புதன், ஏப்ரல் 29, 2020

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 34

சந்நியாசியின் சல்லாபம்

இஸ்லாத்துக்கு முற்றிலும் முரணான ஒன்றே ஸூஃபிஸமாகும். இந்த ஸூஃபிஸ வியாதியை முஸ்லிம்களிடமிருந்து முற்றாகக் குணப்படுத்தினால் தான் இஸ்லாம் நலம் பெறும்.

ஸூஃபிஸத்தை ஏன் வியாதி என்கின்றோம்?

கிரேக்க கீழை நாட்டுச் சித்தாந்தங்களைப் பார்த்து இஸ்லாத்துக்குள்ளும் அத்துவைதக் கோட்பாட்டைத் திணித்தவர்கள் இந்த ஸூஃபிஸவாதிகளே. இறைவனோடு இரண்டறக் கலப்பதில் இவர்களுக்கு அப்படி என்னவோ ஓர் அலாதி இன்பம்! அல்லாஹ்வோடு எந்த அடியானும் இரண்டறக் கலந்துவிட முடியாது என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடாகும்.

அல்லாஹ், ஒரே இறைவனே! அவன், ‘அஹது’ ஆகவே இருக்கின்றான். இரண்டு என்கிற பேச்சுக்கே அங்கு இடம் கிடையாது. அப்படியிருக்க, பலவீனமான அடியானும் சர்வ வல்லமையுள்ள அல்லாஹ்வும் கலந்து, இரண்டு பேரும் வெவ்வேறு என்ற தன்மையிலிருந்து நீங்கி, இரண்டும் ஒன்றாகச் சேர்ந்து, இரண்டற ஆகிவிடுகின்றார்களாம். இங்ஙனம் இரண்டறக் கலக்கும் தன்மையே அத்துவைதம் ஆகும்.

இப்படியிருக்க, அடியானும் ஆண்டவனும் இரண்டறக் கலந்து ஒன்றுக்குள் ஒன்றாகி நிற்கின்ற நிலைதான் பேரின்ப நிலையாம். இப்பேரின்ப நிலையைப் பாடுவதற்குச் சில வழிகெட்ட கவிஞர்கள் சிற்றின்ப உருவகங்களை அமைத்துக் கவிதை இயற்றி இருக்கின்றார்கள்.

சைவ வைணவத் தமிழிலக்கியங்களில் இறைவனைக் காதலியாகவும் தன்னைக் காதலனாகவும் உருவகித்துக்கொண்டு புலவர்கள் பாடுகின்ற இத்தகு இயல்பினை சகஜமாகக் காணலாம். இதை பக்தி இலக்கியத்தின் உன்னத மரபு என அவர்கள் போற்றிக் கொண்டாடுவர். ஆனால் இஸ்லாத்தில் அப்படியெல்லாம் உருவகிப்பதற்கோ பாடுவதற்கோ கிஞ்சிற்றும் அனுமதி இல்லை. அவர்களுக்கு வேண்டுமானால் அது உன்னத மரபாயிருக்கலாம். ஆனால் இஸ்லாத்தைப் பொருத்தவரை அது கண்டிக்க வேண்டிய கழிசடை மரபேயாகும்.

அல்லாஹ்தான் எஜமானன். மனிதப் படைப்புகள் அனைத்தும் அவனுடைய அடிமைகளே. ஏன்? நபி (ஸல்) அவர்களைக்கூட, ‘அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ’ (முஹம்மது – ஸல் அவனுடைய அடிமை) என்றுதானே உறுதிப் பிரமாணம் கூறுகின்றோம்?

நபி (ஸல்) அவர்களே அல்லாஹ்வை ஆண்டவன் என்றும் தன்னை அடிமை என்றும்தானே கூறினார்கள்? அல்லாஹ்வும் நபி (ஸல்) அவர்களும் எந்நிலையிலும் இரண்டறக் கலந்து ஒன்றாக ஆகிவிடவில்லையே! இப்படியிருக்க இந்த ஸூஃபிஸவாதிகள் இறைவனோடு இரண்டறக் கலந்துவிடுகின்றார்கள் என்று கருதுவது இஸ்லாத்துக்கு ஒவ்வாத ஒன்றாகும்.

இனி, குணங்குடியாருக்கு வருவோம். குணங்குடியார் அல்லாஹ்வோடு இரண்டறக் கலந்து பேரின்ப நிலை பெறுவதற்காக வழிகெட்ட கவிஞர்களைப் பின்பற்றி சிற்றின்ப உருவகம் அமைத்துப் பல பாடல் தொகுப்புகளைப் பாடியுள்ளார்.

“அவன் யாரையும் பெறவுமில்லை; யாராலும் பெறப்படவுமில்லை. மேலும், அவனுக்கு நிகராக யாரும் / எதுவும் இல்லை”

என இறைமறை இயம்புகிறது. ஆனால் குணங்குடி மஸ்தானோ இறைவனை ஒரு பெண்ணுக்குச் சமமாக வைத்து உருவகம் செய்கின்றார். இது அவர் செய்த முதல் தவறென்றால், இறைவாகிய அப்பெண்ணை இவருடைய காதலியாகக் கற்பனை செய்கின்றாரே, அது இரண்டாவது பாவமாகும். இனி, அக்காதலியாகிய அல்லாஹ்வோடு இக்காதலனாகிய கவிஞன் கூடுவதையும் ஊடுவதையும் சல்லாபிப்பதையும் மனம் போன போக்கில் பாடிச் செல்வது இறைவனால் மன்னிக்கப்படாத மாபெரும் பாவமாகவே நமக்குக் காட்சியளிக்கிறது.

இவ்வாறு காமக் களியாட்டப் பாடல்களைப் பாடிப் பாடி இணைகின்றாராம் குணங்குடி மஸ்தான். செக்ஸ் சாமியார் ரஜனீஷ்கூட ‘காமத்திலிருந்து கடவுளுக்கு’ என ஒரு நூல் எழுதியுள்ளாரன்றோ? அதே பாணிதான் இந்த மஸ்தானிடமும் காணப்படுகின்றது.

நிராமயக் கண்ணி, பராபரக் கண்ணி, ரஹ்மான் கண்ணி, மனோன்மனிக் கண்ணி, நந்தீஸ்வரக் கண்ணி ஆகிய குணங்குடி மஸ்தானுடைய கண்ணிவகைப் பாடல்களை எடுத்துக்கொள்வோம். இவற்றிலெல்லாம் புலவர் இறைவனைப் பெண்ணாக உருவகித்துக்கொண்டு தாறுமாறாகக் கற்பனை செய்து பாடியுள்ளார்.

இறைவனோடு இரண்டறக் கலந்துவிடுகின்ற வழிகெட்டக் கோட்பாட்டினைக் குணங்குடி மஸ்தான் கொண்டிருந்தார் என்பதற்கு அவருடைய பாடல் வரிகளே சான்று பகர்கின்றன:

அத்து விதமே அறிவகண்டி தாகாரக்
       கர்த்தவியமே என் கண்ணே பராபரமே
                            (கண்மணிமாலைக் கண்ணி, பாடல்-1)

அத்துவிதம் வாழி அறிவுகண்டிதம் வாழி
        கர்த்தனே நீ வாழி கண்ணே பராபரமே
                             (கண்மணிமாலைக் கண்ணி, பாடல்-94)

என்பவை அத்துவைதத்துக்கு வக்காலத்து வாங்கி இவர் பாடியுள்ள பாடல்களாகும்.

 தொடரும், இன்ஷா அல்லாஹ் ...

கருத்துகள் இல்லை: