புதன், பிப்ரவரி 28, 2007

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 8

தமிழிலோ அரபுத் தமிழிலோ குர்ஆனை மொழிபெயர்த்துவிடாத அளவுக்கு குர்ஆனின் மீது ஓர் எட்டாத, அளவுக்கு மீறிய உயர்தனி மதிப்பு உலவிய காரணத்தினால் குர்ஆன் ஹதீஸ் உண்மைகளைத் தமிழறிந்தோர் தெரிந்து கொள்ள முடியவில்லை. இந்நிலையில் தமிழ் தெரிந்த முஸ்லிம்களுக்கு, அவர்கள் படித்துப் புரிந்து கொள்ளக் கூடிய அளவுக்கு எதைக் கொடுப்பது? பிற மதங்களில் இருப்பதுபோல் புராணங்களையும் காவியங்களையுமாவது தமிழில் கொடுக்கலாமே என எண்ணினர் இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கள்.

அந்த இஸ்லாமியப் புலவர்கள் அரபு மொழியில் தேர்ச்சி பெற்றிருந்த தமிழகத்து அறிஞர்களை அணுகி, இஸ்லாம் தொடர்பான செய்திகளைச் சேகரிக்கத் தொடங்கினர். உமறுப் புலவர், ஆலிப் புலவர் ஆகியோர் முறையே சதக்கதுல்லா அப்பா, காழி மக்தூம் ஷேக் அலாவுத்தீன் ஆகியோரைச் சந்தித்து, தத்தம் நூல்களுக்கு உரை வாங்கியதாக அறிகிறோம். அவர்கள் இவ்வாறாக 'உரை' பெற்றதை அடிப்படையாக வைத்துக் கொண்டு, தமிழ் இலக்கிய மரபுகளைப் பின்பற்றி, இயற்கை(உண்மை)யும் செயற்கை(பொய்)யும் கலந்த புராணங்களைப் படைக்கலாயினர்.

படிப்பவர்களுக்குச் சுவையூட்டுவதற்காக அவர்கள் உண்மைக்கு மாறான கற்பனைப் புனைவுகளையும் தத்தம் நூல்களில் பொருத்தமுற இணைத்துப் பாடினர். புலவர்கள் தங்களுடைய நூல்களில் பாடிய முரணான கருத்துகள் ஒருபுறமிருக்க, பிற்காலத்தில் அந்த நூல்களைப் பதிப்பித்தவர்கள் 'முன்னுரை' என்ற பெயரில் அந்தப் புலவர்களைப் பற்றி அவிழ்த்து விட்ட புருடாக்கள் அவற்றைவிட மேலாக துருத்திக் கொண்டு நின்றன.

உமறுப் புலவருக்கு வருவோம்! உமறுப் புலவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வரலாற்றைக் காவியமாகப் பாட எண்னி, சதக்கத்துல்லா அப்பாவிடம் சென்று உரை (வரலாறு பற்றிய செய்தி) கேட்டாராம். உமறுப் புலவரின் அமுஸ்லிம் தோற்றத்தைக் கண்டு, அவரை சதக்கதுல்லா அப்பா புறக்கணித்து விடவே உமறுப் புலவர் கவலையில் நொந்து உறங்கிக் கொண்டிருக்கும்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புலவரின் கனவில் தோன்றி, "உமறே! நீர் கவலைப்படாதீர். சதக்கத்துல்லாவுடைய கனவில் தோன்றி நான் உம்மைப் பற்றிச் சொல்லியுள்ளேன். எனவே, நீர் மீண்டும் சதக்கத்துல்லாவைச் சந்தித்து உரை வாங்கிக் கொண்டு எம் வரலாற்றைப் பாடுவீராக!" என்று கூறினார்களாம். அதேபோல் சதக்கத்துல்லா அப்பாவின் கனவிலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோன்றி, உமறுப் புலவருக்காக அப்பாவிடம் சிபாரிசு செய்தார்களாம். பின்னர்தான் சதக்கத்துல்லா அப்பா உமறுப் புலவருக்கு உரை வழங்கினாராம்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தொடர்பு படுத்திப் பின்னப் பட்ட இந்த 'உரை' கதை பலரும் அறிந்ததே! வேறுசிலர் அளக்கும் கதையானது இதையும் தாண்டி இன்னும் கொஞ்சம் விரிந்து செல்கின்றது.

சதக்கத்துல்லா அப்பாவிடம் உரை வாங்கிய உமறுப் புலவர், மேலும் செய்திகளைத் தெரிந்து கொள்வதற்காகப் பரங்கிப்பேட்டை (மஹ்மூது பந்தர்) என்னும் ஊருக்கு வருகிறார். அங்குள்ள காழி மஹ்மூது முஹம்மது நெய்னா லெப்பையைச் சந்தித்து சீறாப்புராணத்துக்குத் தேவையான செய்திகளைக் கேட்க, உமறுவின் தோற்றத்தைக் கண்டு வெகுண்டெழுந்த நெய்னா லெப்பை உமறுக்கு உரை கொடுக்க மறுத்து விடுகிறாராம். அதனால் உள்ளம் உடைந்த உமறுப் புலவர் நாகூர் ஷாஹுல் ஹமீது நாயகத்தின் பாதமடைந்து, "ஷாஹுல் ஹமீது நாயகமே! நான் பாடவிருக்கும் சீறாப்புராணத்துக்கு நீங்கள்தான் தலைப்பெடுத்துத் தரவேண்டும். இல்லையேல் விடிந்ததும் நான் செத்து மடிந்து விடுவேன்" எனச் சபதமுரைத்து அங்கேயே தூங்கி விட்டாராம். அன்றிரவே நாகூர் ஆண்டவரின் "திருவினுந் திருவாய், பொருளினும் பொருளாய் ..." எனத் தலைப்பெடுத்துக் கொடுத்த அசரீரி ஒலி கேட்டு, உமறுப் புலவர் ஆனந்தக் கடலில் மூழ்கி, அதைத் தொடர்ந்து மடை திறந்த வெள்ளம்போல் பாடலானாராம்.

அதன் பின்னர் நெய்னா லெப்பையைச் சந்தித்து உமறு விபரம் கூற, "நபி பெருமானார் அவர்களின் சரித்திரத்தைப் புராணமாய்ச் செய்வதற்கு நாகூர் பிரான் அவர்களுக்கு மனப் பொருத்தமானால் நமக்கும் மிக்கப் பொருத்தமாயிருக்கும்" எனக்கூறி, புலவருக்கு உரை கொடுத்தாராம். இந்தக் கதை, காதிரசனா மரைக்காயரின் 'சீறா நபியவதாரப் படலம்' (முதற்பதிப்பு - ஜூலை 1890, முகவுரை, பக்கம் 5-8) என்ற நூலில் இடம் பெற்றுள்ளது.

தொடரும், இன்ஷா அல்லாஹ்.

கருத்துகள் இல்லை: