடுவதற்காக) உன்னுடைய ஆடையை நான் கழற்ற வேண்டியிருக்கும்" என்று சொன்னேன். நான் விடாப்பிடியாக இருப்பதைக் கண்ட அவள், (கூந்தல் நீண்டு தொங்கும்) தன்னுடைய இடுப்புப் பகுதிக்குத் தன்னுடைய கையைக் கொண்டு சென்றாள். அவள் ஒரு துணியை இடுப்பில் கட்டியிருந்தாள். (அங்கிருந்து) அந்தக் கடிதத்தை வெளியே எடுத்துத் தந்தாள்.

அந்தக் கடிதத்துடன் இறைத்தூதர் (ஸல்) அவர்களை அடைந்தோம். கடிதம் கண்ட நபி (ஸல்) அவர்கள், தம் தோழரும் பத்ருப் போராளிகளுள் ஒருவருமான ஹாத்திப் இப்னு அபீ பல்த்தஆ (ரலி) அவர்களை நோக்கி, "ஏன் இப்படிச் செய்தீர்கள்?" என்று கேட்டார்கள். அவர், "அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விசுவாசமுள்ளவனாக நடந்து கொள்வதைத் தவிர வேறெதுவும் எனக்கு நோக்கமில்லை. நான் (என்னுடைய மார்க்கத்தை) மாற்றிக் கொள்ளவுமில்லை; வேறு மதத்தைத் தேடவுமில்லை. இணைவைப்பாளர்(களுக்கு நான் செய்யும் இந்த உதவியால் அவர்)களிடம் எனக்கு ஒரு செல்வாக்கு ஏற்பட்டு, அதன் மூலம் அல்லாஹ் (மக்காவிலிருக்கும்) என் மனைவி மக்களையும் என்னுடைய செல்வத்தையும் பாதுகாக்கவேண்டும் என்றே நான் நினைத்தேன். (என்னைத் தவிர மக்காவிலிருந்து புலம்பெயர்ந்து வந்த) தங்கள் தோழர்கள் அனைவருக்குமே (மக்காவிலுள்ள) அவர்களின் மனைவி மக்களையும் அவர்களது செல்வத்தையும் பாதுகாக்க அவர்களின் செல்வாக்குள்ள மக்கத்து உறவினர்கள் சிலர் மூலமாக அல்லாஹ் வழிவகை செய்(து பாதுகாத்)து இருக்கிறான்" என்று கூறினார்.

இதைக் கேட்ட நபி (ஸல்), "இவர் உண்மை சொன்னார். இவரைப் பற்றி(ப் பிறரிடம்) நல்லதையே கூறுங்கள்" என்று (தம் தோழர்களிடம்) கூறினார்கள்.

அப்போது உமர் இப்னு கத்தாப் (ரலி), "இவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் இறைநம்பிக்கையாளர்களுக்கும் துரோகமிழைத்து விட்டார். என்னை விடுங்கள்; இவரது கழுத்தைக் கொய்து விடுகிறேன்" என்றார்கள். அப்போது நபி (ஸல்), "உமரே! உமக்குத் தெரியுமா? 'நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள்; உங்களுக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது'  என்ற அல்லாஹ்வின் கூற்று, பத்ருப் போரில் பங்கெடுத்தவர்களைப் பற்றியல்லவா?" என்றார்கள்.

இதைக்கேட்ட உமர் (ரலி) அவர்களின் கண்கள் கண்ணீர் உகுத்தன. மேலும், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்"  என்று கூறினார். - அறிவிப்பாளர் : அலீ (ரலி) [புகாரீ6259; சுட்டி-34 ].

இஸ்லாத்துக்காக 'ஹிஜ்ரத்' என்னும் பிறந்த நாட்டைத் துறந்த புலப்பெயர்வு தியாகியாக இருந்தாலும் 'பத்ருப் போராளி' எனும் சிறப்புத் தகுதி மட்டும் இல்லாதிருந்தால் அன்றைய தினம் உமர் (ரலி) வாளுக்கும் ஹாத்திப் (ரலி) கழுத்துக்கும் உறவு ஏற்பட்டிருக்கும்.

மேற்காணும் நிகழ்வு, இஸ்லாத்தைத் தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டதால், தன் மனைவி மக்களையும் சொத்துகளையும் மக்காவில் விட்டு, புலம் பெயர்ந்து அகதியாக மதீனாவுக்கு வந்து, பத்ருப் போரில் இஸ்லாத்தின் விரோதிகளுக்கு எதிராகப் போர் புரிந்த போராளியான ஹாத்திப் இபுனு அபீ பல்த்தஆ (ரலி) எனும் நபித் தோழர் ஒருவரைத் தொடர்பு படுத்தியது என்றாலும் எல்லாருக்கும் எக்காலத்திற்கும் பொதுவானதே.

தம் உறவினர்களின் நலனுக்காக, சொந்த நாட்டின் இராணுவ இரகசியங்களை எதிரி நாட்டுக்குக் கசியவிடுதல் ஒரு முஸ்லிமுக்குத் தகாது என்பது இங்கு இஸ்லாத்தின் மார்க்கக் கட்டளையாகக் கூறப் படுகிறது. இந்தியாவின் பிரிவினை [சுட்டி-35]  சதிக்குப் பிறகு முளைத்த பாகிஸ்தானில் இந்திய முஸ்லிம்களின் உறவினர்கள் இன்றும் வாழ்கிறார்கள் என்பதும் இந்திய இராணுவ இரகசியங்களைப் பாகிஸ்தானுக்குப் 'போட்டுக் கொடுத்தவர்'களின் பட்டியலில் இந்திய முஸ்லிம் எவரும் இடம்பெறவில்லை என்பதும் இங்குக் குறிப்பிடத் தக்கது.

இதுதான் தகிய்யா எனில், இந்திய முஸ்லிம்கள் இந்தவகைத் தக்கியாவில் மிக உறுதியாக இருக்கின்றனர் என்று சொல்லிக் கொள்வதில் எனக்குப் பெருமையே!

-தொடரும், இன்ஷா அல்லாஹ்

ஃஃஃ

 சுட்டிகள்




வெள்ளி, ஜனவரி 01, 2010

புதுவகை நோய்: இமி-3

சத்தியம் செய்தல் (ஆணையிட்டுக் கூறுதல்)

இஸ்லாத்தின் பார்வையில் பொதுவாக ஒரு களங்கத்தை/பழியை/குற்றச்சாட்டை - குறிப்பாக - தன் மீது சுமத்தப் படும் குற்றச்சாட்டை நீக்கிக் கொள்வதற்குத் தக்க சாட்சியங்கள் இல்லாதபோது, அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு, தனக்கு எதிரானவற்றை மறுப்பதற்கும் தன் கூற்று முற்றிலும் உண்மை என்று நிறுவுவதற்கும் சத்தியம் செய்வதற்கு அனுமதி உள்ளது.

இஸ்லாத்தின் மீளெழுச்சிக்கு முன்னர் மூன்றுவகை சத்தியமிடுதல்கள் வழக்கில் இருந்தன:

1. தாங்கள் வழிபடும் சிலைகளின் பெயரால் செய்யப் படும் தீர்க்கமான சத்தியம், [புகாரீ6650; சுட்டி-20].

2. தங்கள் மனைவியரைத் தள்ளி வைப்பதற்காக, "சத்தியமாக நான் உன்னுடன் உறவு கொள்ள மாட்டேன்" எனக் கூறும் வதைச் சத்தியம் [சுட்டி-21],

3. எவ்வித உள்நோக்கமும் தேவையும் இன்றி விளையாட்டாகக் கூறும் வெற்றுச் சத்தியம் [சுட்டி-22]. இதை, "அல் யமீனுல் லக்வு (வீண் சத்தியம்)" என்று அல் குர்ஆன் குறிப்பிடுகிறது.

இஸ்லாத்தின் மீளெழுச்சிக்கு முன்னர், அரபு மக்களிடையே எடுத்ததற்கெல்லாம் சத்தியம் செய்யும் வழக்கம் இருந்ததை அவர்களது வரலாறு கூறுகிறது. "என் தந்தை மீதாணை!", "உன் தந்தை மீதாணை!" எனக் கூறுவது அவர்களது இயல்பாக இருந்திருக்கிறது. இது, நமது நாட்டார் வழக்கான "ஒங்கொப்புராண (உன் அப்பன் மீதாணை)" என்பதை ஒத்ததாகும். "தன்னைப் படைத்த இறைவனைத் தவிர வேறு யார்/எதன் மீதும் ஆணையிடக் கூடாது" எனும் திருத்தம் [புகாரீ6108; சுட்டி-23] வரும் வரைக்கும் நபித் தோழர்கள் உட்பட அனைவரும் பழைய பழக்கத்திலேயே இருந்திருக்கின்றனர்.

இஸ்லாத்தைத் தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட பின்னரும், "இன்றிரா எனக்கு உணவு வேண்டாம்" எனக் குடும்பத் தலைவர் கூறுவதற்கு ஒரு சத்தியம்; பதிலுக்கு, "உன் தந்தை உண்ணாவிடில் நானும் உண்ண மாட்டேன்" எனக் கூறும் தாயின் சத்தியம்; "வீட்டுக்காரர் உண்ணாமல் நாங்கள் உண்ணப் போவதில்லை" என்பதாக விருந்தாளிகள் செய்யும் சத்தியம் போன்ற தேவையற்ற சத்தியங்கள் நபித்தோழர்களின் நாவினில் வெகு சரளமாக விளையாடும் சொற்களாக இருந்துள்ளன [புகாரீ6141; சுட்டி-24].

தன் மனைவி தன்னோடு இணங்கி இருப்பதையும் பிணங்கி இருப்பதையும் பிரித்து அறிந்து கொள்வதற்கு, சரளமாக அவர் இடும் சத்தியம் சார்ந்த சொற்கள் அடிப்படையாக இருந்ததை அண்ணலாரின் குடும்ப வாழ்க்கையில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது [புகாரீ5228; சுட்டி-25].

மூன்றாவது அரைகுறையை இனங் கண்டு கொள்வதற்கு மேற்காணும் வரலாற்றுத் தகவல்கள் வாசகர்களுக்கு உதவக் கூடியவையாக அமையும்.

அரைகுறை-3 சுரா (2: 225) (யோசனையின்றி) நீங்கள் செய்யும் வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான். ஆனால், உங்களுடைய இதயங்கள் (வேண்டுமென்றே) சம்பாதித்துக் கொண்டதைப்பற்றி, உங்களைக் குற்றம் பிடிப்பான்; இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க பொறுமையுடையோனுமாக இருக்கின்றான்.

மேற்காணும் இறைவசனத்தை எடுத்துப் போட்டு, அதற்குத் தொடர்பில்லாத "பிறமதத்தவரை ஏமாற்றுவதற்கு முஸ்லிம்கள் சத்தியம் செய்வார்கள்" என்பதாகத் திண்ணையில் புனித மோசடி செய்யப் பட்டது.
"நீங்கள் செய்யும் வெற்றுச் சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களை(க் குற்றம்) பிடிக்க மாட்டான். மாறாக, உங்கள் உள்ளங்கள் திட்டமிட்டு(ச் சத்தியங்கள் செய்து) பெற்றுக் கொள்பவற்றுக்காக உங்களை(க் குற்றம்) பிடிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; சகித்துக் கொள்பவன் [அல் குர்ஆன் 002:225]. Allah will not call you to account for thoughtlessness in your oaths, but for the intention in your hearts; and He is Oft-forgiving, Most Forbearing [சுட்டி-26].

"நீங்கள் செய்யும் வெற்றுச் சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களை(க் குற்றம்) பிடிக்க மாட்டான். மாறாக, நீங்கள் செய்யும் தீர்க்கமான சத்தியங்களுக்காக (அவற்றில் தவறினால்) உங்களை(க் குற்றம்) பிடிப்பான் ... [அல் குர்ஆன் 005:089] Allah will not call you to account for what is futile in your oaths, but He will call you to account for your deliberate oaths ... [சுட்டி-27].
ஒருவரது கூற்றை "ஆம்" என்று ஏற்றுக் கொள்வதற்கும் வேறோரு கூற்றை "இல்லை" என்று மறுப்பதற்குங்கூட, "அல்லாஹ்வின் மீதாணை!" என்று சேர்த்துச் சொல்லுவது வழக்கமாக இருந்தது. "அவையெல்லாம் வெற்றுச் சத்தியங்கள்தாம்" என்று இறைவேதம் தெளிவு படுத்தியது [புகாரீ 4613; சுட்டி-28].

மேற்காணும் இறைவசனங்களில் தன் இனத்தவர் என்றோ பிற மதத்தவர் என்றோ குறிப்பேதுமில்லை என்பது இங்குக் கூடுதல் கவனத்திற்குரியது. புனித மோசடியில் குறிப்பிட்டுள்ளவாறே "யோசனையின்றி"ச் செய்யும் சத்தியங்களோடு பிற மதத்தவரை எப்படி ஏமாற்ற முடியும்? என்பது 'யோசனை'க்குரியதாகும். இதில் தக்கியா எனும் பேசுபொருள் எங்கே இருக்கிறது என்று தேடிப் பிடிக்க வேண்டியது வாசகர்களின் பொறுப்பாகும்.

***

"பிற மதத்தவரை ஏமாற்றுவதற்காகப் பொய் சத்தியம் செய்து விட்டு, அதற்குப் பரிகாரம் செய்தால் சரியாகிவிடும்" எனும் மாயையை ஏற்படுத்துவதற்காகப் புனித மோசடி செய்யப் பட்ட இன்னொரு இறைவசனத்தையும் பார்க்கலாம்:

அரைகுறை-4 சுரா (66:02) – அல்லாஹ் உங்களுடைய சத்தியங்களை (சில போது தக்க பரிகாரங்களுடன்) முறித்து விடுவதை உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறான்; மேலும் அல்லாஹ் உங்கள் எஜமானன். மேலும் அவன் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.

மேற்காணும் 066ஆவது அத்தியாயத்தின் தொடக்க இறைவசனங்கள், அந்த வசனங்களை மக்களுக்கு எடுத்தோதும் பொறுப்பில் இருந்த இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைக் கண்டித்து அருளப் பெற்றவை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மனைவியர் மூவர் தொடர்புடைய நிகழ்வைக் குறித்தும் இறைவனால் ஆகுமாக்கப் பட்ட பானங்களின் ஒன்றான, "தேனை நான் இனி அருந்த மாட்டேன்" என்று சத்தியம் செய்ததற்காக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறைவனால் கண்டனம் செய்யப் பட்டதைக் குறித்தும் பேசும் வசனங்களை, பிற மதத்தவரோடு பொருத்தி புனித மோசடி செய்யப் பட்டது. அதைத் திண்ணையும் பெருமையோடு பதித்தது.

அந்த நிகழ்வைக் கூறும் முழுவசனங்கள்:
"நபியே!, அல்லாஹ் உமக்கு அனுமதித்ததை உம் (இரு) மனைவியரின் உளநிறைவுக்காக நீங்கள் ஏன் விலக்கிக் கொள்கின்றீர்கள்? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரில்லா அன்புடையோன். உங்களுடைய சத்தியங்களை முறித்துக் கொள்வதற்கு உரிய பரிகாரத்தை அல்லாஹ் கடமையாக்கித் தந்திருக்கிறான். அவன்தான் உங்கள் அதிபதி. அவன் நன்கறிபவன்; ஞானம் மிக்கவன் [அல் குர்ஆன் 066:001-002] O Prophet! Why holdest thou to be forbidden that which Allah has made lawful to thee? Thou seekest to please thy consorts. But Allah is Oft-Forgiving, Most Merciful. Allah has already ordained for you, (O men), the dissolution of your oaths (in some cases): and Allah is your Protector, and He is Full of Knowledge and Wisdom. [சுட்டி-29].
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களின் இல்லத்துக்குச் சென்றால் அங்குத் தேன் அருந்துவதையும் அவரிடம் (அதிகநேரம்) தங்கிவிடுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். (இதை விரும்பாமல் அவர்களின் துணைவியரான) நானும் ஹஃப்ஸாவும் கூடிப்பேசினோம். (தேனருந்தி விட்டு) நபி (ஸல்) அவர்கள் நம்மிருவரில் யாரிடம் முதலில் வந்தாலும் அவர், "கருவேலம் பிசின் சாப்பிட்டீர்களா? உங்களிடமிருந்து, பிசினின் துர்வாடை வருகிறதே" என்று கேட்க வேண்டும் என முடிவு செய்துகொண்டோம்.

வழக்கம்போல் ஸைனபின் வீட்டிலிருந்து தேனருந்தி விட்டு, நபி (ஸல்) அவர்கள் வந்தபோது நாங்கள் பேசி வைத்திருந்தபடி கேட்டோம். நபியவர்கள், "இல்லை (நான் பிசின் சாப்பிடவில்லை); ஸைனபின் இல்லத்தில் தேனருந்தினேன். சத்தியம் செய்கிறேன்: (இனிமேல்,) நான் ஒருபோதும் அதை அருந்த மாட்டேன்" என்று கூறிவிட்டு, "இது குறித்து எவரிடமும் தெரிவித்து விடாதே!" என்றும் கேட்டுக் கொண்டார்கள் [அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா (ரலி) - புகாரீ4912; சுட்டி-30].

இதில் தக்கியா எங்கே? பிறமதத்தவர் எங்கே?

யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.

- தொடரும், இன்ஷா அல்லாஹ்.

ஃஃஃ

சுட்டிகள்:

சனி, டிசம்பர் 26, 2009

புதுவகை நோய்: இமி-2

உடன்படிக்கை என்றால் என்ன?

இருவர் அல்லது இரு சாரார் தத்தமது விருப்பங்களை/கோரிக்கைகளை முன்வைத்துக் கலந்துபேசி, பொதுவான முடிவுக்கு வந்து, அதை இருவரும்/இருசாராரும் ஏற்றுச் செயல்படுவதற்கு உடன்படுவதாக உறுதி கூறுவது/எழுதிக் கொள்வதற்குப் பெயர் உடன்படிக்கையாகும்.

அவ்வாறு ஏற்றுக் கொண்டவற்றைப் புறக்கணித்து உடன்படிக்கையை முதலாவதாக முறிப்பவர்கள் அநியாயக்காரர்களே. பிறரோடு செய்து கொண்ட உடன்படிக்கைகளை முஸ்லிம்கள் முறித்ததாக இஸ்லாமிய வரலாற்றில் எங்கும் பார்க்க முடியாது.

முஸ்லிம்களின் தலைவர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிறருடன் செய்து கொண்ட உடன்படிக்கைகள் பல. அவற்றுள் 'யூத உடன்படிக்கை' [சுட்டி-09], புகழ் பெற்றது. அந்த உடன்படிக்கையை முறித்தவர்கள் [சுட்டி-10] யூதர்கள் ஆவர். அதேபோல் இஸ்லாமிய வரலாற்றில் பெருமை பொங்கப் பேசப்படும் ஹுதைபிய்யா உடன்படிக்கையை முறித்தவர்கள் மக்கத்துக் குரைஷியர்கள் ஆவர்.

ஆனால், வரலாற்றைத் திரிக்கும் முயற்சியாக, 'புனித மோசடி'யில் உடன்படிக்கையை முஸ்லிம்கள் உடைத்ததாகத் தலைகீழ்ப் பாடம் நடத்தப் பட்டது; அதைத் திண்ணையும் பதித்துப் பெருமை(!) சேர்த்துக் கொண்டது.

அரைகுறை-2 Sura (9:3) - "...Allah and His Messenger are free from liability to the idolaters...” (உடன்படிக்கையை உடைத்தல் என்பதும் ‘தக்கியா’வின் மற்றொரு விளைவு-பாணி).

அல்குர்ஆனின் ஒன்பதாவதான 'மீட்சி/விலகல்' அத்தியாயத்தின் மூன்றாவது வசனத்தின் சில (அரைகுறைச்) சொற்கள், 'உடைப்பதற்கே உடன்படிக்கை' என்று முஸ்லிம்களுக்கு உத்தரவு போடுவதுபோல் பம்மாத்துக் காட்டப் பட்டுள்ளது.

மேற்காணும் இறைவசனத்தில் பேசப்படும் உடன்படிக்கை யாது? அதன் பொருளடக்கங்கள் யாவை? அவற்றை மீறியவர் யாவர்? போன்ற முழுமையான தகவல்களை இங்கு நாம் அறிந்து கொள்வோம். அதற்கு முன்னர், இஸ்லாமிய மீளெழுச்சியின் 19ஆவது ஆண்டின் இறுதியில் இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் மக்கத்து இணைவைப்பாளர்களின் தலைவர் அபூஃஸுப்யானின் பிரதிநிதி ஸுஹைல் பின் அம்ரூ என்பவருக்கும் ஏற்பட்ட 'ஹுதைபிய்யா உடன்படிக்கை'யைப் பற்றி மேற்காணும் இறைவசனம் [009:003] பேசுவதால் 19 ஆண்டுகால இஸ்லாமிய மீளெழுச்சியைப் பற்றி மிகச் சுருக்கமாகப் பார்த்துக் கொள்வது நலம்.

இஸ்லாத்தின் மீளெழுச்சிக்குப் பின்னர் 13 ஆண்டுகள்வரை, தம் குடும்பச் சொந்தமான குரைஷியர்களால் நிகழ்த்தப் பட்ட ஊர்விலக்கல் முதல், கொலை முயற்சிவரை அனைத்தையும் எதிர்கொண்டு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்காவில்தான் வசித்தார்கள். 13ஆவது ஆண்டின் இறுதியில், தாம் பிறந்த மண்ணான மக்காவைத் துறந்து, அடைக்கலம் கொடுப்பதற்கு அழைத்த மதீனாவுக்குப் புலம் பெயர்ந்தார்கள். இந்தப் புலப் பெயர்வுக்கு, 'ஹிஜ்ரா/ஹிஜ்ரத்' என்பது அரபுப் பெயராகும். அந்த ஆண்டிலிருந்தே முஸ்லிம்களின் வரலாற்றுப் பதிவுகளை 'ஹிஜ்ரீ' எனும் பெயரால் வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

மதீனாவின் மக்களுக்கிடையே பன்னெடுங்காலம் நிலவி வந்த இனப்பகையை ஒழித்துக் கட்டி, மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தியதாலும் பல சீர்திருத்தங்களைச் செய்ததாலும் மதீனாவின் மக்கள் அண்ணல் நபியைத் தம் ஆட்சித் தலைவராக்கிக் கொண்டனர் [சுட்டி-11].

அண்ணல் நபியின் செல்வாக்குக் கூடிக் கொண்டே போவதையும் அவர்கள் மக்காவில் வாழ்ந்த காலத்தில் பரவியதைவிடப் பன்மடங்கு அவரது புலப் பெயர்வுக்குப் பின்னர் அதிவேகமாக தம் சொந்த மண்ணில், தங்களின் கண் முன்பே வெகு வேகமாக இஸ்லாம் பரவுவதைக் கண்ட குரைஷிகள், மதீனாவைச் சூறையாடுவதற்கும் மதீனாவின் ஆட்சித் தலைவராகத் திகழ்ந்த அண்ணலாரை ஒழித்துக் கட்டுவதற்கும் மக்காவிலிருந்து (ஏறத்தாழ 400கி.மீ) பயணித்து வந்து பலமுறை (முதல் பத்ரு ஹிஜ்ரீ2இல்; உஹது ஹிஜ்ரீ3இல்; இரண்டாவது பத்ரு ஹிஜ்ரீ4இல்; அகழி ஹிஜ்ரீ-5இல்) போர் புரிந்தனர்; அனைத்திலும் தோல்வியைத் தழுவித் திரும்பிச் சென்றனர்.

***

அகழிப் போருக்கு அடுத்த ஆண்டு ஹிஜ்ரீ 6இல் மக்காவிலுள்ள கஅபா எனும் இறைப் பேரில்லத்தில் உம்ரா எனும் புனித வணக்கம் புரிவதற்காக நபிகள் நாயகமும் அவர்களின் 1400 தோழர்களும் மதீனாவிலிருந்து புறப்பட்டு மக்காவை நேக்கிச் சென்றார்கள். மக்காவைப் புனிதப் பயணக்குழு சென்றடைவதற்கு ஏறத்தாழ 15 கி.மீ தொலைவு இருக்கும்போது மக்காவின் இணைவைப்பவர்கள், பயணக்குழுவை மக்காவுக்குள் அனுமதிக்க முடியாது எனத் தடுத்தனர். அந்த இடத்துக்குப் பெயர் ஹுதைபிய்யா.

தாங்கள் போர் செய்ய வரவில்லை என்றும் அக்கால அரபியர் அனைவருக்கும் பொதுவான 'உம்ரா' வணக்கம் புரிவதற்கே மக்காவுக்கு வருவதாக முஸ்லிம்கள் தரப்பில் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் எதிரணியினர் செவி சாய்க்கவில்லை. முஸ்லிம்களும் முறுக்க ஆரம்பித்தனர். இதற்கிடையில் மக்காவின் தலைவர்களுக்கிடையே முஸ்லிம்களை இறையில்லத்திற்கு வரவிடாமல் தடுப்பது குறித்து இரு வேறு கருத்துகள் [சுட்டி-12] ஏற்பட்டன.

நிலைமை மோசமாவதை அறிந்து கொண்ட மக்கத்துக் குறைஷிகள், அமைதி உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்வதற்காக சுஹைல் இப்னு அம்ரூ என்பவரை நபி (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தனர்.

நபி (ஸல்) அவர்களிடம் சுஹைல் நீண்ட நேரம் பேசினார். பின்பு இருவரும் உடன்படிக்கைக்கான கூறுகளை முடிவு செய்தனர். அவையாவன:
[1] முஸ்லிம்கள் இந்த ஆண்டு மக்காவுக்குள் நுழையாமல் திரும்பிச் சென்றுவிட வேண்டும். அடுத்த ஆண்டு முஸ்லிம்கள் உம்ராவிற்கு வந்து மக்காவில் மூன்று நாட்கள் தங்கிக் கொள்ளலாம். சாதாரணமாக ஒரு பயணி தன்னுடன் வைத்திருக்கும் ஆயுதங்களை எடுத்து வரலாம். ஆனால் அவற்றை உறைக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்த ஆண்டில் முஸ்லிம்களுக்கு எவ்வகையிலும் எந்தவித இடையூறும் இருக்காது.

[2] பத்து ஆண்டுகளுக்கு இரு தரப்பிலும் போர் நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது. அக்காலங்களில் அனைவரும் அச்சமற்று இருப்பார்கள். யாரும் எவருக்கும் எவ்விதத் தீங்கும் செய்யக் கூடாது.

[3] யாரொருவர் முஹம்மதுடைய உடன்படிக்கையாளராகச் சேர்ந்து கொள்ள விரும்புகிறாரோ அவர் அதில் சேர்ந்து கொள்ளலாம். போலவே, மக்காக் குறைஷிகளின் உடன்படிக்கையாளராகச் சேர்ந்து கொள்ள விரும்புகிறவர் அதில் சேர்ந்து கொள்ளலாம். இந்த இரு பிரிவினரில் ஒன்றுடன் சேர்ந்து கொள்ளும் எந்த ஒரு கிளையினரும் அந்தப் பிரிவைச் சேர்ந்தவராவார். அதற்குப்பின் அந்தக் கிளையினருக்கு எதிராக யாராவது அத்துமீறி நடந்து கொண்டால் அஃது அவர் சார்ந்த முழுப்பிரிவின் மீதான அத்துமீறலாகக் கொள்ளப் படும்.

[4] மக்கத்துக் குறைஷி ஆண்களுள் யாராவது தன் பாதுகாவலரான நெருங்கிய உறவினரின் அனுமதியின்றி, தப்பித்து முஹம்மதிடம் வந்து சேர்ந்தால் முஹம்மது அவரை மக்கத்துக் குறைஷிகளிடம் திருப்பி அனுப்பி விடவேண்டும். ஆனால், முஹம்மதிடம் உள்ளவர்களில் யாராவது தப்பித்து மக்கத்துக் குறைஷிகளிடம் வந்துவிட்டால் அவர் முஹம்மதிடம் திருப்பி அனுப்பப்பட மாட்டார்.

மேற்காணும் உடன்படிக்கை [சுட்டி-13] முழுமை பெறுமுன்னர், மக்காவைச் சேர்ந்த, அண்மையில் இஸ்லாத்தைத் தழுவிய அபூஜந்தல் என்பார் முஸ்லிம்களுடன் சேர்ந்து கொள்ளப் புகலிடம் தேடி வந்தார். அவர், மக்கத்துக் குரைஷிகளின் பிரதிநியான சுஹைலின் மகனாவார். மக்காவைச் சேர்ந்த ஆண் தங்களிடம் வந்தால் திருப்பி அனுப்பி விடுவோம் என்ற பேச்சு வார்த்தை முடிந்து விட்டதால், அபூஜந்தலை அவரின் தந்தையிடமே ஒப்படைத்த நேமையாளர் எங்கள் தலைவர் [சுட்டி-14] முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.

பிற்றை நாட்களில் அதேபோல், மக்கத்துக் குரைஷியரின் உடன்படிக்கைப் பிரிவான ஸகீப் இனத்தவருள் ஒருவரான அபூபஸீர் என்பார் புகலிடம் தேடி மதீனாவுக்கு வந்தபோது, அவரைத் திருப்பி அனுப்புமாறு கேட்டு வந்த மக்கத்தவர்களுடன் அவரை அனுப்பி வைத்த நேர்மையாளர் எங்கள் தலைவர் [சுட்டி-15].

***

பின்னர், தங்களுக்குப் பாதகம் விளைந்தபோது, ஹுதைபிய்யா உடன்படிக்கையின் நான்காவது கூறுதனைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்தவர்கள் மக்கத்துக் குறைஷிகளாவர்.

உடன்படிக்கையின் மூன்றாவது கூறான, "ஒருபிரிவினருடன் சேர்ந்து கொள்ளும் எந்தக் கிளையினருக்கும் எதிராக மறுபிரிவினர் அத்து மீறக் கூடாது" என்பதை உடைத்தவர்களும் மக்கத்துக் குரைஷியரே.

ஹுதைபிய்யா உடன்படிக்கைக்கு முன்னர்வரை குஜாஆ, பனூபக்ரு ஆகிய இரு குலத்தவரும் பன்னெடுங் காலமாகப் பகைமை மாறாமல் தங்களுக்குள் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். உடன்படிக்கைக்குப் பின்னர், குஜாஆவினர் நபியவர்களுடன் சேர்ந்து கொண்டனர். பனூபக்ரு குலத்தார் குரைஷிகள் பக்கம் சேர்ந்து கொண்டனர். இரு குலத்தவரிடையே சண்டைகள் தொடராமல் ஹுதைபிய்யா உடன்படிக்கைக் கட்டுப் படுத்தி வைத்திருந்தது.

ஹிஜ்ரீ 8, ஷஅபான் (எட்டாவது) மாதம் பனூபக்ரு குலத்தினரின் ஒரு கூட்டத்தினரை அழைத்துக் கொண்டு நவ்ஃபல் இப்னு முஆவியா அத்தியலி என்பவன் புறப்பட்டான். அன்று குஜாஆக் குலத்தவருள் சிலர் 'அல்வத்தீர்' என்ற கிணற்றுக்கருகில் ஒன்றுகூடியிருந்தனர். நவ்ஃபல், தான் அழைத்து வந்தவர்களைச் சேர்த்துக் கொண்டு குஜாஆவினரைத் தாக்கினான். குஜாஆவினரில் சிலர் கொல்லப்பட்டனர். எஞ்சியுள்ளவர்களுடன் கடுமையான சண்டை நடந்தது. பனூபக்ருக் கிளையினருக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவியதோடு, அவர்களோடு இணைந்து கொண்டு குரைஷிகளுள் சிலரும் இரவின் இருளை பயன்படுத்திக் கொண்டு குஜாஆவினரைத் தாக்கினர்.

சண்டைசெய்து கொண்டே குஜாஆவினர் புனித (ஹரம்) எல்லைக்குள் நுழைந்து விட்டனர். அப்போது பனூபக்ருக் கிளையினர், "நவ்ஃபலே! நாம் நிறுத்திக் கொள்வோம். நாம் ஹரம் எல்லைக்குள் நுழைந்து விட்டோம். உமது இறைவனைப் பயந்துகொள்! உமது இறைவனை பயந்துகொள்!'' என்று கூறினர். ஆனால், சதிகாரன் நவ்ஃபல் அதைச் செவிமடுக்காமல், மிகக் கடுமையான வார்த்தையைக் கூறினான். "பக்ரு இனத்தாரே! இன்றைய தினம் எந்த இறைவனும் இல்லை. உங்களது பழியைத் தீர்த்துக் கொள்ளுங்கள். என்மீது சத்தியமாக! ஹரம் எல்லையில் திருடும் நீங்கள் அதில் ஏன் கொலை செய்யக் கூடாது?'' என்றான். கொல்லப் பட்டவர்களைத் தவிர்த்து, எஞ்சிய குஜாஆவினர் புதைல் இப்னு வரகா மற்றும் ராபிஃ ஆகிய தங்களின் நண்பர்கள் வீட்டில் சென்று அடைக்கலம் புகுந்து கொண்டனர்.

ஹுதைபிய்யா உடன்படிக்கையை மக்கத்துக் குரைஷிகள் மீறி, தங்களைக் கொன்றொழிக்க வந்ததை, குஜாஆக் குலத்தைச் சேர்ந்த அம்ரு இபுனு ஸாலிம் மதீனாவுக்குச் சென்று நபியவர்களிடம் கவிதையாகப் பாடினார்:
இறைவா! நான் முஹம்மதிடம் எங்கள் உடன்படிக்கையையும்
அவர் தந்தையின் பழமையான உடன்படிக்கையையும்
கேட்டு வந்திருக்கின்றேன். நீங்கள் பிள்ளைகள்;
நாங்கள் பெற்றோர்கள்; பின்னரே முஸ்லிமானோம்.
பின்வாங்கவில்லை. முழுமையாக உதவுங்கள்!
அல்லாஹ் உமக்கு வழிகாட்டுவான்.
அல்லாஹ்வின் அடியார்களை அழை;
உதவிக்கு அவர்களும் வருவார்கள்
அவர்களில் ஆயுதம் ஏந்திய அல்லாஹ்வின்
தூதரும் இருக்கின்றார். அவர் வானில் நீந்தும்
முழு நிலா போல் அழகுள்ளவர்.
அவருக்கு அநீதமிழைத்தால் முகம் மாறிவிடுவார்.
நுரை தள்ளும் கடல்போன்ற படையுடன் வருவார்
குறைஷிகள் உன் வாக்கு மாறினர்.
உன் வலுவான உடன்படிக்கையை முறித்து விட்டனர்.
'கதா'வில் எனக்குப் பதுங்குக் குழி வைத்துள்ளனர்.
ஒருவரையும் உதவிக்கு அழையேன்
என நினைத்துக் கொண்டனர். அவர்கள் அற்பர்கள்
சிறுபான்மையினர் வதீல் இரவு எங்களைத் தாக்கினர்.
நாங்கள் இறைவனைப் பணிந்து குனிந்து வணங்கிய போது
எங்களை அவர்கள் வெட்டினர்.

மக்கத்துக் குரைஷியரால் ஹுதைபிய்யா உடன்படிக்கை மீறப்பட்ட பின்னரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்கத்துக் குரைஷியருக்கு மூன்று கூறுகளைத் தேர்வுக்காக முன் வைத்தார்கள்:
1. வலியச் சென்று சண்டையைத் துவக்கிய பனூ பக்ரு குலத்தாரை உடன்படிக்கையிலிருந்து நீக்குவது
2. மக்கத்துக் குரைஷியரும் பனூ பக்ருவினரும் சேர்ந்து கொண்டு கொலை செய்த குஜாஆவினருக்காக நஷ்ட ஈடு வழங்குவது.
3. ஹுதைபிய்யா உடன்படிக்கையை முற்றாக முறித்துக் கொள்வது.


அடுத்த மாதமே, அதாவது ஹிஜ்ரீ எட்டாம் ஆண்டு, ரமளான் (9வது) மாதம் பத்தாம் நாளில் பத்தாயிரம் தோழர்களுடன் மதீனாவிலிருந்து நபியவர்கள் புறப்பட்டு மக்காவை அடைந்தபோது நபியவர்கள் பிறந்த மண், தன்னை முழுமையாக அவர்களிடம் ஒப்படைத்தது. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர், தன்னை ஊரைவிட்டு விரட்டியடித்தவர்கள் அன்று வெருண்டோடி ஒளிந்து கொள்வதை நபியவர்கள் கண்டனர் [சுட்டி-17]. அதற்குப் பின்னரும் - மக்கா வெற்றி கொள்ளப் பட்டு, உடன்படிக்கை என்பது செல்லாமல்/இல்லாமல் ஆகிவிட்ட பிறகும் - அவ்வாறு நபியவர்கள் அறிவிக்கவில்லை என்பது வரலாற்று ஆசிரியர்களின் உச்ச கட்ட வியப்பாகும்!

மக்கா வெற்றி கொள்ளப் பட்டபோது, "குரைஷிக் கூட்டத்தினரே! நான் உங்களிடம் எவ்வாறு நடந்து கொள்வேன் என்று எதிர்பார்க்கின்றீர்கள்?" என்று நபியவர்கள் கேட்க, " நல்ல முறையில் நடந்து கொள்வீர்கள். நீங்கள் எங்களின் சிறந்த சகோதரரும் எங்களுள் சிறந்த சகோதரரின் மகனுமாவீர்கள்" என்று குரைஷியர் கூறினர். "இன்றைய தினம் உங்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு" என்று அறிவித்து, தனது பெருந்தன்மையை வெளிப்படுத்தி, மனிதாபிமானத்தை நிலைநிறுத்தினார் எம் தலைவர் [சுட்டி-18].
***
அரைகுறை-2இல் குறிப்பிடப் பட்டுள்ள கீழ்க்காணும் வசனங்கள் ஹிஜ்ரீ ஒன்பதாவது ஆண்டில் அருளப் பெற்றன:
அல்லாஹ்வும் அவனின் தூதரும் இணைவைப்பவர்கள்(உடன் செய்திருந்த உடன்படிக்கை)ஐ விட்டும் முற்றிலும் விலகி விட்டனர் என்பதை இந்த மாபெரும் ஹஜ் நாளில் மக்களுக்கு அல்லாஹ்வும் அவனின் தூதரும் அறிவிக்கின்றனர். (இணைவைப்பாளர்களே!) நீங்கள் திருந்திக் கொள்வீர்களாயின் அஃது உங்களுக்குச் சிறப்பைத் தரும். மறுதலிப்பீர்களாயின், அறிந்து கொள்வீர்! அல்லாஹ்வை நீங்கள் வெல்ல முடியாது. (நபியே!) வலிமிகு வேதனையைப் பற்றி இறைமறுப்பாளர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக!
நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்ட இணைவைப்போருள் உடன்படிக்கைக்கு ஊறு செய்யாமலும் உங்களுக்கு எதிரானவர்களுக்கு உதவி செய்யாமலும் இருப்பவர்களுடன் அவ்வுடன்படிக்கையை அதன் காலக் கெடுவரை முழுமைப் படுத்துங்கள். அல்லாஹ், தன்னை அஞ்சி வாழ்வோரிடம் அன்பு செலுத்துகிறான் [அல் குர்ஆன் 009:003-004].
And an announcement from Allah and His Messenger, to the people (assembled) on the day of the Great Pilgrimage,- that Allah and His Messenger dissolve (treaty) obligations with the Pagans. If then, ye repent, it were best for you; but if ye turn away, know ye that ye cannot frustrate Allah. And proclaim a grievous penalty to those who reject Faith. (But the treaties are) not dissolved with those Pagans with whom ye have entered into alliance and who have not subsequently failed you in aught, nor aided any one against you. So fulfil your engagements with them to the end of their term: for Allah loveth the righteous [சுட்டி-19].
மேற்காணும் முழுமையான இறைவசனத்தில் இருப்பது என்ன வகை தக்கியா புக்கியா என்று சொல்லத் தெரியாமல் இந்த இடத்தில் கட்டுரையாளர் ஊமை வேஷம் போடுகிறார்.

- பிற அரைகுறைகள் முழுமையாக்கப்படும்வரை தொடரும், இன்ஷா அல்லாஹ்
ஃஃஃ

சுட்டிகள்:

ஞாயிறு, டிசம்பர் 20, 2009

புதுவகை நோய் : இமி - 1

கடந்த 29.11.2009 & 04.12.2009 திண்ணை இதழ்களில், "இஸ்லாமிய மரபில் எல்லாமே உலக மரபுகளுக்கும் உலக நல்லொழுக்கத்திற்கே நேர் எதிர்மறையாக உள்ளது" எனும் தவறான கருவோடு, 'புனித மோசடி-1' [சுட்டி-01 மற்றும்-2 சுட்டி-02] வெளியாகி இருந்ததைப் படிக்க நேர்ந்தது.

அக்கட்டுரைக்கான எதிர்வினை விளக்கங்களை வாசகர்களுக்குத் தருவதற்கு முன்னர், திசைதிருப்பும் அரைகுறைச் சான்றுகளோடு காழ்ப்பைக் கக்கும் தரமற்ற எழுத்துகளைப் பதிக்கும் திண்ணையின் அண்மைப் போக்கைப் பற்றிய எனது வருத்தங்களையும் இங்குப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

அக்கட்டுரையில் காணப்படும் கருவுக்குத் தொடர்பில்லாத
01. உலகநாதர்,
02. வள்ளுவர்,
03. ஜெர்மனியின் கோயபல்ஸ்,
04. நாஸி ஹிட்லர்,
05. கம்யூனிஸ்ட்கள், இடதுசாரிகள், பொதுவுடைக்காரர்கள்
06. காந்திஜி,
07. முன்னேற்றம் அடைந்த/அடையாத கழகங்கள்,
08. வெங்காயம்,
09. நேரு, இந்திரா,
10. திராவிட நாடு,
11. முரட்டு தாதா,
12. தேபால், உபகணஸ்தான், கூபா, உதபந்தபுரா, லவகுசபுரா

ஆகியோர்/ஆகியன பற்றியெல்லாம் கட்டுரையாளருக்குத் தெரியும் எனக் காட்டிக் கொள்ள மட்டுமே எழுதப் பட்டிருக்கிறது; இங்குப் பேசுபொருளுக்கு மீக்குறியவை அப்பாற் பட்டவை என நான் கருதுவதால், இஸ்லாம் குறித்து அவர் எடுத்து வைத்த,
"குரான் Qur'an, ஹடித்-சுன்னா ( Hadith & Sunna -- Traditions) அல்லது சிரா (Sira) (biographies) அடிப்படையில் பொய் பேசலாம்; சத்தியம் செய்யலாம்; பிற மதத்தவரிடம் எந்தக் காலத்திலும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசலாம்; புனித(!) மோசடி (தகிய்யா) செய்யலாம்"
 

எனும் தலையாய குற்றச் சாட்டுகளுக்கு முன்வைக்கப் பட்ட அரைகுறைச் சான்றுகளை முழுதுமாக வாசகர்கள்முன் வைக்க விரும்புகிறேன். 

அரைகுறை-1: (குரான் சுரா: 8:39: எதிர்ப்பு நீங்கி, உலகில் எல்லாமே அல்லாவுக்கென்று ஆகும் வரை போர் புரியுங்கள்).

இஸ்லாத்தின் உயிர்நாடியான "கடவுள் இல்லை - அல்லாஹ்வைத் தவிர" என்பதில் பாதியை மட்டும் சான்று என யாராவது முன்வைத்தால், இஸ்லாம் என்பது நாத்திகத்தைக் கொள்கையாகக் கொண்ட ஒரு மதம் என்றுதான் எவரும் விளங்குவர். அதுபோலவே குர்ஆன் கூறுவதைப் பாதியாக்கி இருக்கிறார் கட்டுரையாளர். "பிற மதத்தவரைக் கொன்று குவிக்கும்படி இஸ்லாம் சொல்கிறது" என்ற புனைவை நிறுவச் செய்யும் திருகுதாளமாகும் அவரது முயற்சி.  

பிற மதத்தவர் குறித்துக் குர்ஆன் கூறுவதென்ன?  
"(நபியே) கூறுவீராக! : இறை மறுப்பாளர்களே!
நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்க மாட்டேன்;
நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவரல்லர்.
மேலும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபனல்லன்;
அன்றியும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவரல்லர்.
உங்களுக்கு உங்கள் மதம்; எனக்கு என் மார்க்கம்" [குர்ஆன் 109:001-006].
"Say : O ye that reject Faith!  
I worship not that which ye worship,  
Nor will ye worship that which I worship.  
And I will not worship that which ye have been wont to worship,  
Nor will ye worship that which I worship.  
To you be your Way, and to me mine. [சுட்டி-03]. 
"மேலும் உம் இறைவன் நாடியிருப்பின் இப்பூவுலகின் மாந்தர் அனைவரும் இறைநம்பிக்கை கொண்டிருப்பர். எனவே, எல்லாரும் இறைநம்பிக்கையாளராக ஆகிவிடவேண்டும் என அவர்களை நீர் வலுக்கட்டாயப் படுத்த முடியுமா என்ன?" [குர்ஆன் 010:099]. "If it had been thy Lord's will, they would all have believed,- all who are on earth! wilt thou then compel mankind, against their will, to believe!" [சுட்டி-04] .
 

"(நபியே!) இணைவைப்பாளர்களுள் எவர் உம்மிடம் புகலிடம் தேடி வந்தாலும் அவருக்குப் புகலிடம் அளிக்கவும். அதனால், அல்லாஹ்வுடைய சான்றுமிகு வசனங்களை அவர் செவியேற்கலாம்.  பின்னர், அவருக்குப் பாதுகாப்புக் கிடைக்கும் இடத்துக்கு அவரை அனுப்பி விடுவீராக! ஏனெனில் அம்மக்கள் அறியாச் சமூகத்தவராவர்" [குர்ஆன் 009:006]. "If one amongst the Pagans ask thee for asylum, grant it to him, so that he may hear the word of Allah; and then escort him to where he can be secure. That is because they are men without knowledge. [சுட்டி-05].
 

"(இஸ்லாம்) மார்க்கத்தில் (இணைவதில்) வலுக்கட்டாயம் என்பது இல்லை ..." [குர்ஆன் 002:256] "Let there be no compulsion in religion ..." [சுட்டி-06]. 
இத்துணைத் தெளிவான நல்லிணக்க இறைவசனங்களைக் கூறும் குர்ஆன், "பிற மதத்தவர் எவராயினும் கொல்லுங்கள்" எனக் கூறுவதாகப் பித்தலாட்டம் செய்யலாமா? 

அரைகுறை-1இல் காணப்பட்ட முழு வசனம்:
"(இறைநம்பிக்கையாளர்களே!) தொடர் தாக்குதல்களும் அடக்குமுறையும் ஒழிக்கப் பட்டு, நீதி நிலைநாட்டப் படும்வரை, இறைநம்பிக்கை முற்றிலும் அல்லாஹ்வுக்கென்று ஆகும்வரை அவர்களுடன் போர் புரியுங்கள். அவர்கள் விலகிக் கொண்டால் (விட்டு விடுங்கள். ஏனெனில்,) அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் உற்று நோக்குபவன் ஆவான். அவர்கள் (தாக்குதலை நிறுத்த) மறுதலித்தால், (எதிர்த் தாக்குதல் புரியுங்கள்). அல்லாஹ் உங்களின் திண்ணமான பாதுகாவலன் என்பதை அறிந்து கொள்ளுங்கள் ..." [குர்ஆன் 008:039-040].
"And fight them on until there is no more tumult or oppression, and there prevail justice and faith in Allah altogether and everywhere; but if they cease, verily Allah doth see all that they do. If they refuse, be sure that Allah is your Protector ..." [சுட்டி-07]. 
மேற்காணும் வசனங்களில் அப்பாவிகள் எவரையும் கொல்லும்படி கட்டளை ஏதுமில்லை. முஸ்லிம்களை அழித்தொழிக்கப் போர் தொடுக்கும் பகைவரை எதிர்த்துப் போர் செய்வது பற்றிப் பேசப் படுகிறது. இந்த வசனங்கள் பேசும் எட்டாவது அத்தியாயத்தின் பெயரே "போர் வெற்றிப் பொருட்கள்"தான். அதை, அடுத்து வரும் வசனம் உறுதி செய்கிறது: 
 "(நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு(ப் போரில்) கிடைத்த வெற்றிப் பொருட்களில் ஐந்தில் ஒன்று (20%) அல்லாஹ்(வின் அறவழியில் செலவழிப்பதற்)கும் அவனின் தூதருக்கும் உறவினர்க்கும் அநாதைகளுக்கும் ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் உரியதாகும் ..." [குர்ஆன் 008:041]. "And know that out of all the booty that ye may acquire (in war), a fifth share is assigned to Allah,- and to the Messenger, and to near relatives, orphans, the needy, and the wayfarer ..." [சுட்டி-08]. 
*** 
ஹிஸ்டீரியா நோயாளிகள், பேயாடுவதாகச் சொல்லிக் கொண்டு, தங்களுக்கு உலக அரசியல் முதல் உள்ளூர் விவகாரம்வரை எல்லாமே அத்துப்படி என்று பிறரை நம்ப வைப்பதற்காக ஏதேதோ உளறிக் கொட்டுவார்கள். முக்காலமும் உணர்ந்தவர்களாகத் தங்களை எண்ணிக் கொண்டு "இவனுக்கு அது நடக்கும்; அவனுக்கு இது நடக்கும்" என்று குறி சொல்வார்கள். பாமரப் பேயாடிகள்கூட பல பாஷைகள் பேசுவர். எனக்குத் தெரிந்த ஒரு ஹிஸ்டீரியா நோயாளிப் பெண் அதுபோல் ஒருமுறை பேய்(!) வந்து உளற, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்தில், மூன்று மாத விஸிட்டிங் விசாவில் மலேஷியாவுக்குப் போய்விட்டுத் திரும்பி வந்திருந்த ஒருவர் சொன்னார் : "பேய் மலாய் பாஷை சூப்பராப் பேசுது!" 

 
திண்ணையில் 'புனிதமோசடி'யைப் படித்தபோது எனக்கு அந்தப் பெண் பேயாடிதான் நினைவுக்கு வந்தார்.

 
பார்ப்பதற்குக் கலர் நன்றாக இருப்பதாக நினத்துக் கொண்டு, காவி கலந்த உணவைக் கண்ட இடத்தில் தின்று விட்டு, அதனால் ஏறிய பித்தம், வாந்தி, மயக்கம், அத்தோடு ஹிஸ்டீரியாப் பேயாட்டம் போன்ற கலவைகள் அனைத்துக்கும் சேர்த்து ஆங்கிலத்தில் ஒரு பெயர் கூறுகின்றனர்: "இஸ்லாமோஃபோபியா". தமிழில் "இஸ்லாமிய மிரட்சி".  தற்போது தமிழகத்தில் பரவுகின்ற புதுவகை நோய்.

சுருக்கமாக இமி்.

அதைத்தான் தலைப்பில் படித்தீர்கள். 

- தொடரும், இன்ஷா அல்லாஹ்.

ஃஃஃ
சுட்டிகள்:
சுட்டி - 01 http://www.thinnai.com/?module=displaystory&story_id=20911296&format=html


சுட்டி - 02 http://www.thinnai.com/?module=displaystory&story_id=20912045&format=html


சுட்டி - 03 http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/quran/109.qmt.html


சுட்டி - 04 http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/quran/010.qmt.html#010.099


சுட்டி - 05 http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/quran/009.qmt.html#009.006


சுட்டி - 06 http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/quran/002.qmt.html#002.256


சுட்டி - 07 http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/quran/008.qmt.html#008.039


சுட்டி - 08 http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/quran/008.qmt.html#008.041

சனி, அக்டோபர் 17, 2009

அறிவியலும் அரையவியலும் - 3

கடந்த 9 அக்டோபர் 2009 திண்ணை இதழில் அப்துல் அஸீஸ் எனும் பெயரில் எழுதுபவர், "அவை ஒவ்வொன்றும் தனக்கு வரையறை செய்யப்பட்ட வழியில் நீந்திச் சொன்று கொண்டிருக்கின்றன [021:033] என்று இவர் குறிப்பிடும் இடத்தில் தெளிவாக தரையும் அப்படியே சூரியனை சுற்றி வருகிறது என்று எழுதியிருக்கிறதா என்று படித்து சொல்ல வேண்டுகிறேன்" என்று திண்ணை ஆசிரியரை (அன்புள்ள ஆசிரியருக்கு) வேண்டியிருந்தார்.
முதல் மடலில், "உலகம்" என்றும் "பூமி" என்றும் எழுதியவர் இப்போது "தரை"க்கு இறங்கி விட்டார். தரை என்பது நீர் உட்பட எதுவுமில்லா நிலத்தைக் குறிக்கும் சொல்லாகும். பூமியின் மூன்றில் இரண்டு பங்கைச் சூழ்ந்திருக்கும் கடல், நமது "தரை"க்குத் தொடர்பற்றது போல் கட்டுரையாளர் குறிப்பிட்டிருப்பது வியப்பளிக்கிறது!

வானில்தான் சூரியனும் சந்திரனும் இருக்கின்றன என்பது, நிலவைக் காட்டி உணவூட்டும் தமிழ்த் தாயின் இடுப்பில் இருக்கின்ற குழந்தைக்கும் தெரிந்ததுதான். என்றாலும் அதைக் குர்ஆனின் சொற்களால் நிரூபிக்க வேண்டிய கட்டாயச் சூழல் எனக்கு. ஏனெனில், போகிற போக்கைப் பார்த்தால், "வானில்தான் சூரியனும் சந்திரனும் உள்ளது என்று குர்ஆனில் சொல்லப் பட்டிருக்கிறதா?" எனக் கட்டுரையாளர் அறிவுப்பூர்வமான கேள்வியைக் கேட்டு விடும் வாய்ப்பிருப்பதால்,
"ஏழு வானங்களையும் அல்லாஹ் எவ்வாறு அடுக்கடுக்காகப் படைத்திருக்கிறான் என்பதை நீங்கள் (சிந்தித்துப்) பார்க்கக் கூடாதா? அவற்றில் சந்திரனை வெளிச்சமாகவும் சூரியனை ஒளிவிளக்காகவும் அமைத்தவன் அவனே!" [071:015,016] Allah has created the seven heavens in tiers and has made the moon a light therein, and made the sun a lamp meaning, He made a distinction between them (the sun and moon) in reference to their lighting. He made each one of them in a set manner with a distinct quality so that the night and day may be known. They (the night and day) are known by the rising and setting of the sun. He also determined fixed stations and positions for the moon, and He made its light vary so that sometimes it increases until it reaches a maximum, then it begins to decrease until it is completely veiled. This shows the passing of months and years.
என்று குர்ஆன் தெளிவாகக் கூறுவதை உறுதி செய்வது எனது கடமையானது.

அடுத்து,

"வானில் இருக்கும் சூரியன்-சந்திரனோடு வானுக்குச் சம்பந்தம் இல்லாத பூமியைக் 'கொண்டுபோய்' சேர்த்துச் சொல்வது சரியாகுமா?" என்பது கட்டுரையாளரது முக்கிய ஆட்சேபணையாகும்.
"திண்ணமாக, வானங்கள்-பூமி ஆகிய அவ்விரண்டும் விலகி விடாதவாறு அல்லாஹ்தான் தடுத்து வைத்திருக்கிறான்.  அவை இரண்டும் விலகுமாயின் அவை இரண்டையும் தடுத்து நிறுத்த அவனையன்றி எவராலும் முடியாது ..." [035:041] Verily, Allah grasps the heavens and the earth lest they should move away from their places, and if they were to move away from their places, there is not one that could grasp them after Him.
மேற்காணும் இறைவசனத்தில் அரபு மொழியின் சிறப்பு எண்ணான இருமை تَزُولاَ  ஆளப் பட்டுள்ளது ஈண்டு நோக்கத் தக்கது.

ஏனெனில், எனது முதல் எதிர்வினையில் எடுத்துக் காட்டாகக் குறிக்கப் பட்டதும் கட்டுரையாளரின் மறுப்புக்குரியதுமான, "...அவை ஒவ்வொன்றும் தனக்கு வரையறை செய்யப்பட்ட வழியில் நீந்திச் சொன்று கொண்டிருக்கின்றன" எனும் 021:033 இறைவசனத்தில் சூரியன் - சந்திரன் ஆகிய இரண்டையும் குறிக்க இருமைச்சொல் ஆளப்படவில்லை என்பதும் "ஒவ்வொன்றும்/எல்லாமும்" எனப் பன்மைச் சொல் كُلٌّ பயன் படுத்தப்பட்டுள்ளதும் கட்டுரையாளர் விளங்க வேண்டிய கட்டாயக் கருவாகும்.

அந்த வசனத்தில் ஏன் இருமை ஆளப்படவில்லை? எனும் வினாவுக்கு விடை, அந்த இறைவசனத்தில் இருமைக்கு மேற்பட்டவை இடம் பெறுகின்றன என்பதுதான். அந்த வசனம் முழுமையாக :
"அவன் தான் இரவையும் பகலையும் சூரியனையும் சந்திரனையும் படைத்தான். அவை ஒவ்வொன்றும் தனக்கு வரையறை செய்யப் பட்ட வழியில் நீந்திச் சொன்று கொண்டிருக்கின்றன" [021:033] And He it is Who has created the night and the day, and the sun and the moon, each in an orbit floating.
மேற்காணும் இறைவசனத்தில் உள்ள இரவு-பகல் என்பன பூமிக்குச் சொந்தமானவை. இரவு-பகல் மாறி வரும் பூமியும் வானங்களும் பால்வளிப் பயணத்தின் சகபயணிகள் என்பதை இதைவிடத் தெளிவாகச் சொல்லவும் வேண்டுமோ?

கட்டுரையாளரின் கருத்துப்படி சூரியன்-சந்திரன் இரண்டும் பூமியை அம்போ என்று விட்டுவிட்டு நீந்திச் சென்று கொண்டிருக்கின்றன எனக் கொண்டால் ... பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம், சூரிய ஒளியின்றி இருளில் மூழ்கி எப்போதோ செத்திருப்போம்.

மேற்காணும் விளக்கங்கள் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதல்ல. தலைக்குள் இருப்பதைப் பயன் படுத்தும் எவருக்கும் எளிதாக விளங்கக் கூடியவைதாம் - அதுவும் கட்டுரையாளரின் கூற்றுப்படி, "700 ஆண்டுகளுக்கு முன்னர் சரியாக எழுதி வைத்த இமாம் இபுனு கஸீர்" விளக்குவதால்.

மறுப்புகள் தொடரும், (இன்ஷா அல்லாஹ்).
ஃஃஃ
திண்ணை குறிப்பு:
இந்த விவாதம் இத்துடன் முற்றுப்பெறுகிறது.