ஞாயிறு, ஏப்ரல் 08, 2007

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 12

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் அன்னை கதீஜா நாயகி அவர்களுக்கும் நடந்த திருமணத்தை உமறுப் புலவர் பாடும்போதுகூட, மாற்றாருடைய மரபு முறைகளெல்லாம் அங்கு இடம்பெற்றதாகக் கற்பனை செய்கிறார். பிறசமயப் பண்பாட்டின் தாக்கம் சீறாவில் எந்த அளவுக்கு இடம்பெற்றுள்ளது என்பதைக் காண்போம்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் கதீஜா நாயகிக்கும் திருமணம் புரிவதற்காக, இருவருடைய குடும்பத்தில் உள்ள பெரியோர்களும் கலந்து பேசினார்களாம். அப்போது அவர்கள் 'பொருத்தம்', 'நல்ல நாளின் முகூர்த்தம்' முதலியவற்றைக் குறித்துக் கொண்டு மற்றவர்களுக்கு அழைப்பு விடுத்தார்களாம்.
பொருத்தமிது நலதினத்தின் முகுர்த்தமிது வருகவென்ப பொருவிலாத குருத்தவள மணிமாலைக் குவலிதுபாற்குறித் தெழுந்தார் கொற்ற வேந்தர் அபூத்தாலிபு
என, பொருத்தமற்றுப் பாடுகிறார் உமறுப் புலவர் (மணம் பொருத்துப் படலம், பாடல் 56).

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கதீஜா நாயகியை மணமுடிப்பதற்காக கதீஜா நாயகியின் தந்தையாகிய குவைலிதிடம் அபூதாலிபு, "சீதனப் பொருட்களும் வெற்றிலை-பாக்கு வகையறாக்களும் தருக" எனக் கேட்டாராம். அதைக் கேட்ட குவைலிது, வெற்றிலை, பாக்கு, ஏலம், இலவங்கம், தக்கோலம், கற்பூரம், சந்தனம் ஆகியவற்றைப் பொன் தட்டில் வைத்துக் கொடுக்க, அதனை அபூதாலிபு வாங்கி, லெப்பைகளுக்கும் மற்றவர்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்தாராம். இதனை உமறுப் புலவர் 'மணம் பொருத்துப் படலத்தின் 61-62ஆம் பாடல்களில் வாசகர்களுக்கு அவிழ்த்துப் பரிமாறுகிறார்.

மணம் பொருத்துப் படலத்தை அடுத்து இடம்பெறும் பகுதி, 'மணம்புரி படலம்' என்பதாம். இந்தப் படலத்தில் கதீஜா நாயகி மணக்கோலம் பூண்ட தன்மையை வருணிப்பதாகக் கருதிக் கொண்டு, உமறுப் புலவர் என்னவெல்லாமோ பாடிச் செல்கிறார். வரலாற்றுக்கு அப்பாற்பட்ட புராணக் கதையளப்புகளில் பிறமதப் புலவர்கள் மனம்போன போக்கில் அக்காப்பிய நாயகிகளை வருணித்துச் செல்வர். அது அவர்களுடைய காப்பிய மரபு. அத்தகைய தரம்தாழ்ந்த மரபுக்குத் தாவிச் சென்று, வரலாற்று நாயகரான நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கைத் துணைவியும் முஃமின்களின் அன்னையுமான கதீஜா நாயகியைப் பற்றிக் கொச்சையாக வருணிக்கிறார் உமறுப் புலவர்:
பூக மென்கழுத் திடனறக் கதிர்மணி புனைவார் பாகு றச்செழுந் தோள்வளை பலபரித் திடுவார் நாக மென்முலைக் குவட்டினன் மணிவடந் தரிப்பார் மேக லைத்திரண் மணியொடு மருங்கில்வீக் கிடுவார் உவரி மென்னுரை போலும்வெண் டுகில்விரித் துடுப்பார் குவித னத்திடை சந்தனக் குழம்புகள் செறிப்பார் திவளு நல்லொளி நுதலிடை திலதங்க ளணிவார் ...
(மணம்புரி படலம், பாடல்கள் 24-25).

இவ்வாறு அன்னை கதீஜா நாயகியை அத்துமீறி வருணிப்பதோடு நாயகியின் நெற்றிக்குப் பொட்டும் இடுகிறார் புலவர்.

இப்படலத்தின் இன்னொரு புறம் மணமகனாகிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மணஊர்வலக் காட்சி படம் பிடித்துக் காட்டப் படுகிறது. தண்ணுமை, முருகு, துந்துபி, சிறுபறை, சல்லரி, பதலை, திண்டிமம், பேரிகை, முரசு, மத்தளி முதலிய இசைக் கருவைகளெல்லாம் கடலொலியையும் விஞ்சி ஒலிக்க, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதன் நடுவே பவனி வந்தார்களாம் (மணம்புரி படலம், பாடல் 42). இவ்வாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வீதிஉலா வரும்போது அந்த ஊரிலுள்ள எழுவகை பெண்களாகிய பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் ஆகியோர் பெருமானாரின் அழகைப் பார்ப்பதற்காகத் திசைதோறும் நெருங்கிக் கூடினார்களாம் (பாடல் 51). பெருமானாரைப் பார்த்த பெண்களின் மார்புப் புறங்களிலெல்லாம் பசலை படர்ந்ததாம். "முஹம்மதின் வடிவை நோக்கித் தினந்தோறும் பூத்த தையலார் திரண்டு கூடி ..." என இதனைப் பாடுகிறார் புலவர் (பாடல் 60).

இந்தக் கூட்டத்திலிருந்த பெண்ணொருத்தி பெருமானாரின் அழகைப் பருகிக் கொண்டிருக்கும்போது அவளுடைய மார்பில் பூசியிருந்த சந்தனம் பொரிந்து போயிற்றாம். அதற்கு என்ன காரணம் என்று அவள் இன்னொருத்தியிடம் இரகசியமாகக் கேட்டாளாம் (பாடல் 64):
கோதறு கருணை வள்ளல் குலவுத்தோள் வனப்பைக் கண்ணால் தீதற வாரியுண்ட செழுங்கொடி யொருத்தி செம்பொன் பூதரக் கொங்கை சாந்து முத்தமும் பொரிவது என்கொல் காதினில் உரைமின் என்றோர் காரிகை தன்னைக் கேட்டாள்
மென்மார்புடன் பெண்கள் திரண்டிருந்த தோற்றமானது, வள்ளல் நபியின் பவனிக்காக அமைக்கப் பட்ட மாணிக்க விளக்குகள்போல் இருந்தனவாம் (பாடல் 72).

இங்ஙனம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஊர்வலமாக வந்து மணப் பந்தலை அடைகிறார்களாம். அப்போது அமுதமொழி பேசும் பெண்கள் இருபுறமும் நெருங்கி நின்று தீபங்கள் ஏந்த, எண்ணிலடங்காத பெண்கள் அயினிநீர் கொண்டு அவர்களுக்கு ஆரத்தி எடுத்தார்களாம். அந்தவேளையில் குரவை ஒலி ஓங்கி முழங்க மணமகனாம் நபியவர்கள் குதிரையிலிருந்து இறங்கியதாகப் புலவர் எழுதிச் செல்கிறார் (பாடல் 103).

தொடரும், இன்ஷா அல்லாஹ்.

கருத்துகள் இல்லை: