ஞாயிறு, ஜனவரி 10, 2010

புதுவகை நோய்: இமி-4

உற்ற நண்பர்கள் யாவர்?
அரைகுறை-5 சுரா (3:28) முஃமீன்கள் (தங்களைப் போன்ற) முஃமின்களையின்றி காஃபிர்களைத் தம் உற்ற துணைவர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; அவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அன்றி, (உங்களில்) எவரேனும் அப்படிச் செய்தால், (அவருக்கு) அல்லாஹ் விடத்தில் எவ்விஷயத்திலும் சம்பந்தம் இல்லை; இன்னும் அல்லாஹ் தன்னைப்பற்றி உங்களை எச்சரிக்கின்றான்; மேலும் அல்லாஹ்விடமே (நீங்கள்) மீள வேண்டியதிருக்கிறது.

மேற்காணும் இறைவசனத்தை எடுத்துப் போட்டு, "பிறமதத்தவரோடு முஸ்லிம்கள் உள்ளார்ந்த நட்பு கொள்ள மாட்டார்கள்" என்பதாகத் திண்ணையில் புனித மோசடி செய்யப் பட்டது.

முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காகத் திண்ணையில் எழுதும் சில முஸ்லிம்கள், திண்ணையில் எழுதப்பட்ட என் பள்ளித் தோழன் ஜீனா கணேசனை [சுட்டி-31] விட எனக்கு நெருக்கமானவர்கள் அல்லர். அவன் இன்றும் என் தோழன்தான். எனக்கோ நான் சார்ந்த சமயத்துக்கோ அணுவளவும் கேடு நினைக்காத ஜீனா கணேசனை எதிரியாகக் கொள்ள வேண்டும் என்று எனது மார்க்கம் எனக்குப் போதிக்கவில்லை.

ஏனெனில், வெறும் நண்பர்கள் என்பதற்கும் உற்ற தோழர்கள்/துணைவர்கள் என்பதற்கும் உறவின் கால அளவு, இணைந்து வாழும் சூழல், தூய்மையான அன்பு/நட்பு ஆகியன அளவுகோள்களாக அமைகின்றன. தன்னையும் தனது வாழ்க்கை நெறியையும் மதிக்கக் கூடிய, தன்னைச் சார்ந்த இன்னொருவரை விடுத்து,  தன்னையும் தன் வாழ்க்கை நெறியையும் அழித்தொழிக்க அயராது முயல்பவரை உற்ற தோழராக, உதவியாளராகக் கொள்ள எந்த மதத்தினரும் முன்வர மாட்டார். அதைத்தான் மேற்காணும் இறைவசனங்களும் அதன் பின்னணியும் சுட்டுகின்றன:
"இறைநம்பிக்கையாளர்கள் (தம்மைச் சார்ந்த) இறைநம்பிக்கையாளர்களை விடுத்து, இறைமறுப்பாளர்களைத் தம் உற்ற தோழர்களாக / துணைவர்களாகக் கொள்ள வேண்டாம் - தங்களை அவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காகவன்றி - அவ்வாறு கொள்பவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து எந்தவித உதவியும் இருக்காது. அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறான்! அல்லாஹ்விடமே நீங்கள் அனைவரும் மீள வேண்டியிருக்கிறது. (நபியே!) சொல்லுங்கள்: நீங்கள் மறைத்தாலும் வெளிப்பட உரைத்தாலும் உங்கள் அகத்தில் உள்ளதை அல்லாஹ் நன்கறிவான் ..." [அல் குர்ஆன் 003:028-029] Let not the believers Take for friends or helpers Unbelievers rather than believers: if any do that, in nothing will there be help from Allah: except by way of precaution, that ye may Guard yourselves from them. But Allah cautions you (To remember) Himself; for the final goal is to Allah.Say: "Whether ye hide what is in your hearts or reveal it, Allah knows it all ..." [சுட்டி-32].

"இறைநம்பிக்கையாளர்களே! எனது வழியில் அறப்போர் புரியவும் எனது பொருத்தத்தை வேண்டியும் நீங்கள் (உங்கள் பிறந்த மண்ணைத் துறந்து) புலம் பெயர்ந்திருப்பது உண்மையாயின், எனக்கும் உங்களுக்கும் விரோதியாகத் திகழ்பவர்களை, அவர்கள் மீது நீங்கள் கொண்ட (பழைய) பரிவின் காரணத்தால் (நாட்டின்) இரகசியத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் உற்ற நண்பர்களாக/ பாதுகாவலர்களாகக் கொள்ளாதீர்கள். அவர்கள் உங்களிடம் வந்துள்ள சத்திய(வேத)த்தை மறுத்தவர்கள்; அல்லாஹ்வை உங்கள் (ஒரே) இறைவனாக நீங்கள் ஏற்றுக் கொண்டதற்காக உங்களையும் (என்) தூதரையும் (பிறந்த மண்ணை விட்டு) வெளியேற்றியவர்கள். என்றாலும்கூட நீங்கள் அவர்கள் மீது கொண்ட (பழைய) பரிவினால் (நாட்டின்) இரகசியத்தை அவர்களிடத்தில் வெளிப்படுத்தி விடுகின்றீர்கள். நீங்கள் மறைப்பதையும் வெளிப்பட உரைப்பதையும் நான் நன்கு அறிவேன் ..." [அல் குர்ஆன் 060:001] O ye who believe! Take not my enemies and yours as friends (or protectors),- offering them (your) love, even though they have rejected the Truth that has come to you, and have (on the contrary) driven out the Prophet and yourselves (from your homes), (simply) because ye believe in Allah your Lord! If ye have come out to strive in My Way and to seek My Good Pleasure, (take them not as friends), holding secret converse of love (and friendship) with them: for I know full well all that ye conceal and all that ye reveal ..." [சுட்டி-33].
மேற்காணும் வசனங்களின் பின்னணி:
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் குதிரை வீரர்களான என்னையும் ஸுபைர் இப்னு அவ்வாம் (ரலி),  அபூ மர்ஸத் கினாஸ் இப்னு ஹுஸைன் அல்ஃகனவீ (ரலி) ஆகியோரையும் அழைத்து, "நீங்கள் புறப்பட்டு, 'ரவ்ளத்து காக்' எனும் இடம் வரை செல்லுங்கள்; அங்கு (ஒட்டகப் பல்லக்கில்) இணைவைப்பாளர்களில் ஒருத்தி இருப்பாள். இணைவைப்பாளர்க(ளின் மக்கத்துத் தலைவர்க)ளுக்கு (மதீனாவாசியான) ஹாத்திப் இப்னு அபீ பல்த்தஆ அனுப்பியுள்ள (நம்முடைய படைகளைப் பற்றிய தகவல்களைத் தெரிவிக்கும்) கடிதம் ஒன்று அவளிடம் இருக்கும். (அவளிடமிருந்து அக்கடிதத்தைக் கைப்பற்றி வாருங்கள்)" என்று கூறி அனுப்பினார்கள்.

(நாங்கள் புறப்பட்டுச் சென்றோம்) இறைத்தூதர் (ஸல்) எங்களிடம் குறிப்பிட்ட இடத்தில் அந்தப் பெண் தன்னுடைய ஒட்டகத்தில் சென்று கொண்டிருந்தபோது அவளை நாங்கள் அடைந்தோம். "உன்னிடம் உள்ள கடிதம் எங்கே? (அதை எடு)" என்று கேட்டோம். அவள், "என்னிடம் கடிதம் ஏதுமில்லை" என்று பதிலளித்தாள். அவள் பயணித்த ஒட்டகத்தை நாங்கள் படுக்க வைத்து, அதன் பல்லக்கினுள் (அந்தக் கடிதத்தைத்) தேடினோம்; (கடிதம்) ஏதும் கிடைக்கவில்லை. என் தோழர்கள் இருவரும், "கடிதம் ஏதும் நமக்குக் கிடைக்கவில்லையே!" என்றார்கள்.

நான் (அவளிடம்), "இறைத்தூதர் (ஸல்) பொய் சொல்லமாட்டார் என்று நான் உறுதியாக அறிந்துள்ளேன். எவன் மீது சத்தியம் செய்யப்படுமோ அ(ந்த இறை)வன் மீதாணையாக! நீயாகக் கடிதத்தை எடு(த்துக் கொடு); அல்லது (சோதனையிடுவதற்காக) உன்னுடைய ஆடையை நான் கழற்ற வேண்டியிருக்கும்" என்று சொன்னேன். நான் விடாப்பிடியாக இருப்பதைக் கண்ட அவள், (கூந்தல் நீண்டு தொங்கும்) தன்னுடைய இடுப்புப் பகுதிக்குத் தன்னுடைய கையைக் கொண்டு சென்றாள். அவள் ஒரு துணியை இடுப்பில் கட்டியிருந்தாள். (அங்கிருந்து) அந்தக் கடிதத்தை வெளியே எடுத்துத் தந்தாள்.

அந்தக் கடிதத்துடன் இறைத்தூதர் (ஸல்) அவர்களை அடைந்தோம். கடிதம் கண்ட நபி (ஸல்) அவர்கள், தம் தோழரும் பத்ருப் போராளிகளுள் ஒருவருமான ஹாத்திப் இப்னு அபீ பல்த்தஆ (ரலி) அவர்களை நோக்கி, "ஏன் இப்படிச் செய்தீர்கள்?" என்று கேட்டார்கள். அவர், "அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விசுவாசமுள்ளவனாக நடந்து கொள்வதைத் தவிர வேறெதுவும் எனக்கு நோக்கமில்லை. நான் (என்னுடைய மார்க்கத்தை) மாற்றிக் கொள்ளவுமில்லை; வேறு மதத்தைத் தேடவுமில்லை. இணைவைப்பாளர்(களுக்கு நான் செய்யும் இந்த உதவியால் அவர்)களிடம் எனக்கு ஒரு செல்வாக்கு ஏற்பட்டு, அதன் மூலம் அல்லாஹ் (மக்காவிலிருக்கும்) என் மனைவி மக்களையும் என்னுடைய செல்வத்தையும் பாதுகாக்கவேண்டும் என்றே நான் நினைத்தேன். (என்னைத் தவிர மக்காவிலிருந்து புலம்பெயர்ந்து வந்த) தங்கள் தோழர்கள் அனைவருக்குமே (மக்காவிலுள்ள) அவர்களின் மனைவி மக்களையும் அவர்களது செல்வத்தையும் பாதுகாக்க அவர்களின் செல்வாக்குள்ள மக்கத்து உறவினர்கள் சிலர் மூலமாக அல்லாஹ் வழிவகை செய்(து பாதுகாத்)து இருக்கிறான்" என்று கூறினார்.

இதைக் கேட்ட நபி (ஸல்), "இவர் உண்மை சொன்னார். இவரைப் பற்றி(ப் பிறரிடம்) நல்லதையே கூறுங்கள்" என்று (தம் தோழர்களிடம்) கூறினார்கள்.

அப்போது உமர் இப்னு கத்தாப் (ரலி), "இவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் இறைநம்பிக்கையாளர்களுக்கும் துரோகமிழைத்து விட்டார். என்னை விடுங்கள்; இவரது கழுத்தைக் கொய்து விடுகிறேன்" என்றார்கள். அப்போது நபி (ஸல்), "உமரே! உமக்குத் தெரியுமா? 'நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள்; உங்களுக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது'  என்ற அல்லாஹ்வின் கூற்று, பத்ருப் போரில் பங்கெடுத்தவர்களைப் பற்றியல்லவா?" என்றார்கள்.

இதைக்கேட்ட உமர் (ரலி) அவர்களின் கண்கள் கண்ணீர் உகுத்தன. மேலும், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்"  என்று கூறினார். - அறிவிப்பாளர் : அலீ (ரலி) [புகாரீ6259; சுட்டி-34 ].

இஸ்லாத்துக்காக 'ஹிஜ்ரத்' என்னும் பிறந்த நாட்டைத் துறந்த புலப்பெயர்வு தியாகியாக இருந்தாலும் 'பத்ருப் போராளி' எனும் சிறப்புத் தகுதி மட்டும் இல்லாதிருந்தால் அன்றைய தினம் உமர் (ரலி) வாளுக்கும் ஹாத்திப் (ரலி) கழுத்துக்கும் உறவு ஏற்பட்டிருக்கும்.

மேற்காணும் நிகழ்வு, இஸ்லாத்தைத் தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டதால், தன் மனைவி மக்களையும் சொத்துகளையும் மக்காவில் விட்டு, புலம் பெயர்ந்து அகதியாக மதீனாவுக்கு வந்து, பத்ருப் போரில் இஸ்லாத்தின் விரோதிகளுக்கு எதிராகப் போர் புரிந்த போராளியான ஹாத்திப் இபுனு அபீ பல்த்தஆ (ரலி) எனும் நபித் தோழர் ஒருவரைத் தொடர்பு படுத்தியது என்றாலும் எல்லாருக்கும் எக்காலத்திற்கும் பொதுவானதே.

தம் உறவினர்களின் நலனுக்காக, சொந்த நாட்டின் இராணுவ இரகசியங்களை எதிரி நாட்டுக்குக் கசியவிடுதல் ஒரு முஸ்லிமுக்குத் தகாது என்பது இங்கு இஸ்லாத்தின் மார்க்கக் கட்டளையாகக் கூறப் படுகிறது. இந்தியாவின் பிரிவினை [சுட்டி-35]  சதிக்குப் பிறகு முளைத்த பாகிஸ்தானில் இந்திய முஸ்லிம்களின் உறவினர்கள் இன்றும் வாழ்கிறார்கள் என்பதும் இந்திய இராணுவ இரகசியங்களைப் பாகிஸ்தானுக்குப் 'போட்டுக் கொடுத்தவர்'களின் பட்டியலில் இந்திய முஸ்லிம் எவரும் இடம்பெறவில்லை என்பதும் இங்குக் குறிப்பிடத் தக்கது.

இதுதான் தகிய்யா எனில், இந்திய முஸ்லிம்கள் இந்தவகைத் தக்கியாவில் மிக உறுதியாக இருக்கின்றனர் என்று சொல்லிக் கொள்வதில் எனக்குப் பெருமையே!

-தொடரும், இன்ஷா அல்லாஹ்

ஃஃஃ

 சுட்டிகள்
1 கருத்து:

Jafar ali சொன்னது…

மாஷா அல்லாஹ்!