வெள்ளி, மே 22, 2009

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 22

ல்லாஹ்வுடைய கட்டளைகளுக்கு உள்ளச்சத்தோடு கட்டுப்பட்டு, அவனுடைய மார்க்கத்தை இவ்வுலகில் நிலைநாட்டுவதற்காக ஒரு சின்னஞ்சிறு முஸ்லிம் கூட்டத்தினர் நிற்கின்றனர். அப்போது, அந்தக் கூட்டத்தினருக்குத் தலைமை வகித்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைவனிடம் கையேந்தி, "யா அல்லாஹ்! எங்கள் இச்சிறுபான்மைக் கூட்டம் தகர்க்கப் படுமானால் உன்னை வணங்கி வழிபட இவ்வுலகில் எவருமே இல்லாமல் போய்விடுவார்களன்றோ?" என்று நெஞ்சுருக, கண்களில் நீர்மல்கப் பிரார்த்தித்து இறைவனின் உதவியை இறைஞ்சினார்கள். அவர்களுக்கு உதவுவதாக அல்லாஹ் நபிக்கு வாக்களித்தான். "வாக்களிக்கப்பட்ட உதவி நமக்கு வந்து விட்டது!" என்று அருகிலிருந்த அபூபக்ரு (ரலி) அவர்களைப் பார்த்துக் கூறிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், "இந்த எதிரிகள் புறமுதுகிட்டு ஓடப் போகிறார்கள்" எனச் சொல்லிக் கொண்டே, குனிந்து ஒருபிடி மண்ணை அள்ளினார்கள். குறைஷிக் காஃபிர்கள் நின்றிருந்த திசையை நோக்கித் தன் கையை விரித்து மண்ணை ஊதிவிட்டு, "உங்கள் முகங்கள் கருகி விட்டன" எனக் கூறினார்கள். அம்மண், எதிரிகளின் திசையில் சிதறியது. எதிரிகளும் சிதறிப்போவதற்கு அல்லாஹ் பத்ருப்போரில் அற்புதமாக முஸ்லிம்களுக்குப் பேருதவி புரிந்தான்; முஸ்லிம்கள் வென்றார்கள்.

அல்லாஹ்வை அஞ்சி, அவனது கட்டளைகளுக்கு அடிபணிந்து, அவனிடமே தவக்குல் வைத்து, அவனை நோக்கிக் கைகள் விரிகின்றபோது அந்தக் கைகளை வெறுமனே திருப்பி விடுவதற்கு நாணமுறுகிறவனாயிற்றே அவன்! அப்படிப்பட்ட அல்லாஹ், தன்னுடைய மார்க்கம் நிலைநிறுத்தப் படுவதற்கான ஓர் இக்கட்டான காலகட்டத்தில் தன்னுடைய தூதர் கையேந்துகின்றபோது கண்டு கொள்ளாமல் இருந்து விடுவானா? ஆகவே, தனது அடியார்களுக்குத் தனது உதவியைத் தங்கு தடையின்றி வழங்கி வெற்றியடையச் செய்தான். "பத்ரில் பெற்ற இந்த வெற்றி, தூதருடைய - தூதரின் வீரர்களுடைய சாகசத்தால் கிடைத்ததன்று; என்னுடைய உதவியைக் கொண்டு கிடைத்தது" என்பதை இந்த முக்கியக் கட்டத்தில் எல்லாருக்கும் நினைவு படுத்துவதற்காக அல்லாஹ்,
(முஸ்லிம்களே! பத்ருப் போரில் எதிரிகளான) அவர்களை நீங்கள் வெட்டவில்லை; அல்லாஹ்வே அவர்களை வெட்டினான். (நபியே! பகைவர் மீது மண்ணள்ளி) நீர் வீசியபோது நீர் வீசவில்லை; அல்லாஹ்வே வீசினான்" (அல்குர் ஆன் 008:017)
என்று கூறுகிறான். இதன் மூலம் "என்னை நம்பி, என்னிடம் அபயம் வைத்து, என்னை அஞ்சி வாழும் பொறுமையுடைய அடியாருக்குச் சோதனை ஏற்படும்போது, யாரும் எதிர்பாராத விதத்தில் நான் மகத்தான உதவி புரிந்து அவனை கவுரவிப்பேன்" என்ற பாடத்தைப் புகட்டுகிறான். வஹ்தத்துல் உஜூதுக்காரர்கள், நேரடியாகப் பொருள் தரும் குர்ஆன் வசனங்களுக்கெல்லாம், "இதனுடைய உட்பொருள் வேறு இருக்கிறது" எனத் திசை திருப்புவார்கள். ஆனால், மேற்காணும் 008:017 வசனத்துக்கு மட்டும் Literal meaningஐ அப்படியே எடுத்துக் கொள்வார்கள். விளக்கம் தேவையே இல்லாத தெளிவான வசனங்களுக்கு வேறு அ(ன)ர்த்தம் கற்பிப்பவர்கள், உவமித்துக் கூறும் இந்தக் குறிப்பிட்ட வசனத்தில் உணர்த்தப்படும் படிப்பினையைப் புறக்கணித்து விட்டு, அல்லாஹ்வே ஒவ்வொரு முஸ்லிம் வீரராக பத்ரில் வந்தான் என்பதுபோல அ(ன)ர்த்தம் கற்பிப்பார்கள். "எல்லாமே அல்லாஹ்தான்" என்ற இவர்களுடைய கோட்பாட்டின்படிப் பார்த்தால், அபூஜஹல் முஸ்லிம்களை வெட்டியபோது அபூஜஹல் வெட்டவில்லை; அல்லாஹ்தான் முஸ்லிம்களை வெட்டினான் எனக் கூறினாலும் கூறுவார்கள். இந்த வஹ்தத்துல் உஜூது எவ்வளவு பெரிய வழிகேட்டுக்கு இட்டுச் செல்கிறது பார்த்தீர்களா? இனி, வ.உக்காரர்கள் தங்கள் கோட்பாட்டுக்குச் சாதகமாக எடுத்து வைக்கும் ஒரு முக்கியமான ஹதீஸைப் பார்ப்போம். 

 - தொடரும் இன்ஷா அல்லாஹ்.

கருத்துகள் இல்லை: