வெள்ளி, நவம்பர் 17, 2006

மாண்புமிகு மந்தியாரும் மதிப்பிற்குரிய பன்றியாரும்

"குரங்குகளும், பன்றிகளும் அல்லாவின் படைப்பினங்கள் இல்லையா? அவற்றை ஏன் தாழ்ந்தவைகளாக சித்தரிக்க வேண்டும்...." என்ற கேள்வியோடு சென்றவாரத் திண்ணை (நவம்பர் 9, 2006) இதழில் 'ஹெச்.ஜி.ரசூலின் வார்த்தைகள் வகாபிய போதையை தெளியச் செய்யுமா...' என்று சூபி வெளிவந்திருக்கிறார். சூபிக்கு மதிப்பளிப்பதே இவ்வாரத் தலைப்பின் நோக்கம். இனி, சூபியின் கேள்விகளுக்கும் வஹ்ஹாபின் பதில்களுக்கும் வருவோம்:
1-"வேதம் உடையவர்களே! அல்லாஹ்வின் மீதும் எங்களுக்கு அருளப்பட்ட(வேதத்)தின்மீதும் இதற்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறோம் என்ற காரணத்திற்காகவே நீங்கள் எங்களைப் பழிக்கின்றீர்கள். திண்ணமாக, உங்களில் பெரும்பாலோர் பாவிகளாக (-தண்டனைக்கு உரியவர்களாக) இருக்கின்றீர்கள்" என்று (நபியே!)நீர் கூறுவீராக! [005:059].
2-"அல்லாஹ்விடமிருந்து இதைவிடக் கெட்ட தண்டனை அடைந்தவர்களைப் பற்றி உங்களுக்கு அறிவிக்கட்டுமா? எவர்களை அல்லாஹ் சபித்து, எவர்கள் மீது கோபமுங்கொண்டு, எவர்களில் சிலரைக் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் ஆக்கினானோ அவர்களும் ஷைத்தானை வழிப்பட்டவர்களும்தாம் - அவர்கள்தாம் மிகவும் தாழ்ந்த நிலையினர். நேரான வழியிலிருந்தும் தவறியவர்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக! [005:060].
3-தடையை அவர்கள் மீறிவிடவே, "நீங்கள் இழிவடைந்த குரங்குகளாகி விடுங்கள்" என்று அவர்களுக்கு நாம் கூறினோம் [007:166].
4-சனிக்கிழமை (மீன் பிடிக்கக் கூடாது என்ற நம்) தடையை உங்க(ள் முன்னோர்க)ளிலிருந்து மீறியவர்களைப்பற்றி நீங்கள் உறுதியாக அறிவீர்கள். அதனால் அவர்களை நோக்கி, "சிறுமையடைந்த குரங்குகளாகி விடுங்கள்" என்று நாம் கூறினோம் [002:065].
மேற்கண்டவற்றுள் இரண்டாவதுதான் சூபியுடைய கேள்வியின் கரு. கேள்விகள் அனைத்தும் ஒரேயோர் உண்மைக் கடவுள் என்று முஸ்லிம்கள் நம்புகின்ற அல்லாஹ்விடம் கேட்கப் பட்டுள்ளன. எனவே, அவனே பதில் சொல்கிறான்:
அவன் உயிர் கொடுக்கிறான்; அவனே உயிர் பறிக்கிறான். ஆகவேண்டிய ஒன்றுக்கு, அவன் 'ஆகுக!' என்று கூறுவான். உடன் அஃது ஆகிவிடும் [040:068].
சூபிக்கும் வஹ்ஹாபிக்கும் அவரவர்களுக்குரிய வேளையில், "சடலமாய் ஆகுக!" என்ற அவனது கட்டளை வரும். அப்போது கண்கள் நிலைகுத்தி விடும். உடல் விறைத்துப் போகும். அவனுடைய "ஆகுக!"வுக்கு எதிரே சூபியின் விஞ்ஞானம் மண்டியிட்டுக் கிடக்கும். "அல்லாஹ்வை விடுத்து அவர்கள் அழைப்பவற்றை நீங்கள் திட்டி விடாதீர்கள் ..." [006:108] என்ற வஹ்ஹாபின் கட்டளைக்கு அடிபணிந்து, சூபி மதிக்கும் கடவுளர்கள் இருவருக்கு, தலைப்பில் கூடுதலாக மரியாதை செய்து விட்டேன். நான்கு மாத ஓய்விற்குப் பின்னர் கொஞ்சமாவது தேறி வந்திருப்பாரே என்று நினைத்தால், 'உள்ளதும் போச்சுதே நொள்ளைக் கண்ணா' என்ற சொல்வழக்கை நினைவூட்டி வந்து நிற்கிறார் சூபி. இதிலே குலாம் ரஸூலின் கொ.ப.செ. ஆகத் தன்னை நியமித்துக் கொண்டது வேறு. தலைவர்கள் தளர்ந்து தடுமாறும்போது கை கொடுக்க வேண்டியது கொ.ப.செ.க்களின் பொறுப்பு என்ற கடமை உணர்வோடு வந்திருக்கும் சூபி எனக்குப் பதில் சொல்லப் போகிறாராம். நல்ல முடிவு! இந்தக் கடிதத்தின் இறுதில் 'திண்ணையில் வஹ்ஹாபி' என்றொரு சுட்டி இருக்கும். அதைச் சொடுக்கினால், திண்ணையில் வெளியான எனது கடிதங்கள் வரிசைப் படுத்தப் பட்டிருக்கும். அவற்றுள் எனது முதல் கடிதத்தில் இரு கேள்விகள் உள்ளன. "சமாதிகளைக் கட்டிக் கொண்டு 'பண்பாட்டு' முகாரி பாடுபவர்களை, இஸ்லாமை அறியாதவர்கள் என்றும் மூடநம்பிக்கையாளர்கள் என்றும் வெளிப்படையாய்க் கூறுவதில் தவறென்ன?" "இஸ்லாமுக்கும் சமாதி வழிபாட்டுக்கும் புரோகிதத்துக்கும் என்ன தொடர்பு?"லிருந்து தொடங்கி, 'வெற்றிலைப் பிள்ளை' வரைக்கும் நான் எழுப்பியுள்ள கேள்விகளையும் விமர்சனங்களையும் கவனமாகப் படித்துப் பார்த்து எல்லாவற்றுக்கும் பதில்களைத் தந்து, வஹ்ஹாபியைத் தோலுறித்துக் காட்டி, கொ.ப.செ. பதவியை சூபி தக்க வைத்துக் கொள்ளட்டும். அப்புறம் .. அந்த 'முலையறு சபத'த்தை மறந்து விடவேண்டாம்!
ஃஃஃ

கருத்துகள் இல்லை: