வெள்ளி, ஜனவரி 01, 2010

புதுவகை நோய்: இமி-3

சத்தியம் செய்தல் (ஆணையிட்டுக் கூறுதல்)

இஸ்லாத்தின் பார்வையில் பொதுவாக ஒரு களங்கத்தை/பழியை/குற்றச்சாட்டை - குறிப்பாக - தன் மீது சுமத்தப் படும் குற்றச்சாட்டை நீக்கிக் கொள்வதற்குத் தக்க சாட்சியங்கள் இல்லாதபோது, அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு, தனக்கு எதிரானவற்றை மறுப்பதற்கும் தன் கூற்று முற்றிலும் உண்மை என்று நிறுவுவதற்கும் சத்தியம் செய்வதற்கு அனுமதி உள்ளது.

இஸ்லாத்தின் மீளெழுச்சிக்கு முன்னர் மூன்றுவகை சத்தியமிடுதல்கள் வழக்கில் இருந்தன:

1. தாங்கள் வழிபடும் சிலைகளின் பெயரால் செய்யப் படும் தீர்க்கமான சத்தியம், [புகாரீ6650; சுட்டி-20].

2. தங்கள் மனைவியரைத் தள்ளி வைப்பதற்காக, "சத்தியமாக நான் உன்னுடன் உறவு கொள்ள மாட்டேன்" எனக் கூறும் வதைச் சத்தியம் [சுட்டி-21],

3. எவ்வித உள்நோக்கமும் தேவையும் இன்றி விளையாட்டாகக் கூறும் வெற்றுச் சத்தியம் [சுட்டி-22]. இதை, "அல் யமீனுல் லக்வு (வீண் சத்தியம்)" என்று அல் குர்ஆன் குறிப்பிடுகிறது.

இஸ்லாத்தின் மீளெழுச்சிக்கு முன்னர், அரபு மக்களிடையே எடுத்ததற்கெல்லாம் சத்தியம் செய்யும் வழக்கம் இருந்ததை அவர்களது வரலாறு கூறுகிறது. "என் தந்தை மீதாணை!", "உன் தந்தை மீதாணை!" எனக் கூறுவது அவர்களது இயல்பாக இருந்திருக்கிறது. இது, நமது நாட்டார் வழக்கான "ஒங்கொப்புராண (உன் அப்பன் மீதாணை)" என்பதை ஒத்ததாகும். "தன்னைப் படைத்த இறைவனைத் தவிர வேறு யார்/எதன் மீதும் ஆணையிடக் கூடாது" எனும் திருத்தம் [புகாரீ6108; சுட்டி-23] வரும் வரைக்கும் நபித் தோழர்கள் உட்பட அனைவரும் பழைய பழக்கத்திலேயே இருந்திருக்கின்றனர்.

இஸ்லாத்தைத் தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட பின்னரும், "இன்றிரா எனக்கு உணவு வேண்டாம்" எனக் குடும்பத் தலைவர் கூறுவதற்கு ஒரு சத்தியம்; பதிலுக்கு, "உன் தந்தை உண்ணாவிடில் நானும் உண்ண மாட்டேன்" எனக் கூறும் தாயின் சத்தியம்; "வீட்டுக்காரர் உண்ணாமல் நாங்கள் உண்ணப் போவதில்லை" என்பதாக விருந்தாளிகள் செய்யும் சத்தியம் போன்ற தேவையற்ற சத்தியங்கள் நபித்தோழர்களின் நாவினில் வெகு சரளமாக விளையாடும் சொற்களாக இருந்துள்ளன [புகாரீ6141; சுட்டி-24].

தன் மனைவி தன்னோடு இணங்கி இருப்பதையும் பிணங்கி இருப்பதையும் பிரித்து அறிந்து கொள்வதற்கு, சரளமாக அவர் இடும் சத்தியம் சார்ந்த சொற்கள் அடிப்படையாக இருந்ததை அண்ணலாரின் குடும்ப வாழ்க்கையில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது [புகாரீ5228; சுட்டி-25].

மூன்றாவது அரைகுறையை இனங் கண்டு கொள்வதற்கு மேற்காணும் வரலாற்றுத் தகவல்கள் வாசகர்களுக்கு உதவக் கூடியவையாக அமையும்.

அரைகுறை-3 சுரா (2: 225) (யோசனையின்றி) நீங்கள் செய்யும் வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான். ஆனால், உங்களுடைய இதயங்கள் (வேண்டுமென்றே) சம்பாதித்துக் கொண்டதைப்பற்றி, உங்களைக் குற்றம் பிடிப்பான்; இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க பொறுமையுடையோனுமாக இருக்கின்றான்.

மேற்காணும் இறைவசனத்தை எடுத்துப் போட்டு, அதற்குத் தொடர்பில்லாத "பிறமதத்தவரை ஏமாற்றுவதற்கு முஸ்லிம்கள் சத்தியம் செய்வார்கள்" என்பதாகத் திண்ணையில் புனித மோசடி செய்யப் பட்டது.
"நீங்கள் செய்யும் வெற்றுச் சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களை(க் குற்றம்) பிடிக்க மாட்டான். மாறாக, உங்கள் உள்ளங்கள் திட்டமிட்டு(ச் சத்தியங்கள் செய்து) பெற்றுக் கொள்பவற்றுக்காக உங்களை(க் குற்றம்) பிடிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; சகித்துக் கொள்பவன் [அல் குர்ஆன் 002:225]. Allah will not call you to account for thoughtlessness in your oaths, but for the intention in your hearts; and He is Oft-forgiving, Most Forbearing [சுட்டி-26].

"நீங்கள் செய்யும் வெற்றுச் சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களை(க் குற்றம்) பிடிக்க மாட்டான். மாறாக, நீங்கள் செய்யும் தீர்க்கமான சத்தியங்களுக்காக (அவற்றில் தவறினால்) உங்களை(க் குற்றம்) பிடிப்பான் ... [அல் குர்ஆன் 005:089] Allah will not call you to account for what is futile in your oaths, but He will call you to account for your deliberate oaths ... [சுட்டி-27].
ஒருவரது கூற்றை "ஆம்" என்று ஏற்றுக் கொள்வதற்கும் வேறோரு கூற்றை "இல்லை" என்று மறுப்பதற்குங்கூட, "அல்லாஹ்வின் மீதாணை!" என்று சேர்த்துச் சொல்லுவது வழக்கமாக இருந்தது. "அவையெல்லாம் வெற்றுச் சத்தியங்கள்தாம்" என்று இறைவேதம் தெளிவு படுத்தியது [புகாரீ 4613; சுட்டி-28].

மேற்காணும் இறைவசனங்களில் தன் இனத்தவர் என்றோ பிற மதத்தவர் என்றோ குறிப்பேதுமில்லை என்பது இங்குக் கூடுதல் கவனத்திற்குரியது. புனித மோசடியில் குறிப்பிட்டுள்ளவாறே "யோசனையின்றி"ச் செய்யும் சத்தியங்களோடு பிற மதத்தவரை எப்படி ஏமாற்ற முடியும்? என்பது 'யோசனை'க்குரியதாகும். இதில் தக்கியா எனும் பேசுபொருள் எங்கே இருக்கிறது என்று தேடிப் பிடிக்க வேண்டியது வாசகர்களின் பொறுப்பாகும்.

***

"பிற மதத்தவரை ஏமாற்றுவதற்காகப் பொய் சத்தியம் செய்து விட்டு, அதற்குப் பரிகாரம் செய்தால் சரியாகிவிடும்" எனும் மாயையை ஏற்படுத்துவதற்காகப் புனித மோசடி செய்யப் பட்ட இன்னொரு இறைவசனத்தையும் பார்க்கலாம்:

அரைகுறை-4 சுரா (66:02) – அல்லாஹ் உங்களுடைய சத்தியங்களை (சில போது தக்க பரிகாரங்களுடன்) முறித்து விடுவதை உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறான்; மேலும் அல்லாஹ் உங்கள் எஜமானன். மேலும் அவன் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.

மேற்காணும் 066ஆவது அத்தியாயத்தின் தொடக்க இறைவசனங்கள், அந்த வசனங்களை மக்களுக்கு எடுத்தோதும் பொறுப்பில் இருந்த இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைக் கண்டித்து அருளப் பெற்றவை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மனைவியர் மூவர் தொடர்புடைய நிகழ்வைக் குறித்தும் இறைவனால் ஆகுமாக்கப் பட்ட பானங்களின் ஒன்றான, "தேனை நான் இனி அருந்த மாட்டேன்" என்று சத்தியம் செய்ததற்காக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறைவனால் கண்டனம் செய்யப் பட்டதைக் குறித்தும் பேசும் வசனங்களை, பிற மதத்தவரோடு பொருத்தி புனித மோசடி செய்யப் பட்டது. அதைத் திண்ணையும் பெருமையோடு பதித்தது.

அந்த நிகழ்வைக் கூறும் முழுவசனங்கள்:
"நபியே!, அல்லாஹ் உமக்கு அனுமதித்ததை உம் (இரு) மனைவியரின் உளநிறைவுக்காக நீங்கள் ஏன் விலக்கிக் கொள்கின்றீர்கள்? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரில்லா அன்புடையோன். உங்களுடைய சத்தியங்களை முறித்துக் கொள்வதற்கு உரிய பரிகாரத்தை அல்லாஹ் கடமையாக்கித் தந்திருக்கிறான். அவன்தான் உங்கள் அதிபதி. அவன் நன்கறிபவன்; ஞானம் மிக்கவன் [அல் குர்ஆன் 066:001-002] O Prophet! Why holdest thou to be forbidden that which Allah has made lawful to thee? Thou seekest to please thy consorts. But Allah is Oft-Forgiving, Most Merciful. Allah has already ordained for you, (O men), the dissolution of your oaths (in some cases): and Allah is your Protector, and He is Full of Knowledge and Wisdom. [சுட்டி-29].
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களின் இல்லத்துக்குச் சென்றால் அங்குத் தேன் அருந்துவதையும் அவரிடம் (அதிகநேரம்) தங்கிவிடுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். (இதை விரும்பாமல் அவர்களின் துணைவியரான) நானும் ஹஃப்ஸாவும் கூடிப்பேசினோம். (தேனருந்தி விட்டு) நபி (ஸல்) அவர்கள் நம்மிருவரில் யாரிடம் முதலில் வந்தாலும் அவர், "கருவேலம் பிசின் சாப்பிட்டீர்களா? உங்களிடமிருந்து, பிசினின் துர்வாடை வருகிறதே" என்று கேட்க வேண்டும் என முடிவு செய்துகொண்டோம்.

வழக்கம்போல் ஸைனபின் வீட்டிலிருந்து தேனருந்தி விட்டு, நபி (ஸல்) அவர்கள் வந்தபோது நாங்கள் பேசி வைத்திருந்தபடி கேட்டோம். நபியவர்கள், "இல்லை (நான் பிசின் சாப்பிடவில்லை); ஸைனபின் இல்லத்தில் தேனருந்தினேன். சத்தியம் செய்கிறேன்: (இனிமேல்,) நான் ஒருபோதும் அதை அருந்த மாட்டேன்" என்று கூறிவிட்டு, "இது குறித்து எவரிடமும் தெரிவித்து விடாதே!" என்றும் கேட்டுக் கொண்டார்கள் [அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா (ரலி) - புகாரீ4912; சுட்டி-30].

இதில் தக்கியா எங்கே? பிறமதத்தவர் எங்கே?

யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.

- தொடரும், இன்ஷா அல்லாஹ்.

ஃஃஃ

சுட்டிகள்:

கருத்துகள் இல்லை: