வியாழன், அக்டோபர் 13, 2022

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள்-40

கி.பி 1705ஆம் ஆண்டிலிருந்து 1742ஆம் ஆண்டுவரை வாழ்ந்திருந்த தாயுமானவர், ஒரு இந்துமத ஸூஃபிக் கவிஞர். குணங்குடி மஸ்தான் என்ற இஸ்லாமியச் சித்தரோ கி.பி.1788ஆம் ஆண்டில் தொண்டியில் பிறந்தவர். தாயுமானவர் இறந்து, 47 ஆண்டுகளுக்குப் பிறகு குணங்குடி மஸ்தான் பிறக்கின்றார்.

தாயுமானவர் ஒரு ‘முஷ்ரிக்’ கவிஞர். இதில் யாருக்கும் சந்தேகமேயில்லை. இந்த முஷ்ரிக்கின் வழித்தடத்தில் அப்படியே கால் பதித்துக் கவி தொடுக்கின்றார் குணங்குடியார்.

தாயுமான சுவாமிகள் திருப்பாடல் திரட்டு’ நூலின் முகப்புப் பக்கத்தில், ஶ்ரீ தாயுமான சுவாமிகளின்’ உருவப் படமொன்று இடம்பெற்றிருக்கக் காணலாம்.


அதுபோலக் ‘குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்கள் திருவாய் மலர்ந்தருளிய திருப்பாடல் திரட்டி’லும் குணங்குடி மஸ்தானின் உருவப் படமொன்று தவறாமல் தரப்பட்டிருக்கும்.

இரண்டு உருவப் படங்களிலும் எப்படி ஒரு கோவணம் மட்டுமே உடையாக இருக்கின்றதோ இதுபோல இரண்டு புலவர்களின் பாடல்களிலும் ஒரே அத்துவைதக் கோவணமே இழையோடிக் கிடப்பதைக் காணலாம்.

எவன் இன்னொரு சமயத்தவரின் கலாச்சாரங்களை தன்னில் வரித்துக்கொண்டு, அவர்களைப் போன்று செயல்படுகின்றானோ அவனும் அவர்களைச் சார்ந்தவன்தான்” என்பது நபிமொழி (அபூதாவூத் 4031).

பிறரின் ஆச்சார-அநுஷ்டானங்களைப் பின்பற்றி, அதுபோன்று நடப்பவன் நம்மைச் சார்ந்தவனல்லன்” என்பதும் நபிமொழி (திர்மிதீ).

மேற்காணும் நபிமொழிகளைப் படித்தறிந்துள்ள நாம், தாயுமானவரின் பிரதிபலிப்பைக் குணங்குடியாரிடம் பார்க்கின்றபோது எத்தகைய முடிவுக்கு வரவேண்டியதிருக்கும்?

அப்படி என்னதான் தாயுமானவரின் பிரதிபலிப்புக் குணங்குடியாரிடம் காணப்படுகிறது என வினவலாம். இரண்டு பேருடைய பாடல் போக்குகள், கருத்துப் பரிமாற்றங்கள், சொல்லடுக்குகள் ஆகியவை மட்டுமல்லாது வாழ்க்கை முறைகளிலும் தாயுமானவரை அப்படியே பின்பற்றி வாழ்கின்றார் குணங்குடியார்.

- தொடரும்

கருத்துகள் இல்லை: