வியாழன், மார்ச் 24, 2011

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 31

றைவனைத் தவிர உள்ள மற்றெல்லாமும் அவனது படைப்புகளே. அவனே படைப்பாளன். மற்றவை அனைத்தும் இறைவனின் படைப்புகள். அவனைப்போல எதுவுமில்லை. தன்னுடைய எல்லாப் படைப்புகளின் எல்லா இயக்கங்களையும் படைத்தவனாகிய அந்த அல்லாஹ் அனைத்தையும் உற்று நோக்குகின்றான்; நன்கு செவியுறுகிறான்.

இஃது இங்ஙனமிருக்க, குணங்குடி மஸ்தானோ படைப்புகள் யாவும் அல்லாஹ்வாகவே இருப்பதாகப் பிதற்றுகிறார். அவனே சூரியனாக, சந்திரனாக, ஒன்றாக, இரண்டாகவெல்லாம் இருப்பதாகக் கூறி இஸ்லாத்தைப் பரிகசிக்கிறார். மஸ்தான் எனும் இந்தப் பித்தருடைய இப்பிதற்றல்களுக்கு வேறுபல சுவையான பின்னணிகள் இருக்கின்றன.

குணங்குடி மஸ்தானுடைய ஆன்மீகக் குருநாதர் முஹையித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) ஆவார். முஹையித்தீன் அப்துல் காதிர் ஜீலானியை இவர் அல்லாஹ்வுக்கு இணையானவர் என்றே கருதுகிறார், கதை விடுகிறார். இவருடைய பாடல்களில் பெரும்பாலானவற்றில் 'குணங்குடி ஆண்டவன்' என்று இவர் முஹையித்தீன் அப்துல் காதிர் ஜீலானியையே சுட்டுகிறார்.

'குணம்' என்பதை அல்லாஹ்வாகவும் அந்த அல்லாஹ்வாகிய குணம் முழுவதையும் தன்னுள் குடியிருத்திக் கொண்டவர் முஹைதீன் அப்துல் காதிர் எனவும் கருதுகின்றார் குணங்குடி மஸ்தான். எனவேதான் "குணங்குடி வாழும் முஹையித்தீனே!" என, பாட்டுக்குப் பாட்டுப் பாடிச் செல்கிறார்.

அதாவது, முஹையித்தீன் அப்துல் காதிரிடம் அல்லாஹ்வே குடியிருந்தான் என்ற அத்துவைதக் கோட்பாடுடையவர் இந்த வழிகெட்ட கவிஞர். அத்துவைதம் என்றால் என்னவென்று இங்குத் தெரியக் கடமைப் பட்டிருக்கிறோம்.

'துவைதம்' என்பதன் எதிர்ச் சொல்லே 'அத்துவைதம்' ஆகும். ஆண்டவன் (பரமாத்மா) வேறு; அடியான் (ஜீவாத்மா) வேறு; இவையிரண்டும் தனித்தனியானவை. ஒன்றோடொன்று எக்காலத்திலும் கலக்க முடியாதவை என்னும் கொள்கையே 'துவைதம்' எனப்படும். இந்தக் கொள்கையின்படி ஆண்டவன், எப்போதும் ஆண்டவனேதான். அடியான், எப்போதுமே அடியானேதான். அடியான் எவ்வளவுதான் புண்ணியங்களைச் சேர்த்துக் கொண்டு எம்பிக் குதித்தாலும் - அதிகபட்சம் - ஆண்டவனுக்கு மிகமிக நெருக்கமான அடியானாகத்தான் ஆகமுடியுமேதவிர ஆண்டவனுக்கு இணையானவனாக, ஆண்டவனோடு கலந்துவிட்டவனாக ஆகவே முடியாது.

ஆனால், இதற்கு நேர் மாற்றமான கொள்கையைக் கொண்டுள்ளது அத்துவைதம் ஆகும். ஆண்டவனும் (பரமாத்வாவும்) அடியானும் (ஜீவாத்மாவும்) வெவ்வேறானவை அல்ல; இரண்டும் ஒன்றேதான் என்பதே அத்துவைதக் கோட்பாடாகும். இந்த அத்துவைதக் கோட்பாட்டுக்காரர்கள் ஆண்டவனுக்கு உகந்தவர்களாக இவர்கள் நம்பும் அடியார்களையும் ஆண்டவனாகவே காண்பார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பன்னெடுங் காலத்துக்கு முன்பிருந்தே இந்த அத்துவைதக் கோட்பாடு, பல வடிவங்களில் பாரெங்கும் பரவியிருந்தது.

பழமையான கிரேக்க, ஃபார்ஸித் தத்துவங்களும் நம் நாட்டு சைவ-வைணவச் சித்தாந்தங்களும் இந்த அத்துவைதக் கோட்பாடுகளையே மொத்தக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டிருந்தன.

ஒவ்வொரு காலகட்டங்களிலும் அல்லாஹ்வால் அனுப்பி வைக்கப்பட்ட நபிமார்களை அவர்கள் காலத்துக்குப்பின் மக்கள் கடவுளாகக் கருதி வழிபடலாயினர். அதற்கு அடிப்படையான காரணம், இந்த அத்துவைதக் கொள்கைதான். அல்லாஹ் வேறு, அடியார் வேறு என்பதல்ல; அல்லாஹ்வும் அடியாரும் ஒருவரேதான் என்று அம்மக்கள் எண்ணலாயினர்.

எனவே, திசைமாறிய மானுடர்கள் ஏகத்துவ விதையை வீசியெறிந்து விட்டு, பலதெய்வ வழிபாட்டுக் காளான்களை விளைத்தெடுத்துக் கொண்டார்கள்.

- தொடரும், இன்ஷா அல்லாஹ்.

1 கருத்து:

Jafar ali சொன்னது…

//எனவே, திசைமாறிய மானுடர்கள் ஏகத்துவ விதையை வீசியெறிந்து விட்டு, பலதெய்வ வழிபாட்டுக் காளான்களை விளைத்தெடுத்துக் கொண்டார்கள்.//

மாஷா அல்லாஹ்! எவ்வளவு உண்மையான வார்த்தைகள். ஜஸாகுமுல்லாஹ் ஹைரன்!!!