வெள்ளி, ஏப்ரல் 21, 2006

எதிர்மறைகள்

சென்ற வாரத் திண்ணையில் ஒரு வித்தையைக் காண நேர்ந்தது. 'தவ்ஹீது பிராமணீயம்' என்ற மொட்டைத் தலையில் சடை பிண்ணி அதை முழங்காலுக்கு முடிச்சுப் போட முயன்றதை வெறும் வித்தை என்று கூறுவதைவிட 'கண்கட்டு வித்தை' என்றே கூறலாம். 

கட்டுகளை அவிழ்ப்பதற்கு முன்னர் இங்கு ஆளப்படும் சில கலைச் சொற்களைச் சொல்லி விடுவது நல்லது:
வஹ்ஹாப்=இறைவன்/அல்லாஹ், 
வஹ்ஹாபிஸம்=வஹ்ஹாபினால் வழங்கப் பட்ட வாழ்க்கைநெறி/இஸ்லாம், 
வஹ்ஹாபி=வஹ்ஹாபிஸத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டவர் /வஹ்ஹாபைச் சார்ந்தவர்/முஸ்லிம்.

வித்தையில் அவிழ்த்து விடப் பட்ட சொற்களை இங்கு எடுத்தாள வேண்டியிருப்பதால், பிராமணர்களின் சுட்டு விரல் என்னை நோக்கி நீளாது என்ற நம்பிக்கையோடு, மறுக்க முடியாத ஒப்பீடுகள் - சான்றுகளுடன்:

ஒவ்வொன்றாகப் பார்ப்போமெனினும் பிராமணீயம் என்று சொன்னவுடனே முதலாவதாக நினைவுக்கு வருவது புரோகிதம்தான்.  

1. புரோகிதம் இஸ்லாமிய மார்க்க மேதைகளுள் நால்வரான இமாம்கள் மாலிக், அபூ ஹனீஃபா, ஷாபியீ மற்றும் இபுனு ஹன்பல் ஆகியோரின் பெயரை மட்டும் பயன் படுத்திக் கொண்டு, இஸ்லாத்துக்கு எதிரான (இம்ரானா) தீர்ப்புகளைக் கூறி மக்களை மடையர்களாக்கும் முல்லாப் புரோகிதர்கள், சமாதிகளைக் காட்டிச் சுரண்டிப் பிழைக்கும் 'சாபு'ப் புரோகிதர்கள், ஒரேயொரு நேர்வழியான இஸ்லாத்தைப் பலவாறு துண்டிக்கத் துடிக்கும் எழுத்துப் புரோகிதர்கள் ஆகிய அத்தனைப் புரோகிதர்களுக்கும் எதிராக உரத்துக் குரல் கொடுப்பது வஹ்ஹாபிஸம் மட்டுமே.

முந்நூறுக்கும் மேற்பட்ட சிலைகளை இறையில்லமான கஃபாவைச் சுற்றிலும் வைத்து நடந்து கொண்டிருந்த புரோகிதத்துக்குச் சாவு மணி அடித்ததுதான் வஹ்ஹாபிகளின் தலைவர் முஹம்மது நபி அவர்கள் செய்த அறப்பணிகளுள் தலையாயது. 

அந்தப் பழைய புரோகிதர்கள் தங்கள் தொழிலுக்குச் சொன்னக் காரணம்: "...அல்லாஹ்விடம் எங்களை அண்மித்து வைப்பர் என்பதற்காகவே இவர்களை நாங்கள் வழிபடுகிறோம் ..." [039:003]. மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையே பாலமாக இருப்பவர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளும் தற்காலப் புரோகிதர்கள் தமிழகத்தில் அதிகமாகப் புழங்குவது 'பண்பாட்டு மரபியல்' என்று முன்,பின்,அதி,நவீனத்துவ அறிவுசீவிகளால் தூக்கி நிறுத்த முயலும் சமாதி வழிபாடு நடக்கும் தர்ஹாக்களில்தான்.

"எனக்கும் என் அடியானுக்கும் இடையில் யாரும் புரோகிதம் செய்யத் தேவையில்லை" என்று வஹ்ஹாப் தன் மறையில் அறிவுறுத்துகிறான் [002:186].  

2. வர்க்க பேதம் முழு மனுக்குலமும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் [004:001] என்றும் வஹ்ஹாபிஸத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட எல்லா முஸ்லிம்களும் சகோதரர்களே [049:010] என்றும் வஹ்ஹாப் வரையறுத்துக் கூறி விட்டான். 

அடுத்து, "மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; (உங்களது தந்தையும் ஒருவரே!) அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஓர் அரபிக்கும் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஓர் அரபி அல்லாதவருக்கும் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் கருப்பரை விடவோ, எந்த ஒரு கருப்பருக்கும் வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்" என்று வஹ்ஹாபிகளின் தலைவரும் வர்க்க பேதத்தைத் தம் காலடியில் போட்டு மூடி விட்டார். 

திரு. கொடிக்கால் செல்லப்பா (இன்று கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ்) என்ற மூதறிஞர் தனது சொந்த வாழ்க்கைச் சுவடுகளின் அடிப்படையில் கன்னியாகுமரி - விவேகானந்தா கேந்திரத்தில் 1986 அக்டோபர் 2இல் நடைபெற்ற 'தீண்டாமை ஒழிப்பில் காந்திஜீயின் பங்கு' என்ற கருத்தரங்கில் ஆற்றிய உரையின் சிறு பகுதி:
"இஸ்லாமியக் குடும்பத்தில் பங்கு பெறும் எல்லா மனிதர்களும் எந்த இனத்தை, எந்தக் குலத்தை, எந்த நாட்டைச் சார்ந்தவரானாலும் முழுக்க முழுக்க சமமான உரிமைகளுடன் பங்கு பெற முடியும். அவ்வாறு பங்கு பெற்றுச் சிறப்புடன் வாழ்ந்து வருகின்றனர்.அங்கே இன பேதமில்லை; நிற பேதமில்லை; புதிதாக வந்தவர்கள் என்ற அடைமொழி எதுவும் இல்லை. இஸ்லாத்தில் இணைந்து விட்டார்கள் என்றால் அங்கே இரண்டறக் கலந்துவிடுகின்ற நிலையே ஏற்பட்டு விடுகின்றது. கடலிலே நதிகள் கலந்துவிட்ட பின்பு, அங்கே நதிகள் என்று பிரித்து பார்க்க முடிவதில்லை. நதி கடலாகி விடுகிறது. இதுவே, இஸ்லாத்தில் இணைகின்றவர்களின் நிலை."  

3. வேதம் ஓதுதல் "ஓதுவீர்!" என்ற முதல் சொல்லோடு அருளப் பட்ட வேதம் [096:001] உலகிலேயே வஹ்ஹாபிகளின் வேதம் மட்டுமே. "முழு மனுக்குலமும் ஓதி உணர வேண்டியது" என்று பல இடங்களில் [002:185], [047:24], [054:17], [081:027] தன்னுடைய வேதத்தை வஹ்ஹாப் பொதுவில் வைக்கிறான்.  

4. தன்னை உயர்த்திப் பிறரைத் தாழ்த்துதல் தன்னைத் தானே உயர்த்திக் கொண்டு தம்பட்டம் அடிப்பதற்கு வஹ்ஹாபிகளுக்குத் தடையிருப்பது [053:32] போலவே பிறரைப் பற்றி இல்லாத குறை கூறித் திரிவதைப் பற்றியும் [104:001] தடையிருக்கிறது.  

5. மதிக்கப் படுதல் வட்டிச் சுரண்டல், வரதட்சணைக் கொடுமை, சமாதிகளைக் காட்டி நடக்கும் வழிப்பறிக் கொள்ளை, இஸ்லாத்தில் இடையில் புகுத்தப் பட்டப் பொல்லாப் புதுமைகள், மன்னிப்பில்லாப் பாவமான இறைவனுக்கு இணை கற்பித்தல் ஆகிய வன் கொடுமைகளை எதிர்த்துக் குரல் கொடுத்ததற்காகத் தொழ முடியாமல் தடுக்கப் பட்டவர்கள், அடி-உதைகளைப் பரிசாகப் பெற்றவர்கள், ஊர் விலக்கம் செய்யப் பட்டவர்கள், பொய் வழக்குகளால் சிறை வைக்கப் பட்டவர்கள் இன்னும் எத்தனையோ இன்னல்களை ஏற்றுக் கொண்டவர்கள் வஹ்ஹாபிகள். 
இது போன்ற எவ்வளவோ எதிர்மறைகள் பிராமணீயத்துக்கும் வஹ்ஹாபிஸத்துக்கும் உள்ளன என்பதுதான் யதார்த்தம். இவற்றையெல்லாம் அறியாமல், இரண்டும் ஒன்றுதான் என்று 'கண்கட்டு வித்தை' காட்டுகிற கட்டுரை இடம் பெற்ற திண்ணையின் அதே இதழிலேயே வித்தைக் காரரின் 'தேவதைகளின் சொந்தக் குழந்தை' விமர்சனக் கூட்டத்தில் நடந்தவை தொகுக்கப் பட்டு வெளியாகி இருந்தன. 

அதில் கட்டுரையாளரின் எழுத்தைக் குறித்து யூசுப் என்பார் கூறுகிறார் "எதார்த்தம் தவறுதல் என்பது மனநிலை பிறழ்வேயாகும்".
ஃஃஃ
எடுத்தாளப் பட்டச் சுட்டிகள்:

வெள்ளி, ஏப்ரல் 14, 2006

மீண்டும் வெளிச்சம்

அல்குர்ஆன் என்ற இறைவேதம், அரபியருக்கோ ஏனைய முஸ்லிம்களுக்கோ மட்டுமான தனிச் சொத்தன்று (081:027) என்பதைக்கூட அறியாமல், "முஸ்லிம்களின் அல்குர்ஆன் அரபுமொழி சார்ந்தது" என்று எழுதித் தம் அறியாமையை வெளிச்சம் போட்டுக் காட்டுதல் சூபிக்குத் தேவைதானா?

மேற்காண்பது திண்ணையின் 30 மார்ச் 2006 பதிப்பில் வெளியான எனது கடிதத்தின் ஒரு சொற்றொடர்.

"அல்குர்ஆன் அரபு மொழி சார்ந்தது இல்லை என்று கூறி எவ்வளவு அப்பட்டமாக வாசகர்களை வகாபி குழப்பப் பார்க்கிறார்." இது சூபியின் குற்றச்சாட்டு

"இந்தக் குர் ஆனை அரபு மொழியில் அருளியிருக்கிறோம் - நீங்கள் நல்லறிவு பெறுவதற்காக" - இது அல் குர் ஆன் 012:002.
இலண்டன் ரெவரெண்ட் பாதிரியார் வீட்டுப் பிள்ளை மர்மட்யூக் பிக்தால் என்பாருக்கு அரபு மொழிப் பயிற்றுவிக்கப் பட்டது. எதற்காக? குர் ஆனைக் குறை காண வேண்டும் என்பதற்காக! குர் ஆனில் பிழை தேடப் புகுந்த அவர்தாம், பின்னாளில் இஸ்லாத்தைத் தழுவியதோடு மட்டுமின்றி குர் ஆனுக்கு ஆங்கிலத்தில் விரிவுரையும் எழுதினார் என்பது பலருக்கும் தெரியும். 

சூபி எழுதியிருப்பதுபோல், அல்குர்ஆன் அரபு மொழி 'சார்ந்தது' (?) இல்லை; வஹ்ஹாபின் வார்த்தைகள் 'தெளிவான அரபு மொழி'யில் அருளப் பெற்றவைதாம் என்பது 'சூரியன்' நக்கீரன் வரைக்கும் தெரிந்த வெள்ளிடை மலை செய்தியாகும். நான் சூபியை இடைமறித்தது "முஸ்லிம்களின் அல்குர் ஆன்" என்று அவர் குறிப்பிட்டதைத்தான். அதற்காகத்தான் 081:027 வசனத்தையும் சான்றாக வைத்திருந்தேன்.

குர் ஆனை மேற்கோள் காட்டினாலே சூபிகளுக்கு மிரட்சி ஏற்பட்டு விடும். அதற்காக சொல்ல வேண்டியதைச் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லாமல் விட முடியுமோ? "... இது மிகத் தெளிவான அரபு மொழியில் (அருளப் பெற்று) உள்ளது" 016:103. ஒரு கருப் பொருள் குறித்த முழு அறிவும் அடிப்படை அறிவும் யாவை என்பதற்கு ஓர் உவமையைப் பார்ப்போமா?

'தமிழில் எழுதுதல்' என்ற ஒரு கருவுக்குத் தமிழின் உயிர் எழுத்துகள் 12ஐயும் மெய் எழுத்துகள் 18ஐயும் உயிர்மெய் 216ஐயும் ஆய்தம் 1ஐயும் சேர்த்து 247 எழுத்துகள் பற்றிய 'முழு அறிவு' கட்டாயம் தேவை. தமிழைச் சீரிய முறையில் தெளிவாக எழுத, அடிப்படை அறிவுக்கு மேற்கொண்டு இலக்கணங்கள் தெரிந்திருக்க வேண்டும். சூபியைவிடச் சிறப்பாக எழுத அடிப்படை அறிவே போதும்.

காலத்திற்கேற்றவாறு வேதங்களில் அல்லாஹ்வால் ஏற்படுத்தப் பட்ட மாற்றங்களை, 'அல்லாஹ்வுக்கே முழு அறிவு இல்லை' என்றுக் கூற விழைதலைவிட அறியாமை ஏதுமுண்டா?.
 " ... இன்றைய நாளில் உங்களுடைய மார்க்கத்தை நிறைவு செய்து விட்டேன்; என்னுடைய அருட்கொடை (இறைமறை)யையும் முழுமையாக்கி விட்டேன்; உங்களுடைய வாழும் வழியாக இஸ்லாமை ஏற்றுக் கொண்டேன்." என்று அல்லாஹ் கூறுகிறான் [005:003].
'இன்றைய நாளில்', 'நிறைவு', 'முழுமை' ஆகிய சொற்கள் உணர்த்துவது யாதெனில், 'இதற்கு முன்னர் முழுமை பெற்றிருக்கவில்லை' என்பதைத்தான்.

இது, சூபியின் சுரியானி, பிரியாணி போன்ற புதுக் கண்டுபிடிப்பன்று. 1400 ஆண்டுகளுக்கு முன்னர் வஹ்ஹாபே கூறியவைதாம்.

ஹஜ்ஜின்போது பலி கொடுத்தல், முடி மழித்தல் ஆகிய அனைத்தும் அரபுவகைப் பட்டதல்ல என்று முன்பே நிறுவியிருக்கிறேன். ஏனெனில், அவையனைத்தும் அண்ணல் இபுராஹீம் நபி அவர்களின் வழிமுறை; அண்ணல் இபுராஹீம் அரபியரா? என்று கேட்டிருந்தேன். என் கேள்விக்கு பதில் தராமல் தன்னுடைய அறியாமையை மீண்டும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதில் சூபி உறுதியாயிருக்கிறார். அவருடைய உறுதியை எண்ணி வியக்காமலிருக்க முடியவில்லை!.

புதிதாக சூபி புகுத்தியிருப்பது 'இஸ்லாமிய ஆடை விதிகள்' (Dress Code) அரபுவகைப் பட்டன' என்பதாகும்.

உலகில் வாழும் முஸ்லிம்கள் எல்லாரும் அரபியரைப் போன்று உடையணிந்து திரிவதாகக் கனவு கண்டிருக்கிறார். கிருத்துவப் பாதிரியார்களும் கன்னிகளும்தாம் அரபியரைப் போன்று உடையணிகின்றனர். கிழித்துக் கொண்டு திரிவது சூபிகளின் வழக்கமென்பதால் முழுக்க அணிவது முட்டாள்தனமாகத் தெரிகிறது போலும்.

மாறுபட்ட மொழிகள் பேசுவோர் வாழும் நம் நாட்டுக்கான தேசியப் பாடலாக, வங்கக் கவிஞர் தாகூரின் 'ஜன கன மன'வை நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோம் - அது பிறந்த சூழலைக் கருத்திலெடுக்காமலேயே.

முஸ்லிம்களின் இறைவணக்கத்தில் குர் ஆனுடைய வசனங்கள் ஓதப் படுவதன் காரணம், அரபு வகைப் பட்டுப் போவதோ அல்லாஹ்வுக்கு அரபியைத் தவிர வேறு மொழி தெரியாது என்பதோ உலகில் சிறந்த மொழி அரபிதான் என்பதோவல்ல. 

1- "... தொழுகையில் குர்ஆனிலிருந்து உங்களுக்கு இயன்றதை ஓதிக் கொள்ளுங்கள் ..." [073:020] என்பது அல்லாஹ்வின் கட்டளை.

2- அல்லாஹ்வுடைய குர்ஆன் வசனங்கள் அரபு மொழியில் அருளப் பட்டவை - காரணம்,

3- குர்ஆனை உலக மாந்தருக்கு அறிமுகப் படுத்திய நபிகள் நாயகத்துக்கு அரபு மொழி மட்டும்தான் தெரியும்.

4- ஒருவருக்குத் தெரிந்த மொழியில் வேதம் அருளப்பட்டால்தான் மற்றவர்களுக்கு அதை எடுத்துச் சொல்ல முடியும்.

உலகளாவிய ஓர் இறைவணக்கம் என்பது ஒரு மொழியில்தான் இருக்க முடியும். நபிகள் நாயகம் தமிழகத்தில் பிறந்திருந்தால் குர் ஆன் தமிழில்தான் அருளப் பட்டிருக்கும். உலக முஸ்லிம்கள் தமிழ் மொழியில் தொழுகை நடத்திக் கொண்டிருப்பர். அப்போதும் சீனாவில் பிறந்த ஒரு பி-சூ மேதாவி, "சீன மொழியில் தொழுகை நடத்த தயாரா?" என்று வலையில் சவால் விட்டுக் கொண்டிருப்பார்.

அடுத்து,

"ஒரே நேரத்தில் நான்கு பேர் வரை திருமணம் செய்து கொள்ளலாம்" என்பது , 'காலங்கடந்த ஆணாதிக்க சிந்தனை'யன்று. மாறாக, வஹ்ஹாப் வஹ்ஹாபிகளுக்கு வழங்கியிருக்கும் அதிகளவில் வழக்கிலில்லாத அனுமதி - ஆம்; அனுமதிதான்; ஆணையன்று. கூடுதல் விபரங்களுக்கு:

1- பலதார மணம், பாவமா பரிகாரமா? - சுட்டுவிரல்

2- பலதார மணம் - இறைநேசன்

"நினைத்த நேரத்தில் முத்தலாக் சொல்லி பெண்ணை ஒடுக்குமுறை" செய்ய முடியாது. பாஸ்டன் பாலா அறிந்து வைத்திருப்பதைக்கூட அறியாத சூபியின் பார்வைக்கு: தலாக் ஒரு விளக்கம் - அபூ முஹை.

என்னுடைய சொத்தில் என் விருப்பத்திற்கு, நானே யாருக்கும் பங்கு கொடுக்க முடியாது. யாருக்கு எவ்வளவு என்று என் இறைவன் தன் மறையில் வகுத்திருக்கிறானோ அதன்படி அவரவர் எடுத்துக் கொள்வர் - நான் இறந்த பின்னர். அதில் சூபிக்குப் பங்கில்லை.

மேலும்,

தன் பிள்ளைகளின் அப்பன் பெயர் தெரியாத அம்மாப் பட்டியலை உள்ளடக்கிய 'பெண்ணிய இஸ்லாம்' போன்று இன்னும் எத்தனை இஸ்லாம்களை அறிமுகப் படுத்தினாலும் வஹ்ஹாபின் சட்டப்படி [003:019] இஸ்லாம் என்பது ஒன்றுதான் - ஒன்றே ஒன்று!

வெள்ளி, மார்ச் 31, 2006

மிரண்டுபோன சூபியின் முரண்டு

திண்ணையின் முஸ்லிம் வாசகர்களுக்குச் சென்ற வாரம் அடித்தது யோகம்!

பல இஸ்லாம்கள் அறிமுகப் படுத்தப் படுவது முஸ்லிம்களுக்கு யோகமில்லாமல் வேறென்ன? வெகுஜன இஸ்லாம் (Popular Islam) என்ற தலைப்பில் சூபி முகமது என்பார் சில புதிய இஸ்லாம்களை அறிமுகப் படுத்தியுள்ளார். அவற்றுள்: 

1- நிறுவன இஸ்லாம் (Institutional Islam)
2- வெகுஜன இஸ்லாம் (Popular Islam)
3- நாட்டார் இஸ்லாம் (Folk Islam)

ஆகியவை முக்கியமானவை.

அடுத்து, எச்.முஜீப் ரஹ்மான் என்பார், பின் நவீன இஸ்லாம் (POST MODERN ISLAM) என்ற தலைப்பில் தம் பங்குக்கு: 
1- மாற்று இஸ்லாம் (Alternetive Islam)
2- தாராளவாத இஸ்லாம் (Liberal Islam)
3- மதநீக்க இஸ்லாம் (Seculer Islam)

போன்ற இஸ்லாம்களை அறிமுகப் படுத்தி, இருவரும் ஒரே தொழில் செய்பவர்கள்தாம் என்பதை "இஸ்லாம்கள் வாங்கலியோ இஸ்லாம்கள்" என்று ஒரே குரலில் கூவி மெய்ப்படுத்தி இருக்கின்றனர்.

ஒன்று மட்டும் தெளிவு.

இரு கட்டுரைகளும் பொன்னீல எழுத்துகளால் பொறிக்கப் பட்டவைதாம் என்பதே அது. "ஒரு கருப்பொருளைப் பற்றிய சொல்லாடலுக்குள் புகுமுன் அதைப் பற்றிய முழு அறிவு இல்லாவிடினும் அது குறித்த அடிப்படை அறிவாவது கட்டாயம் இருக்க வேண்டும்" என்று வேறொருவருக்கு நான் எழுதியது சூபிக்கும் பொருந்தும். அல்குர்ஆன் என்ற இறைவேதம், அரபியருக்கோ ஏனைய முஸ்லிம்களுக்கோ மட்டுமான தனிச் சொத்தன்று (081:027) என்பதைக்கூட அறியாமல், "முஸ்லிம்களின் அல்குர்ஆன் அரபுமொழி சார்ந்தது" என்று எழுதித் தம் அறியாமையை வெளிச்சம் போட்டுக் காட்டுதல் சூபிக்குத் தேவைதானா?

வரலாற்றிலும் புகுந்து 'விளையாடுகிறார்' சூபி. ஹஜ்ஜின்போது நிறைவேற்றப் படும் கடமைச் செயற்பாடுகள் அனைத்தும் அண்ணல் இபுறாஹீம் மற்றும் அவர்தம் குடும்பத்தவரின் தியாகங்களை அடியொற்றி வந்தவை என்பது பிறமத நண்பர்களும் அறிந்து வைத்திருக்கும் அடிப்படை வரலாறாகும். அண்ணல் இபுறாஹீமும் அவர்தம் குடும்பத்தினரும் அரபியரா? 'சபை நடுவே நீட்டோலை வாசியா நின்றால்' உண்மை இப்படித்தான் சுடும்.

சரி, உண்டியலுக்கு வருவோம்.

இஸ்லாமிய ஆட்சி என்பது 'கிலாஃபத்' - பின்தோன்றல் முறைதான். பின்தோன்றுபவன் தமையானாகவோ தம்பியாகவோ மகனாகவோ பொதுமக்களுள் ஒருவனாகவோ இருக்கலாம். யாருக்குப் பிறந்தான்? என்று வஹ்ஹாபின் சித்தாந்தம் கேள்வி எழுப்பாது; மாறாக, வஹ்ஹாபின் அறிவுரையின்படி ஆட்சி நடக்கிறதா? என்றுதான் பார்க்கும். 

முஸ்லிம்கள் ஆள்வதால் அது இஸ்லாமிய ஆட்சி என்ற மூடநம்பிக்கைக்கு சூபி பலியாக வேண்டாம். ஹாஜிகளிடமிருந்து பெறப்படும் அன்னியச் செலவாணி, அவர்களுக்கு வசதிகளை அதிகப் படுத்திக் கொடுப்பதற்காகச் செலவு செய்யப் படுவதாக சவூதி அரசின் புள்ளி விபரங்கள் கூறுகின்றன; ஹஜ்ஜுக்குச் சென்று வருபவர்களும் கூறுகின்றனர். ஹஜ்ஜுக்கு அனுப்பும் நிறுவனங்கள், விமானப் போக்குவரத்து, தங்குமிடம், உணவு மற்றும் மருத்துவம் ஆகிய அனைத்திற்கும் பொறுப்பேற்கின்றனர்.

இவ்வாறுதான் தர்ஹா உண்டியலில் கொழுத்த சாபுகள், அவர்களின் பகற்கொள்ளையில் கிடைத்ததை 'பக்தர்'களுக்குச் செலவு செய்கிறார்களாக்கும்? மொட்டைத் தலைக்கும் முழங்கலுக்கும் முடிச்சுப் போட்டு சூபி அடித்த அடி, நாலு பக்கமும் தெறிக்க வில்லையே? 'நனைத்து அடித்தல்' இதுவல்ல என்று நாமும் நம்புவோம்.

***
இது நிற்க, சந்தடி சாக்கில், "முகமதியரின் மறைப் புத்தகத்தில் உள்ள வன்முறை உணர்வை விதைக்கக் கூடிய வாசகங்களை அவை எந்தக் காரணத்திற்காக இடம்பெற்றிருந்தாலும் அவற்றின் அவசியத்தைப் புரிந்துகொள்ளும் பக்குவம் இல்லாத இளஞ் சிறுவர்கள் பயிலும் மதரஸாக்களில் கற்பிக்கலாகாது என முடிவெடுக்க முகமதிய மார்க்க அறிஞர்கள் முன்வர வேண்டும்" என்று 'முகமதி'யர்களுக்கும்

"தமக்குக் கிட்டியுள்ள இசை ஞானத்தை 'சரஸ்வதி மா கீ தயா' (சரஸ்வதி அன்னையின் அருள்) என்று சொல்லும் திரை இசை இயக்குநர் நவ்ஷத்,

வாணியை மனதால் வணங்கிய பின்னரே பாடத் தொடங்குவதாகப் பல ஆண்டுகளுக்குமுன் பாபுராவ் பட்டேலின் மதர் இந்தியா பத்திரிகைக்குப் பகிரங்கமாகப் பேட்டி அளித்த ஹிந்தி பின்னணிப் பாடகர் தலத் மஹமத்,

காளிதேவியின் பூமிக்கு வந்து இசை நிகழ்ச்சியளிக்கும் அருள் கிடைத்ததால் தமது நிகழ்ச்சியினைக் காளிமாதாவின் பாத கமலங்களில் அர்ப்பணிப்பதாகக் கூறி மெய் சிலிர்க்க வைத்த சாஸ்த்ரிய சங்கீதப் பாடகர்களான அலி சகோதரர்கள்,

கங்கையைத் தம் மாதா எனக் கூறும் ஷெனாய் விற்பன்னர் பிஸ்மில்லாகான்,

இசையின் மூலம் இறைவனை வழிபடுவதாகக் கூறிய நூர்ஜஹான்

போன்றோரின் எண்ணிக்கை பெருகுவதற்கான வழிமுறைகளில் ஹிந்துக்களின் கவனம் செல்லவேண்டும்" என்று இந்துக்களுக்கும் பழம் பெறும் எழுத்தாளர் மலர் மன்னன் திண்ணையில் அறிவுரை கூறியிருந்தார்.

மட்டுமின்றி, மேற்காணும் முகமதியருக்கு இடுகாட்டில் இடம் கிடைக்காது என்றும் முகமதியர் பகிரங்கமாக அவ்வாறு அறிவித்துவிட்டு வெளியே நடமாட முடியுமா என்பதே சந்தேகம் என்றும் 'நடமாடிக் கொண்டிருப்பவர்களை'க் குறித்து ம.ம. கவலை தெரிவித்திருந்தார்.

ஒருவருடைய ஒரே கட்டுரைக்குள் ஒரே கருத்துக்குள் அவரே முரண்படுவதை விளக்கிக் கொண்டிருப்பது எனது நோக்கமில்லை. அதை, க.வி. பார்த்துக் கொள்ளட்டும். பின் நான் ஏன் அதை எடுத்தாள வேண்டும்? மேற்காணும் 'பெருங்கதையாடலில்' சூபிக்குச் சரக்கிருக்கிறது.

சங்கீத முகமதியரை ஒன்று திரட்டி, 'சங்கீத இஸ்லாம்' என்றும் பிரபல முகமதிய நடிகைகளான 'கற்பு புகழ்' குஷ்பு, நக்மா, மும்தாஜ் மற்றும் முகமதிய நடிகர்களான சல்மான்கான், ஷாருக்கான், ஆமிர்கான், அம்ஜத்கான் போன்றோரை வைத்து 'நட்சத்திர இஸ்லாம்' ஆகிய இஸ்லாம்களை அறிமுகப் படுத்தலாம்.

யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் கடை விரிக்கலாம். கொள்வார்.............?

நல்லவேளை, சூபிக்கான என்னுடைய முதல் கடிதம் இன்றுவரை திண்ணையில் படிக்கக் கிடைக்கிறது. இல்லையெனில் மிரண்டுபோய் பதட்டத்துடன் ஆத்திரத்தில் புலம்புவது யாரென்று வாசகர்களுக்கு அடையாளம் தெரியாமல் போய்விடும்.
ஃஃஃ

சனி, பிப்ரவரி 25, 2006

ஹெச். ஜி. ரஸூலின் மீள்பார்வை இலக்கு

ஹெச். ஜி. ரஸூலின் திண்ணை கட்டுரைக்கான எதிர்வினை-3

திண்ணையின் 12.01.2006 பதிப்பில் ஹெச். ஜி. ரஸூல் எழுதியிருந்த கட்டுரையின் மூன்றாவது பத்தியில், 'அறிவுநிலைப்பட்ட விவாதங்கள்' (அல்லது மீள்பார்வை அதாவது மறு பரிசீலனை) செய்யப்பட வேண்டிய நூற்றுக் கணக்கானவற்றில் 'மைய இஸ்லாத்தில் நிகழ்த்தப் படும்' (அல்லது ஹஜ் கடமையின்) போது முஸ்லிம்கள் (அல்லது வஹ்ஹாபிகள்) செய்யும் 'சடங்குகள்' (அல்லது கடமைச் செயற்பாடுகள்) சிலவற்றைப் பட்டியலிட்டுள்ளார்:

(1) ஸஃபா-மர்வா குன்றுகளிடையே ஸஃயுச் செய்தல் (2) மினாவில் ஜம்ராத்துக்குக் கல்லெறிதல் (3) கால்நடைகளை பலியிடுதல் (4) தலைமுடி மழித்தல் 'தமிழ் சூழல் சார்ந்த பண்பாட்டு இஸ்லாத்தின் உயிர்ப்புக் கூறுகள்' (வஹ்ஹாபிகளால்) விமர்சிக்கப் படுவதால், மேற்கண்பவற்றையும் 'அறிவுநிலைப்பட்ட விவாதங்கள்' செய்ய வேண்டுமென்ற காரணத்தை முன் வைத்திருக்கிறார்.

அஃதென்ன 'தமிழ் சூழல் சார்ந்த பண்பாட்டு இஸ்லாத்தின் உயிர்ப்புக் கூறுகள்'? என்று வாசகர்கள் அதிகம் குழம்ப வேண்டாம். வஹ்ஹாபிகளின் தலைவர் (அல்லது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் போதனைகளின்* அடிப்படையில் வஹ்ஹாபிகளால் கடுமையான விமர்சனத்துக்கும் எதிர்ப்புக்கும் உள்ளாகிக் களையிழந்து போன தர்ஹாக்கள் மற்றும் -அவற்றில் நடைபெறும் சமாதி வழிபாடுகள், சமாதிகளுக்காக நேர்ச்சை செய்தல், பலியிடுதல், மொட்டையடித்தல் -இல்லாத பேயை உற்பத்தி செய்தல், பேய் விரட்டும் பித்தலாட்டம் -கந்தூரி அனாச்சாரங்கள் -சமாதிகளின் பெயரால் தட்சணைக் கொள்ளை மற்றும் உண்டியல் சுரண்டல் -தர்ஹாக்களைச் சுற்றிலும் நடக்கும் பல்வகைக் கீழ்த்தொழில்கள் ஆகியன 'பண்பாட்டு உயிர்ப்புக் கூறுகள்' என்ற மேல்பூச்சுக்கு உள்ளேயுள்ளவற்றுள் சில.

இறுதி மூச்சு விட்டுக் கொண்டிருக்கும் அனாச்சாரங்களுக்குக் கட்டுரையாளர், "தர்கா கலாச்சாரம் சார்ந்த பெண்கள் திரளின் ஜாயாரத் வழிபாடுகள்" என்றும் "சூபிகள், சமயஞானிகளின் உறவிடங்களான தர்காக்கள் சார்ந்த மரபுவழிபண்பாட்டியல் நடவடிக்கைகள்" என்றெல்லாம் விளக்கம் சொல்லி உயிரூட்ட முயல்கிறார்.

ஹஜ்ஜில் நிறைவேற்றப் படும் கடமைச் சொயற்பாடுகளுக்கு இம்மடலின் இறுதியில் இஸ்லாத்தின் அடிப்படைகளான வஹ்ஹாபின் வார்த்தைகளையும் வஹ்ஹாபிகளின் தலைவருடைய வழிமுறையின் சான்றுகளையும் வரிசைப் படுத்தியிருக்கிறேன்.

என்னுடைய தெளிவான ஒரேயொரு கேள்வி என்னவெனில் 'தர்ஹாவுக்கும் இஸ்லாமுக்கும் என்ன தொடர்பு?' இறைமறை மற்றும் நபிவழிமுறையின் சான்றுகளை ஹெச். ஜி. ரஸூல் சொல்ல வேண்டும்.

மேலும், இறைவாக்கில் (அல்லது வஹ்ஹாபுடைய அறவுரையில்) அவருடைய பார்வையில் 'விசித்திரங்களாகத் தென்படுகின்ற' நிகழ்வுகளான: (அ) மூஸா நபியின் கைத்தடி பாம்பாக மாறியது [007:117] (ஆ) கடல் பிளந்து வழிவிட்டது [026:063] (இ) நெருப்புக் குண்டம் இபுராஹீம் நபிக்கு குளிர் பொய்கையாய் மாறியது [021:069] (ஈ) அப்ரஹாவின் யானைப் படைகளை (வஹ்ஹாப் அனுப்பிய) பறவைகள் பின்வாங்கச் செய்தது [105:001-005] ஆகியவற்றுக்கு 'அறிவுநிலைப்பட்ட விவாதம்' வேண்டும் என்று சொல்வதோடு நிறுத்திக் கொள்ளவில்லை; இறைவாக்கின் உருவாக்கம் (அல்லது வஹ்ஹாப் அனுப்பிய வஹீ) குறித்தும் 'வரலாறு சார்ந்த சமூகவியல் பார்வையும் மானுடவியல் அணுகுமுறைகளும்' அவசரமாகத் தேவைப் படுவதாகக் கூறி, தம் மீள்பார்வை இலக்கு (அதாவது மறுபரிசீலனை செய்யப்பட வேண்டியது) வஹ்ஹாபின் வார்த்தைகளான இறைவேதம்தான் என்று தெளிவாக்குகிறார்.

அவருடைய கட்டுரையை, "வஹ்ஹாபிஸம் துரோகம் செய்து கொண்டிருக்கிறது" என்று முடித்திருந்தார். அவர் சொல்ல வரும் செய்தி என்னவெனில், "(அ),(ஆ),(இ),(ஈ) ஆகிய நான்கிலும் 'விசித்திரங்கள் சார்ந்த நிகழ்வுகளை' உண்மை என நம்ப வைத்து, வஹ்ஹாப் துரோகம் செய்து விட்டான்" என்பதே!

புத்தக வடிவில் வரவேண்டிய கருத்து! ஏற்கனவே மயிலாஞ்சியில் அசைத்த ஆப்பின் மூலம் வால் மட்டும்தான் நசுங்கியது ...
ஃஃஃ
சான்றுகள்:
(1)"நிச்சயமாக 'ஸஃபா', 'மர்வா' (என்னும் குன்றுகள்) அல்லாஹ்வின் சின்னங்களைச் சார்ந்தவைதாம். எனவே (கஃபா என்னும்) இறையில்லத்தை ஹஜ் அல்லது உம்ரா செய்பவர்கள் அவ்விரண்டையும் சுற்றி வருவதில் தவறேதுமில்லை ... "அல்-குர் ஆன் 002:158.

வரலாற்றுக் குறிப்பு: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவை வெற்றி கொள்வதற்கு முன்வரை ஸஃபாவில் "அஸாஃப்" மர்வாவில் "நாயிலா" ஆகிய சிலைகளை இணைவைப்பாளர்கள் வழிபட்டு வந்தனர். மக்கத்து வெற்றியின்போது அனைத்துச் சிலைகளும் அழிக்கப்பட்டன. என்றாலும், அவ்விரு சிலைகளும் அறியாமைக் கால அரபியரின் வழிபாட்டு அடையாளங்களாய்த் திகழ்ந்தமையால் அவை இருந்த இடமான ஸஃபா-மர்வாப் பள்ளத்தாக்கின் பக்கம் போவதையும் மக்கத்து வெற்றியின்போது உம்ராவை நிறைவேற்ற வந்த (மதீனத்து) முஸ்லிம்கள் வெறுத்தனர். மட்டுமன்றி, அங்குச் சென்றால் குற்றமாகிவிடுமோ என்றும் அஞ்சினார்கள். அப்போதுதான் மேற்காணும் இறைவசனம் இறக்கியருளப் பெற்றது -தப்ஸீர் இபுனு கஃதீர்.

(2)"கல் வீசப்படும் இடங்கள் ஒற்றைப் படையா(ன மூன்றா)கும்; வீசப்பட வேண்டிய கற்களும் ஒற்றைப் படையா(ன ஏழா)கும்..." என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். -அறிவிப்பவர்: ஜாபிர் (ரளி) - நூல்: முஸ்லிம் / மிஷ்காத் ஹதீஸ் எண் 2622.

பலியிடும் (துல்ஹஜ் பத்தாம்) நாளின் முற்றிய காலைப் பொழுதில் தங்கள் ஒட்டகத்தில் அமர்ந்தவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜம்ர(த்துல் அகப)வில் ஏழு பொடிக் கற்களை வீசி விட்டு, "நீங்களனைவரும் உங்களுடைய ஹஜ்ஜுக் கடமையின் செயல்களைச் சரியாகச் செய்ய (என்னிடமிருந்து இப்போதே) கற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனனில், இந்த ஹஜ்ஜுக்குப் பின்னர் நான் (மீண்டும்) ஹஜ்ஜுச் செய்வேனா என்று எனக்குத் தெரியாது" என்றார்கள். -அறிவிப்பவர்: ஜாபிர் (ரளி) - நூல்: முஸ்லிம் / மிஷ்காத் ஹதீஸ் எண் 2618-2620.

(3) "...(நீங்கள் பலியிடும்) கால்நடைகளின் இறைச்சியோ இரத்தமோ அல்லாஹ்வைச் சென்றடைவதில்லை. ஆனால், உங்களின் இறையச்சம்தான் அவனைச் சென்றடையும்" - அல்குர்ஆன் 022:037.

... (ஹஜ் மாதப் பத்தாம் நாளில்) கல் வீசிய பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 63 ஒட்டகங்களைத் தங்கள் கைப்பட அறுத்தார்கள். எஞ்சியதை அலீ (ரளி) இடம் கொடுத்து அறுக்கச் சொன்னார்கள் ... -அறிவிப்பவர்: ஜாபிர் (ரளி) - நூல்: முஸ்லிம் / மிஷ்காத் ஹதீஸ் எண் 2555.

"... அவரவர் வசதியைப் பொருத்து ஓர் ஒட்டகத்தையோ ஒரு மாட்டையோ ஓர் ஆட்டையோ (பலியிட) ஓட்டிச் செல்லட்டும். ஒன்றுக்கும் வழியில்லாதவர் மூன்று நாட்கள் நோன்பிருக்கட்டும்..." என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். -அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரளி) - நூல்: புகாரீ, பாகம் 6 பக்கம் 35.

ஹுதைபிய்யா (உடன்படிக்கை) ஆண்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோடு நாங்களும் (கால்நடைகளைப்) பலியிட்டோம். எழுவருக்கு ஓர் ஒட்டகம் (அல்லது) எழுவருக்கு ஒரு மாடு(என்ற கணக்கில் பலியிடப் பட்டது). -அறிவிப்பவர்: ஜாபிர் (ரளி) - நூல்: முஸ்லிம் / மிஷ்காத் ஹதீஸ் எண் 2636.

வரலாற்றுக் குறிப்பு : ஹிஜ்ரீ ஆறாம் ஆண்டில் அருளப் பெற்ற 002:196 இறை வசனக் கட்டளையின் படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களின் ஆயிரம் தோழர்களும் உம்ராச் செய்வதற்காக, பலியிட வேண்டிய தங்கள் கால்நடைகளோடு மதீனாவிலிருந்து புறப்பட்டு மக்காவை நோக்கி வந்தார்கள். குரைஷிகளின் பிரதிநிதியாக ஸுஹைலிப்னு அம்ரு, தமது குழுவினரோடு மக்காவிலிருந்து புறப்பட்டு வந்து ஹுதைபிய்யா என்ற இடத்தில் வழிமறித்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் நபித் தோழர்களையும் "மக்காவிற்குள் நுழையக் கூடாது" எனத் தடுத்தார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் ஸுஹைலுக்கும் இடையில் அங்கு ஓர் உடன்படிக்கை ஏற்பட்டது. அதுதான் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஹுதைபிய்யா உடன்படிக்கையாகும். -தஃப்ஸீர் இபுனு கஃதீர், புகாரீ, முஸ்லிம் மற்றும் மிஷ்காத் ஹதீஸ் எண் 4042. (4)

"...ஆயினும், உங்களில் எவரேனும் நோயாளியாகவோ தலைச்சிரங்கு உள்ளவராக இருந்து, தலைமுடியை மழிக்க முடியாமலாகி விட்டால் நோன்பு நோற்றோ, தருமம் செய்தோ (இன்னொரு) பலி கொடுத்தோ அதற்கு ஈடு செய்ய வேண்டும் ..." அல்-குர் ஆன் 002:196.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜத்துல் விதாவின்போது தலைமுடியை (முழுக்க) மழித்துக் கொண்டார்கள். நபித்தோழர்களில் பெரும்பாலரும் அவ்வாறே (முழுக்க மழித்துக் கொண்டனர்). சிலர் முடியைக் கத்தரித்துக் கொண்டனர். -அறிவிப்பவர் : இபுனு உமர் (ரளி) - நூல்: புகாரீ, முஸ்லிம்/ மிஷ்காத் ஹதீஸ் எண் 2646.

·"... எனது சமாதியை (கந்தூரி) விழா நடக்கும் இடமாக்கி விடாதீர்கள்...": அஹ்மது 8449, அபூதாவூது 1746.
·"... இறைவா, எனது சமாதியை வழிபடுமிடமாக ஆக்கி விடாதே...": அஹ்மது 7054, முஅத்தா மாலிக் 376 .
·"சமாதிகளைச் சந்திக்கச் செல்லும் பெண்களையும் சமாதிகளில் வழிபாடு செய்யும் பெண்களையும் சமாதிகளில் விளக்கேற்றும் பெண்களையும் அல்லாஹ்வின் தூதர் சபித்தார்கள்": நஸயீ 2016, அபூதாவூது 2817, அஹ்மது 2952, இபுனுமாஜா 1564.
·"நபிமார்களின் சமாதிகளை வணங்குமிடமாக ஏற்படுத்திக் கொண்ட யூதர்களையும் கிருத்துவர்களையும் அல்லாஹ் சபித்து விட்டான்" என்று அல்லாஹ்வின் தூதர் உறுதிபடக் கூறினார்கள். இல்லையெனில் அவர்களுடைய சமாதியையும் வணங்குமிடமாக்கிவிட வாய்த்து விடும் என ஐயுற்றார்கள்: புகாரீ 3195, 4087, 4089, 5368, முஸ்லிம் 826, அஹ்மது 23976, நஸயீ 696, 2020, முஅத்தா மாலிக் 1387.
·"சமாதிகளுக்காகக் கட்டடம் எழுப்புவதையும் சமாதிகளின் மீது பூசுவதையும் எழுதி வைப்பதையும் சமாதிகளின் மீது அமர்வதையும் அல்லாஹ்வின் தூதர் தடை செய்தார்கள்: திர்மிதீ 972, அஹ்மது 14748.

திங்கள், பிப்ரவரி 20, 2006

சூபியின் முகமூடி 'மட்டும்'

சூபி முகம்மது என்பவர் திண்ணையில் என்னுடைய கடிதத்தை விமர்சித்து ஓர் எதிர் மடல் எழுதியிருக்கிறார். அவருடைய மடலில் குறிப்பிட்டுள்ளக் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்க வாய்ப்பளித்த அவருக்கும் அச்சேற்றிய திண்ணைக்கும் முதற்கண் என் நன்றி!

"வகாபிய கருத்துக்களை பேசிக்கொண்டிருக்கும் நண்பர்கள் ஹெச்.ஜி.ரசூல் முன்வைத்த பல முக்கியமான விடயங்களுக்கு இன்னும் பதிலளிக்கவில்லை" என்பதுதான் சூபியுடைய குற்றச்சாட்டு.

அக்குற்றச்சாட்டுக்கு பதில் தருமுன் ஒரு சிறு திருத்தம்: 'வகாபிய கருத்துக்கள்' என்று தனியாக இஸ்லாத்தில் ஏதுமில்லை. எனவே, 'வஹ்ஹாப் உடைய கருத்துக்கள்' என்று திருத்திப் படித்துக் கொள்க! அதற்கு உடன்பட மனமில்லையெனில், 'அல்-குர் ஆன்' என்று மாற்றிக் கொள்க!

இனி, 'பதில் சொல்லப்படாத முக்கிய விடயங்கள்' என்ற குற்றச்சாட்டுகளுக்கு வருவோம். (1அ) "பிரதேச தன்மைகளை அழித்து (1ஆ) அரேபிய வகைப்பட்ட ஒற்றைச் சமய அடையாளம் பேசும் அறிவு வாதம்" (2) "தனி நபர் மைய வாதம்" (3) "லாபக் கோட்பாடு சார்ந்த பொருளாதாரச் சார்பு" மீக்கூறிய மூன்றில் முதலாவதான (1அ,1ஆ) குற்றச்சாட்டுக்கு திண்ணையில் என் முதல் மடலிலேயே பதில் உள்ளது:
__________

"... தர்காக்கள் சார்ந்த மரபுவழி பண்பாட்டியல் நடவடிக்கைகள் அனைத்தையும் முற்றிலுமாக அழித்தொழிப்பது வஹ்ஹாபிஸத்தின் அடிப்படை நோக்கமாகும். இதனை அரபு வகை(?)ப்பட்ட இஸ்லாமிய பேரடையாளமாகவும் சகலவித அதிகாரத்தையும் மையத்தில் குவிக்கும் ஒற்றை நிறுவனச் சமய மாதிரியாகவும்..." சொல்லலாமாம். இஸ்லாத்தில் இல்லாததும் இடையில் வந்து சேர்ந்ததுமான சமாதி வழிபாட்டை (மரபுவழி பண்பாட்டியல்?) அப்புறப்படுத்துவது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையுமாகும். இதில் 'அரபுவகை' என்று தனிவகை ஒன்றுமில்லை. கடமையாற்றுகிறவன் தமிழனாக இருப்பதில் கட்டுரையாளருக்கு என்ன நட்டம்?
__________

'தர்காக்கள் சார்ந்த மரபுவழி பண்பாட்டியல் நடவடிக்கைகள்' என்று கட்டுரையாளர் குறிப்பிட்டதைத்தான் 'பிரதேசத் தன்மைகள்' என்று சூபி மொழிபெயர்த்துவிட்டு, அதற்கு பதில் தரவில்லை என்கிறார். ‘நான் சொல்ல வந்தவை வேறு' என்று சூபி மறுத்தாரெனில் வேறு 'பிரதேசத் தன்மை'களுக்கும் பதிலுண்டு:

'உலக மக்களின் மார்க்கம்' (அல்- குர் ஆன் 030:030) என்று பொதுவுடமையோடு தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட இஸ்லாம், பிரதேசத் தன்மைகளான நாடு, மொழி, மரபு, பண்பாடு, கலாச்சாரம் போன்ற அனைத்தையும் மீறிச் செம்மாந்து நிற்கும்போது 'பிரதேசம்' என்ற குறுகிய வட்டதுக்குள் இஸ்லாத்தை அடக்க முயல்வது பேதைமையேயன்றி வேறென்ன?

இரண்டாவதாக, 'தனி நபர் மைய வாதம்' அதாவது, ஒரேயொரு நபருடைய கருத்துகளை/கட்டளைகளை மட்டும் ஏற்றுக் கொண்டு, மற்றவற்றைப் புறந் தள்ளுவது. இதுவும் தவறான குற்றச்சாட்டாகும். ஒரு முஸ்லிம், இருவருடைய கருத்துகளுக்கும் கட்டளைகளுக்கும் கட்டுப்பட வேண்டும்:
1. அல்லாஹ்
2. அவனுடைய தூதர் முஹம்மது (ஸல்).
அவன்/அவள்தான் உண்மையான முஸ்லிம் (அல்லது வஹ்ஹாபி).

மூன்றாவதும் முடிவானதுமான குற்றச்சாட்டு நகைப்புக்குரியது: "லாபக் கோட்பாடு சார்ந்த பொருளாதாரச் சார்பு" சூபியே குறிப்பிட்டபடி புரிந்து கொள்ளவே 'சிரமப் படுகின்ற' சொல்லாட்சி(?). அதற்கும் அவரே காரணம் சொல்கிறார் "தமிழுக்கு இவ்விடயங்கள் புதிது". இதுதான் சிக்கல்! வேறென்ன...? தமிழில் சிந்தித்துத் தமிழில் எழுதினால் என்னைப் போன்ற பாமரனும் 'சிரமப் படாமல்' புரிந்து கொள்வோம். அதை விடுத்து, கிரேக்கத்தில் சிந்தித்துத் தமிழில் எழுதினால் அதன் கருப் பொருளை என் போன்றோர் கருத்திலெடுப்பது கடினமன்றோ !

எனினும், நான் 'சிரமப்பட்டு' மூன்றாவது குற்றச்சாட்டைப் புரிந்து கொண்டது யாதெனில், 'தன் பொருளாதாரத்தை முதலீடு செய்யும் ஒவ்வொரு வஹ்ஹாபியும் இலாபத்தை எதிர் பார்ப்பான்' சரியா? எனில், மூன்றாவது குற்றச்சாட்டை மனமுவந்து ஏற்றுக் கொள்கிறேன்.

அடுத்து, "எவ்வித உழைப்புமின்றி 'முதலாளி' ஆவதற்குத்தான் இந்தியா முழுதும் சமாதிகள் இருக்கின்றன. ஆனால் இப்போதெல்லாம் கந்தூரியில் கூட்டமில்லை; உண்டியல் நிறையவில்லை; மக்களை ஏய்த்துப் பிழைத்து வாங்கிய கார்களுக்குப் பெட்ரோல் போடக் காசு சேர்வதில்லை" என்று நான் பொத்தாம் பொதுவாகப் பேசுவதாக சூபி குற்றம் சாட்டுகிறார். "கந்தூரியில் கூட்டமில்லை; உண்டியல் நிறையவில்லை" என்பது என் 'பொத்தாம் பொது'க் கருத்தன்று. உண்மை நிலையை, இப்போது உள்ள நிலவரத்தைக் கண்களால் கண்டு எழுதியதே! வேண்டுமெனில், இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் நிரம்பிய உண்டியல் வளத்தையும் இப்போதுள்ள வறட்சி நிலையையும் ஒரு சர்வே எடுத்துப் பார்த்து சூபி தெரிந்து கொள்ளட்டும். அதற்கு முன்னர், என்றைக்கோ இறந்துபோனவர்களின் சமாதிகளைக் காட்டி, மக்களைச் சுரண்டி வயிறு வளர்க்கும் 'முதலாளி'கள் எந்தவகையான உழைப்புச் செய்கிறார்கள் என்று தெரிவித்தால் நன்றியுடையவனாவேன்.

மேலும், ஓர் உலவி புத்தகம் எழுதியும் தொலைக் காட்சி விளம்பரங்கள் வழியாகவும் சம்பாதித்துப் பணக்காரராகிவிட்டாராம். அந்த உலவி ஓர் ஊழல் பேர்வழியாம். அவையும் என் மடலுக்கு பதிலாம். (திண்ணையின் கட்டுப்பாடுகளுள் "Avoid emotional and abusive language" என்பதும் அடங்கும். சூபிக்கு விதிவிலக்கு போலும்). நான் யாரைச் சார்ந்தவன் என்பதை இங்குத் தெளிவாகப் பிரகடனப் படுத்தி விட்டேன். அவலை நினைத்துக் கொண்டு உரலை இடித்திருக்கும் சூபியின் நிலையை எண்ணிப் பரிதாபப்படுவதைத் தவிர வேறுவழி தெரியவில்லை.

கந்தூரிகளின் வழியே நிரம்பிய தர்கா உண்டியல்கள் தற்போது ஏகத்துவ எழுச்சியால் வறண்டு போனது ஒரு புறமிருக்க, இன்னொரு பக்கம் ஏகத்துவ எழுச்சிக்கு ஈடு கொடுக்க முடியாதவர்களின் இயலாமையினால் இந்த அளவுக்குச் சிந்தனையிலும் வறட்சி ஏற்பட்டிருப்பதும் பரிதாபத்திற்குரியதே!

இறுதியாக, பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவி செய்யுமாறு இஸ்லாம் (அல்லது வஹ்ஹாபிஸம்) வலியுறுத்துகிறது. சூபிக்காக பிரார்த்தனை செய்வது மட்டுமே இப்போது என்னாலானது.
ஃஃஃ

சனி, பிப்ரவரி 18, 2006

ஹெச். ஜி. ரஸூலுக்கு எதிர்வினை -அருளடியான்

சகோதரர் அருளடியான் அவர்களின் திண்ணைக் கடிதம் அவருடைய அனுமதியோடு இங்கு மறுபதிவு செய்யப் படுகிறது. அவருக்கு நன்றி!

-வஹ்ஹாபி

ஃ ஃ ஃ

'முஸ்லிம்களை முஹமதியர் என்று சொல்லக் கூடாது' என்ற புரிதல் உள்ளவர்கள் கூட, ஹனபி, ஷாஃபி என்றோ, வகாபி, சுன்னத் வல் ஜமாஅத், தவ்ஹீத் ஜமாஅத் என்றோ சொல்லக் கூடாது என்பதை அறியவில்லை. ஹெச். ஜி. ரசூல் "தர்கா வழிபாட்டினர் முஸ்லிம்களில் ஏழைகளைப் பிரதிநிதித்துவப்படுத்து"வதாக எழுதியுள்ளார். இது தவறான தகவல் மட்டுமல்ல; மிகவும் நகைச்சுவையான செய்தியும் கூட.

முஹமது நபி(ஸல்) அவர்கள் தானும் தன் குடும்பத்தினரும் இஸ்லாமிய அரசு வசூலித்த ஜகாத் நிதியில் இருந்து எதுவும் எடுக்கக் கூடாது என தடை செய்து கொண்டார்கள். ஆனால் இன்றைய தர்கா நிர்வாகிகள், தர்காவில் வசூலாகும் தொகை தர்கா நிர்வாகிகளின் குடும்பத்தை தவிர யாருக்கும் கிடையாது என விதிமுறை உருவாக்கிக் கொண்டார்கள். இதனால் ஏழை முஸ்லிம்களுக்கு என்ன பயன்?

ஓரிறைக் கொள்கையில் உறுதியாய் உள்ள இலட்சக் கணக்கான ஏழை முஸ்லிம்கள் உள்ளனர். த.மு.மு.க, தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், ஜாக் போன்ற அமைப்புகளில் உள்ளவர்களில் மிகப் பெரும்பாலோர் ஏழைகளும், நடுத்தர வர்க்கத்தினருமே. வளைகுடா நாடுகளில் இந்த அமைப்புகளுக்கு உறுப்பினர்களாய் உள்ளவர்களும் ஏழைகளும், நடுத்தரவர்க்கத்தினருமே. செல்வந்த குடும்பத்தினர் மிகச்சிலர் மட்டுமே.

தர்கா வழிபாட்டுக்கு இலட்சக்கான ரூபாய் கொட்டித் தருபவர்களில் பணக்காரர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். ஏழைகளும், நடுத்தரவர்க்கத்தினரும் இதைவிட சற்று அதிகமாக தர்காவழிபாட்டில் உள்ளனர் என்பது உண்மைதான். அந்த பகுதிகளில் கல்வியறிவு வளரும் போது, அந்த குடும்பங்களில் இளைய தலைமுறை தர்கா வழிபாட்டில் இருந்து முற்றிலுமாக விடுபடுகிறது.

ஹெச். ஜி. ரசூல் மக்காவில் நடைபெறும் ஹஜ் சடங்குகளையும், தமிழ் நாட்டின் தர்கா வழிபாடுகளையும் ஒப்பிட்டு எழுதியுள்ளார். ஹஜ்ஜில் நிறைவேற்றப்படும் சடங்குகள் குர்ஆன், நபிகளாரின் வழிமுறையான ஹதீஸ் ஆகிய மூல நூல்களின் வழிகாட்டுதலின்படி நிறைவேற்றப்படுபவை. தர்கா வழிபாடு அவ்வாறு அல்ல. இறைவனுக்கு மட்டுமே உரிய பண்புகளை, இறந்த ஒரு மனிதருக்கும் இருப்பதாக நம்புவதும் அவரிடம் நம் தேவைகளை கேட்பதும் இஸ்லாத்தில் இல்லாத புதுமைச் செயல் மட்டுமல்ல; இறைவனுக்கு இணைவைக்கும் பெரும்பாவமாகும்.

ஒரு பொருளுக்கு ஒரு முறைதான் ஜகாத் என்பது தமிழ் நாட்டின் பிரபலமான இஸ்லாமிய மார்க்க அறிஞரான பி.ஜெய்னுல் ஆபிதீன் அவர்களின் கருத்தாகும். அவர் தலைமையிலான தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் இக்கொள்கையை ஏற்றுள்ளனர். இதனை பெரும்பாலான முஸ்லிம் அறிஞர்களும், முஸ்லிம் மக்களும் ஏற்கவில்லை. ஹெச்.ஜி. ரசூல் இவ்வாறு பல தவறான தகவல்களை எழுதி தன் தர்கா வழிபாட்டுக் கொள்கைக்கு ஆதரவு தேடியுள்ளார்.

எனக்குத் தெரிந்தவரை, ஓரிறைக் கொள்கையில் உறுதியாக உள்ளவர்களே தர்கா வழிபாட்டாளர்களை விட ஏழைகளுக்கு ஆதரவாக உள்ளனர்.

- அருளடியான் aruladiyan@yahoo.co.in

வியாழன், பிப்ரவரி 16, 2006

ஹெச். ஜி. ரஸூலுக்கு எதிர்வினை -பாபுஜி

திண்ணையில் ஹெச். ஜி. ரஸூல் எழுதிய கட்டுரைக்குத் திண்ணையிலேயே மேலும் மூவரால் எதிர்வினையாற்றப் பட்டிருக்கிறது. அவற்றை இங்கு மீள்பதிப்புச் செய்வது பொருத்தமாயிருக்கும். மின்னஞ்சல் வழியாகத் தொடர்பு கொண்டு வேண்டுகோள் விடுத்த வகையில், முதலாவதாக அனுமதியளித்தச் சகோதரர் பாபுஜி அவர்களின் திண்ணைக் கடிதம் நன்றியோடு இங்கு மறுபதிவு செய்யப்படுகிறது. 

 -வஹ்ஹாபி 
ஃஃஃ

திண்ணையில் ஹெச்.ஜி.ரசூல் என்பவரின் கட்டுரை படித்தேன்.

இரண்டு வகை இஸ்லாம் உண்டு என்று 'கண்டுபிடித்த' முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வழியில் சிந்தித்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டியுள்ளது.

இந்திய முஸ்லிம்களைப் பொருத்த வரை, பரம்பரை பரம்பரையாக முஸ்லிம்களாகத் தொடர்பவர்களில் சமீப காலங்களாகத்தான் சரியான இஸ்லாமை ஆய்ந்தறிந்து பின்பற்றுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது உண்மை.

இந்தியாவில் இஸ்லாம் பரவத்தொடங்கியப் போது ஆர்வத்தின் காரணமாக சில முஸ்லிம்களால் செய்துக்கொள்ளப்பட்ட 'சமாளிப்புகள்'(Adjustments) இஸ்லாமிய சமூகம் மீதான பண்பாட்டுத் தாக்குதலுக்கு வழி வகுத்தன.

இதன் விளைவாகத்தான் இந்திய முஸ்லிம் சமூகத்தில் இஸ்லாமல்லாத பழக்க வழக்கங்கள் (எ.கா., தாலி, தர்கா வழிபாடு, அத்வைத கோட்பாடு போன்றவை) செல்லுபடியாயின. எனினும் அவை இஸ்லாமின் அடிப்படையான ஓரிறைக் கோட்பாட்டையும் சாதிகளற்ற, அடிமைத்தனமற்ற சமுதாயத்தையும் பெரிதாக பாதிக்க இயலவில்லை.

சமூக மேலாதிக்க மனப்பான்மையில் ஊறிய சக்திகள் கிறிஸ்தவத்திலும் சாதியை புகுத்தி இந்திய கிறிஸ்தவத்தை 'இந்து மயம்' ஆக்கியதைப் போல இஸ்லாமிய சமூகத்தில் சாதியை புகுத்துவதில் வெற்றி காண முடியாத நிலையில், 'கலாச்சார வண்ணத்தை' மாற்றிக்கொண்ட முஸ்லிம்களை (தற்காலிகமாக) விட்டு வைப்போம், சரியான இஸ்லாமைப் பின்பற்றுகிறவர்களை முதலில் கவனிப்போம் என்று 'நேசமாக'ப் புறப்பட்டனர். 'அடிப்படை' விளங்காத தீவிரவாதிகளுடன் 'சரியான முஸ்லிம்களையும் இஸ்லாமையும் சம்பந்தப்படுத்தி 'தான் சார்ந்த' நலன்களுக்காக வரிந்து கட்டுகின்றனர்.

இதன் தொடர்ச்சியாகத்தான் மு.பி.வாஜ்பேயியின் 'இரண்டு வகை இஸ்லாம்' பற்றிய பேச்சையும், 'இந்தியாவில் முஸ்லிம்கள் வாழ வேண்டுமானால் ராமனையும் கிருஷ்ணனையும் ஏற்றுக்கொண்டு வாழட்டும்' என்ற பரிவாரக் கூச்சல்களையும் நாம் பார்க்க வேண்டும். 

வஹாபிஸம் என்ற பெயரால் ஹெச்.ஜி.ரசூல்களால் பழிக்கப்படும் சரியான இஸ்லாம்தான் இன்றைக்கும் வரதட்சணை, புரோகிதம், வட்டி, சிசுக்கொலை, (பெண்)கருக்கலைப்பு போன்ற தீமைகளுக்கு எதிராக போராடி வருகிறது. (கிரெக்க புராண அத்வைத பூச்சுக்களிலிருந்து முஸ்லிம்களை மீட்டெடுத்த ஒரு அறிஞரின் பெயராலாயே வஹாபிசம் என்ற வார்த்தை வழங்கி வருகிறது.)

இன்றைக்கு 'பண்பாட்டு இஸ்லாம்' என்பதை பேசுகிற ஹெச். ஜி. ரசூல்களின் கூப்பாடு சமூக மேலாதிக்க மனப்பான்மை கொண்டவர்களுக்குத்தான் 'புரோகிதத்தை'யும் பூர்ஷ்வாதனத்தையும் வளர்க்க உதவும்.

- பாபுஜி

புதன், பிப்ரவரி 01, 2006

ஹெச். ஜி. ரஸூலின் திண்ணை கட்டுரைக்கான எதிர்வினை-2

வகாபிசமும் நவீன முதலாளியமும் என்ற தலைப்பில் ஹெச்.ஜி.ரசூல் எழுதிய கட்டுரைக்கான எதிர்வினை-2
இஸ்லாமிய அடித்தள (அறிவுகூட கற்பிக்கப் படாத பாமர) மக்கள் முன்வைக்கும் பாரம்பரிய (பிறமத) மரபுகள், (மூட)நம்பிக்கைகள், (போலிச்)சம்பிரதாயங்கள் மீதான தீவிரமான அறிவுவாத விமர்சனங்களை வகாபிசம் முன்வைக்கிறது. பகுத்தறிவின் (அடிப்படையான இறை)விசுவாசத்தை ஒரு குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட எல்லை(?) வரை சென்று தர்க்க ரீதியாக நிலைநிறுத்த முயல்கிறது. நவீனத்துவத்தின் முக்கிய கூறான அறிவுவாதம் மேற்குலகில் மதவிலக்கக் கூறுகளை கொண்டதாக இயங்கியது. அரபு மற்றும் ஆசிய சூழலில் இது அடித்தள மக்கள் சார்ந்த இஸ்லாத்தின் (பாற்படாத) விளிம்பு நிலை மரபுகளை விலக்க முனைந்தது. மைய நீரோட்ட ஏகத்துவத்தின் மீது மட்டும் தனது பகுத்தறிவு பார்வையை(ப்) பயன்படுத்த(த்) தடைவிதித்தது. எனவேதான் அடித்தள மக்களின் (இஸ்லாத்திற்குத் தொடர்பில்லாத) சிறுமரபுகளின் மீது எதிர்ப்பும், (இஸ்லாத்தின் அடிப்படையான இறைமறை மற்றும் நபிவழிப்) பெருமரபு மீது பரிபூரண நம்பிக்கையும் திரும்பத்திரும்ப வலியுறுத்தப்பட்டது.
(")விஞ்ஞானங்களின் தாயாக(த்) திருக்குர்ஆன் வாழ்கிறது. இஸ்லாத்தைவிட அறிவு சார்ந்த மார்க்கம் வேறில்லை" என்பதான பிரச்சாரங்களினூடே ஒரு இஸ்லாமியனின் அடிப்படை என்பதே "அல்லாஹ்வின் மீதும் அவனது தூதர்களின் மீதும், மறைபொருளாக இருக்கின்ற மலக்குமார்களின் மீதும், மறுமை வாழ்வு, சொர்க்கம், நரகம் மீதும் ஈமான் கொள்ளுதலே ஆகும்" என்பதாகச் சொல்லி அறிவின் இடத்தை நம்பிக்கையால் நிரப்பியது.
அடைப்புக் குறிகள் தவிர்த்த மேற்காணும் கருத்துகள், ஹெச். ஜி. ரஸூலுக்குச் சொந்தமானவை. அடைப்புப் குறிக்குள் உள்ளவை என்னுடையவை.

'அல்லாஹ்வின் மீதும் அவனது தூதர்களின் மீதும், மறைபொருளாக இருக்கின்ற மலக்குமார்களின் மீதும், மறுமை வாழ்வு, சொர்க்கம், நரகம் மீதும் ஈமான் கொள்ளும் ஒரு நம்பிக்கையாளன் அறிவாளியாக இருக்க முடியாது அல்லது தன்னை அறிவாளி என்று சொல்லிக் கொள்பவன், மேற்காணும் நம்பிக்கை கொள்ளக் கூடாது' என்பதுதான் கட்டுரையாளர் கூற முனையும் கருத்தாக இருக்க முடியும்.

கட்டுரையாளரின் கற்பனையில் உதித்த போலிஅறிவாளியாக இருப்பதில் எனக்கு விருப்பமில்லை.

- தொடரும்

திங்கள், ஜனவரி 30, 2006

ஹெச். ஜி. ரஸூலின் திண்ணை கட்டுரைக்கான எதிர்வினை-1

ஹெச். ஜி. ரஸூலின் திண்ணை கட்டுரைக்கான எதிர்வினை. "நவீன முதலாளித்துவத்தின் பண்பாட்டுக் குரலாக இஸ்லாத்தினுள் வஹ்ஹாபிஸக் கோட்பாடு உருவாகி உள்ளதாக"க் கட்டுரையாளர் தொடங்குகிறார்.

வட்டி, வரதட்சணை, புரோகிதம், சமாதிகளின் பெயரால் உண்டியல் போன்ற சமூகச் சுரண்டல்களுக்கு எதிராகப் போராடுகின்ற வஹ்ஹாபிகளின் குரலை, முதலாளித்துவதின் குரலாகச் சித்தரிக்க முயன்றிருக்கிறார் ஹெச். ஜி. ரஸூல். "... தர்காக்கள் சார்ந்த மரபுவழி பண்பாட்டியல் நடவடிக்கைகள் அனைத்தையும் முற்றிலுமாக அழித்தொழிப்பது வஹ்ஹாபிஸத்தின் அடிப்படை நோக்கமாகும். இதனை அரபு வகை(?)ப்பட்ட இஸ்லாமிய பேரடையாளமாகவும் சகலவித அதிகாரத்தையும் மையத்தில் குவிக்கும் ஒற்றை நிறுவனச் சமய மாதிரியாகவும்..." சொல்லலாமாம்.

இஸ்லாத்தில் இல்லாததும் இடையில் வந்து சேர்ந்ததுமான சமாதி வழிபாட்டை (மரபுவழி பண்பாட்டியல்?) அப்புறப்படுத்துவது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையுமாகும். இதில் 'அரபுவகை' என்று தனிவகை ஒன்றுமில்லை. கடமையாற்றுகின்றவன் தமிழனாக இருப்பதில் கட்டுரையாளருக்கு என்ன நட்டம்?

சமாதிகளைக் காட்டி, ஏழைகளைச் சுரண்டிக் கேவலப் பிழைப்பு நடத்தும் 'சாபு'களின் பிரதிநிதியாகத் தன்னை மாற்றிக் காட்டும் 'காம்ரேட்'தான் இரட்டை நிலைபாட்டுக்குச் சொந்தக்காரராகத் திகழ்கின்றார். எவ்வித உழைப்புமின்றி 'முதலாளி' ஆவதற்குத்தான் இந்தியா முழுதும் சமாதிகள் இருக்கின்றன. ஆனால் இப்போதெல்லாம் கந்தூரியில் கூட்டமில்லை; உண்டியல் நிறையவில்லை; மக்களை ஏய்த்துப் பிழைத்து வாங்கிய கார்களுக்குப் பெட்ரோல் போடக் காசு சேர்வதில்லை.

சமாதிகளைக் காட்டிச் சுரண்டிக் கொழுத்தவர்கள், இன்று வஹ்ஹாபிகளால் வாலறுந்த நரிகளாய்.

சமாதிகளைக் கட்டிக் கொண்டு 'பண்பாட்டு' முகாரி பாடுபவர்களை, இஸ்லாத்தை அறியாதவர்கள் என்றும் மூடநம்பிக்கையாளர்கள் என்றும் வெளிப்படையாய்க் கூறுவதில் தவறென்ன?

இஸ்லாத்தோடு சமாதி வழிபாட்டுக்கும் புரோகிதத்துக்கும் என்ன தொடர்பு? ஹெச். ஜி. ரஸூல் விளக்க வேண்டும்.

இஸ்லாத்தைப் பற்றி எழுதத் துணியுமுன் இஸ்லாத்தின் அடிப்படை என்ன என்பதையும் அதன் போதனைகள் யாவை என்பதையும் கொஞ்சமாவது தெரிந்து கொண்டு ஹெச். ஜி. ரஸூல் எழுதட்டும்.

அடிநாதம்-கொடிநாதம் எல்லாம் அப்புறம் பார்ப்போம்.

- தொடரும்

புதன், ஜனவரி 18, 2006

வஹ்ஹாபியின் வலைப்பூ

வஹ்ஹாப்(நிகரற்றக் கொடையாளன்)ஐச் சார்ந்தவன் வஹ்ஹாபி