திங்கள், ஜூலை 03, 2006

ஒரு 40 பக்க நோட்டும் இரு நிகழ்வுகளும்

"வகாபிகள் தர்காக்களை இடிக்க கடப்பாரைகளை தூக்கிக் கொண்டு வ்ருகிறார்கள். சூபிஞானிகளின் சமாதிகளை தோண்டிப்பார்க்க மண்வெட்டிகளோடு அலைந்து திரிகிறார்கள்"
என்பதாக குலாம் ரஸூல் திண்ணையில் குற்றம் சாட்டியிருந்தார். இக்குற்றச் சாட்டு எம் தலைவரை நோக்கியே வீசப் படுவதால் அவர்தாம் இதற்கு பதில் சொல்லத் தகுந்தவர். பிறந்த நாட்டை விட்டுத் துரத்தப் பட்ட அவர், எட்டே முக்கால் ஆண்டுகள் கழித்துத் திரும்பி வந்தபோது அந்த நாடே அவரிடம் தன்னை ஒப்படைத்தது. "இன்றைய நாளில் பழிக்குப் பழி - இரத்தத்திற்கு இரத்தம் என்பதில்லை; எல்லாருக்கும் பொது மன்னிப்பு" என்று அறிவித்தவர், உருவங்களையும் (+)உயர்த்திக் கட்டப் பட்ட சமாதிகளையும் அழித்தொழிப்பதில் மட்டும் மிக உறுதியாயிருந்தார். ஆதி இறையில்லமான கஃபாவுக்கு உள்ளே இருந்த தம் பெரும் பாட்டனார், அண்ணல் இபுராஹீமுடைய உருவத்தையும் அவர் விட்டு வைக்கவில்லை. அவர்தாம் எங்கள் தலைவர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
***
"வளக்கமா செய்யிறது .. இந்த வருஷமும் செய்யுறோம். இன்னக்கி ஒங்க தெருவுல வசூலு. எல்லாரும் எளுதியிருக்காங்க. நீங்களும் ஒங்களாலெ ஏண்டதெ .."

என் முன்னே நீட்டப் பட்ட அந்த 40 பக்க நோட்டையும் பக்கத்துத் தெருவிலிருந்து வசூலுக்கு வந்திருந்தவர்களையும் மாறி-மாறிப் பார்த்து விட்டுக் கேட்டேன்: "என்ன வசூலு?"

"அசனார்($) ஒசனாருக்கு(#) வர்ர மாசம் கந்திரில்ல? தம்பிக்கு தெரியாதா? நாங்க பெரிய தைக்கா சார்பா வந்திருக்கோம்"

"ஓ.. ஒரு தடவ ரிக்கார்ட் டான்ஸு ஆட வந்த பொண்ணுங்களோட நம்ம ஆளுக்களும் மேடையிலெ ஏறினதா ..?"

"அது பளய கத தம்பி. அதெ உடுங்க. நீங்க எளுதுங்க "

"எளுதுறது இருக்கட்டும். எனக்கு ஒரு சந்தேகம் ரொம்ப நாளா. ஒங்கள மாதிரி இதெ எல்லாம் எடுத்து நடத்துவறங்களுக்குத்தான் தெரிஞ்சிருக்கும்"

"என்னா தம்பி?"

"இல்லெ .. இந்த அசனாரு ஒசனாருங்கிறது யாரு சாபு?"

சாபுவின் முகம் சட்டென்று மாறியது. "நெசமாவே தெரியாமத்தான் கேக்கிறியளா? அசனாரு ஒசனாரு ரஸூலுல்லாவோட பேரப் புள்ளைங்க" 

"அசனாரெ மதீனாவுலேயும் ஒசனாரெ கர்பலாவுலேயுமுல்ல அடக்கிருக்கு? அப்போ .. நம்ம ஊர்ல அவுங்களுக்கு எப்டி கபுரு வந்துச்சி?"

"அது வந்து .. தம்பி .."

கூட வந்திருந்த ஒருவர் குறுக்கிட்டார் "சாபு, நோட்ட வாங்கிட்டு வாங்க. இவன் நஜாத்துக்காரன். சரியான வஹ்ஹாபியா இருப்பான்"

ஏற்கனவே வசூல் கொடுத்திருந்த நாலைந்து பேர் எங்களை நோக்கி வந்தனர். நான் சிரித்துக் கொண்டே சாபுவிடம் கேட்டேன்:

"என்ன வேணும்?"

"நோட்டு புக்கு"
***
இந்நிகழ்வுக்குப் பின் பல ஆண்டுகள் கழித்து ஒருவரிடமிருந்து எனக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது - என்னைச் சந்திக்க விரும்புவதாக. "என்ன விஷயம்?" என்று மட்டும் கேட்டேன். "பள்ளிவாசல் கட்ட வசூல் ஆரம்பிச்சிருக்கோம்; உதவி வேணும்". இடம் சொல்லி வரச் சொன்னேன். சந்தித்துக் கொண்டோம்.

எங்கோ பார்த்த நினைவு. "நீங்க ..."

அறிமுகம் செய்து கொண்டார் அந்த இளைஞர்.

"பள்ளியெ எந்த எடத்துலெ கட்டப் போறீங்க?"

"எங்க தெருப் பக்கமா நீங்க வந்து ரொம்ப நாளாயிட்டுதுன்னு நெனக்கிறேன். கட்டுமான வேல ஆரம்பிச்சாச்சு"

"ஆமா, அதான் எங்கேன்னு கேட்டேன்"

"எங்க பொறுப்புல இருந்த பெரிய தைக்கால இடிச்சுட்டுத்தான்".

வஹ்ஹாபிகளின் கடப்பாரைகளுக்கும் மண்வெட்டிகளுக்கும் வேலை இருந்து கொண்டுதானிருக்கிறது - இப்போது அவர்தம் வீட்டுத் தோட்டத்தில்.
ஃஃஃ
__________________________________________________
(+) அபுல்ஹய்யாஜ் அல்அஸதீ என்ற நபித்தோழர் கூறுகிறார்: "அல்லாஹ்வின் தூதர் என்னை நியமித்த அதே பணிக்காக உன்னை நான் நியமிக்கிறேன். உயர்(த்திக் கட்டிக் கண்ணியப் படு)த்தப் பட்ட எந்தச் சமாதியையும் தரைமட்டமாக்காமல் விட்டு வைக்காதீர் ..." என்பது அலீ அவர்களால் எனக்கு இடப் பட்டக் கட்டளையாகும். [முஸ்லிம் 1609, திர்மிதீ 970, நஸயீ 2004, அபூதாவூத் 2801, அஹ்மது 622; 703; 1012; 1111; 1175].

($) பெருமானாரின் மூத்த பேரன், அண்ணல் ஹஸன் (ரலி)

(#) பெருமானாரின் இளைய பேரன், அண்ணல் ஹுஸைன் (ரலி)

("முகமது நபியைப் பெருமானார் என்று வகாபி தனது கலங்கலான குழப்பமான மொழியில் குறிப்பிட்டு, பெயர் குழப்பத்தின் மூலமாகக் கருத்தியல் குழப்பத்தை உருவாக்கப் பார்க்கிறார்"என்ற குற்றச் சாட்டு குலாம் ரஸூலிடமிருந்து வந்தாலும் வரும்).

கருத்துகள் இல்லை: