ஞாயிறு, ஏப்ரல் 19, 2020

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 33

சாதாரணமாக, எந்த வழிகெட்ட ஒரு கவிஞருங்கூட தம் நூலின் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்தையே பாடுவார். இங்குக் குணங்குடி மஸ்தான் அதுகூட பாடவில்லை. இவருடைய கடவுளே இவருடைய குருநாதரான முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் தானே! இவரைப் பொருத்தவரை கடவுள் வணக்கம் பாடுவதும் குருவணக்கம் பாடுவதும் ஒன்றுதான். இனி, பாடலைப் பார்ப்போம்:

இணங்கு மெய்ஞ்ஞானப் பேரின்பக் கடலின்
     இன்னமு தெடுத்து எமக்களிப்போன்
பிணங்கிய கோச பாசமா மாயைப்
     பின்னலைப் பேர்த் தெறிந்திடுவோன்
வணங்கிய தவத்தினோர்க்கு அருள் புரிய
     வள்ளலாய் வந்த மாதவத்தோன்
குணங்குடி வாழும் முஹ்யித்தீனாம் என்
     குருபாதம் சிரத்தின் மேல்கொள்வாம்


“முஹ்யித்தீன் அப்துல் காதிர் (ரஹ்) அவர்கள் தான் தமக்கு இன்பம் செய்விப்பார்களாம். தம்முடைய துன்பம் துயரங்களை எல்லாம் அவர்கள் தான் பேர்த்து எறிவார்களாம். அவர்களை வணங்கித் தவம் செய்பவர்களுக்கு, அவர்கள் அருள் புரியும் வள்ளலாம். அத்தகைய குணங்குடி வாழும் முஹ்யித்தீனாம் என் குருவின் பாதத்தை யாம் தலைமேல் வைப்போமாக” எனப் பாடுகின்றார் குணங்குடி மஸ்தான்.

‘கோசம்’, ‘பாசம்’, ‘மா மாயை’ இவையெல்லாம் சைவ சித்தாந்த சாம்ராஜ்யத்தின் தனிப்பட்ட காப்பிரைட் உரிமைகள். மாற்றாருக்குரிய இந்த காப்பிரைட் சமாச்சாரங்களை எல்லாம் பேர்த்தெடுத்து, குணங்குடி மஸ்தான் இஸ்லாமிய மாளிகை மீது வீசி மாசுபடுத்துகின்றார்.

இந்த அந்நிய சாம்ராஜ்யத்து வார்த்தைகளைப் பிடித்துக்கொண்டு, "இவை உள்ளர்த்தம் பேசும் இறை ரகசியக் குறியீடுகள்" எனப் பிதற்றுகின்றன சில அகமியக் கிறுக்குகள். மஸ்தானின் உளறல்களில் அகமியம் கற்பிப்பதற்காகவே இவர்கள் இன்னும் ஒருபடி மேலே சென்று, “அஷ்ஹது கலிமாவுக்கும் அகமியப் பொருள் உண்டு” என அளந்துவிடுகின்றனர்.

அல்லாஹ்வும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களும் காட்டித் தராத, கற்றுத் தராதவற்றையெல்லாம் கடை விரித்துப் பேசும் இந்த அகமிய அதிமேதாவிகள், மெய்ஞான நாதாக்களாம்! ஸூஃபிகளாம்! இவர்களுடைய வெற்று வார்த்தைகள் ஸூஃபித்துவக் கோட்பாடாம்.

சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், நீர், நெருப்பு, காற்று எல்லாம் கடவுளர்களே என அத்துவைதம் பேசும் புழுத்துப் போன சித்தாந்தமே கிரேக்கத் தத்துவங்களாகும். அவற்றுக்கு எந்த விதத்திலும் குறைந்தவையல்ல இந்து மத வேதாந்தங்கள்.

இவ்விரண்டையும் எடுத்து வந்து புனிதமிக்க இஸ்லாமியப் பேழையில் திணித்தவர்கள் பெரும்பாலான நம் ஸூஃபிக் கவிஞர்களாவர். இவர்களுடைய ஸூஃபித்துவ வலையில் சிக்கிக் கொண்ட அப்பாவிப் பூச்சிகள் மீது ஒருவித மயக்க மருந்து தெளிக்கப்படுகின்றது. அதிலிருந்து அவ்வளவு எளிதில் இந்தப் பூச்சிகளால் மீள முடிவதில்லை. கடைசியாக நரகின் எரிவிறகுகளாக இவைகளை இட்டுச் செல்லக்கூடிய விஷம் கலந்த மதுபானம் தான் ஸூஃபிஸமாகும்.

- தொடரும், இன்ஷா அல்லாஹ் ...

கருத்துகள் இல்லை: