செவ்வாய், ஜூலை 04, 2006

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 2

அல்குர்ஆனின் கூற்றை மெய்ப்பிப்பது போலவே, இலக்கியங்கள் அனைத்திலும் ஏராளமான பொய்கள் இடம் பெற்றிருப்பதைக் காண்கிறோம். கவிஞர்கள், தாம் கேள்விப்பட்டதை எல்லாம் அப்படியே காவியமாகவும் கவிதையாகவும் வெறும் சுவைக்காகப் பாடிக் குவித்துள்ளமையே இதற்குக் காரணமாகும். தாம் கேள்விப்பட்டவை எந்த அளவுக்கு உண்மையானவை எனச் சிந்தித்து, சீர்தூக்கிப் பார்த்து மெய்ப்பொருளைக் காணுகின்ற அறிவு பெறுதலை அடகு வைத்து விடுகின்றது கவிதையுள்ளம். பெரும்பாலானக் கவிஞர்கள் நிகழாதவற்றையெல்லாம் நிகழ்ந்தது போலக் கற்பனை செய்து பாடித் தீர்த்தனர். அத்தகைய பொய்ப் பாடிகளை - கவிஞர்களை - ஒரு கூட்டம் பின்பற்றி வழிகேட்டில் மூழ்கிக் கிடக்கக் காண்கிறோம். இந்நிலை, அல்குர்ஆன் அருளப்படுவதற்கு முன்னரும் இருந்தது; பின்னரும் இருந்தது; இன்றும் இருக்கின்றது.
உண்மைகள் வேதங்கள் என்போம் - பிறிது --- உள்ள முறைகள் கதையெனக் கண்டோம் நன்று புராணங்கள் செய்தார் - அதில் --- நல்ல கதைகள் பலப்பலத் தந்தார் கவிதை மிக நல்லதேனும் - அக் --- கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்.
என இதனையே தமிழ்ப் பெருங்கவிஞர் பாரதியாரும் பாடுகின்றார். புராணக் கவிதைகள் பலவற்றைக் கவிஞர்கள் பாடினர். கவிதை நன்றாகத்தான் இருக்கின்றது. எனினும் அக்கவிதை சொல்லும் கதைகள் அனைத்தும் கடைந்தெடுத்தப் பொய்களாகும் என்கிறார் கவி பாரதி. கவிஞர் சுரதா கூறுகின்றார்:
எதார்த்தத்தில் எது உண்மையோ அதை நம்மவர்கள் ஒப்புக் கொள்வதில்லை. அடிப்படையை மறந்து விட்டுப் பின்னாளில் அதன் மீது எழுந்தக் கற்பனையைப் பெரிதாக நினைக்கின்றோம். ஒரு நாட்டில் ஒழுக்கம் இருக்க வேண்டுமென்றால் இலக்கியம் வளரக் கூடாது என்று கூடக் கூறுவேன். ஏனென்றால் அது கவர்ச்சி மயக்கத்தை உண்டாக்கும். மூலப் பொருளைக் காட்டாது. இலக்கியம் வந்த பிறகு உழைப்பு வீணாகி விட்டது. இன்னொன்று, கவிதை நயம் பார்க்க ஆரம்பித்து விட்டோம். "அருமையாக எழுதியிருக்கிறான்" என்று சொல்கிறானே தவிர சரியாக எழுதியிருக்கிறான்" என்று சொல்கிறானா? -நேர்காணல் சுபமங்களா, ஆகஸ்ட் 1993.
கவிதை இலக்கியத்தின் தீமையைக் கவிஞர் சுரதா இங்குத் தெள்ளத் தெளிவாகச் சுட்டிக் காட்டியுள்ளார். பெரும்பாலான கவிஞர்களின் பொய்க்கவிதை காரணமாக, கவிதை இலக்கியமே கூடாது என்று சொல்லும் அளவுக்கு ஒரேயடியாக இதனை ஒழித்துக் கட்டக் குரல் கொடுக்கிறார் சுரதா. ஆனால், அல்குர் ஆன் இலக்கியத்தை - கவிதையைச் சில நிபந்தனைகளுடன் ஏற்றுக் கொள்கிறது. "தங்களுக்கு அநீதி இழைக்கப் பட்டதற்காகப் பதிலுக்குக் கவிதை பாடுபவர்களாகிய - நம்பிக்கை கொண்ட - நற்செயல்கள் புரிகின்ற - அல்லாஹ்வை அதிகம் நினைவு கூர்கின்ற கவிஞர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்கின்றான்" எனக் குர்ஆன் [026:227] கூறுகிறது. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் எதிரிகளுக்குக் கவிதையால் பதிலடி தருகின்ற கவிஞர்களைக் கீழ்க்காணும் ஹதீஸில் ஊக்குவித்துள்ளார்கள்: "அவர்களுக்கு பதிலடி கொடுங்கள், உம்முடன் ஜிப்ரீல் துணையிருப்பார்" - முஸ்லிம் 4541. நல்ல கவிதைகளைப் பாடுவோருடன் வானவர் ஜிப்ரீல் இருப்பது போலவே, தீய கவிதைகளைப் பாடுவோருடன் ஷைத்தான் கலந்திருக்கிறான். எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருளின் மெய்ப்பொருளை அறியும் ஆர்வம் கொள்ளாமல், தாம் கேள்விப் பட்டதையெல்லாம் கூறுவோரும் கவிஞர்களுள் உளர். அவர்கள் பொய்யையே புகல்கின்றனர். பொய்யுரைக்கும் அந்தப் பாவிகள் ஒவ்வொருவர் மீதும் ஷைத்தான்கள் புகுந்து விடுகின்றனர். இப்படிப் பட்ட இயல்புடைய கவிஞர்களையும் இக்கவிஞர்களைப் பின்பற்றுகிறவர்களையும் 'பாவிகள்' எனவும் 'வழிகேடர்கள்' எனவும் ஒருசேர இறைவன் கண்டித்துள்ளான். அந்த இறைவசனங்களின் அடிப்படையில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களை அணுகும்போது ஷைத்தான்கள் கோலோச்சுகின்ற எத்தனையோ பொய்மொழிகள் அவற்றினூடே விரவிக் கலந்துள்ளமையைக் காண முடிகின்றது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்த்து மக்காவின் இறைநிராகரிப்பாளர்கள், "இவர் ஒரு கவிஞர்" என்று பழிக்குற்றம் சாட்டினர் [021:005]. அவர்களுக்குப் பதிலுரைப்பதைப்போல, "நாம் இவருக்குக் கவிதையைக் கற்றுக் கொடுக்கவில்லை; அது இவருக்குத் தகுமானதன்று" [036:069] என்று அல்லாஹ் தன் மறையில் தெளிவுறுத்தினான். வருங்காலத்தில் உறுதியாக இன்னதுதான் நிகழும் என்பதை அறியாத நிலையில் அதைப் பற்றிப் பொய்யாக முன்னறிவிப்புக் கூறுகின்ற குறிகாரனையும் பகுத்தறிவிழந்து உளறுகின்ற பைத்தியக் காரனையும் பொய்புனைந்து பாடும் கவிஞனையும் ஒருசேர வைத்துப் பேசுகின்ற திருமறை வசனங்களும் [052:029-030] காணக் கிடைக்கின்றன. கவிஞர்கள் தங்களுடைய கவித்திறனால் பொய்யான ஒன்றையும் மெய்போலப் பாடிவிடுகின்ற சாதுர்யம் படைத்தவர்கள். இறைவன் சொல்லாதவற்றை "இறைவன் சொன்னான்" என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறாதவற்றை "நபி கூறினார்" என்றும் பாடும் தன்மையை நம் தமிழ்க் கவிஞர்களிடம் பரவலாகக் காண முடிகிறது. தாம் கேள்விப் பட்டதையெல்லாம் எடுத்து வைத்துக் கொண்டுக் கவிதை புனைகின்ற இவர்களுள் பெரும்பாலோர் பொய்யர்களே எனும் இறைவசனத்திற்கேற்ப, இல்லாதவற்றையெல்லாம் இருப்பதுபோலச் சில கவிஞர்கள் பாடிச் சென்றுள்ளனர். - தொடரும், இன்ஷா அல்லாஹ்.

2 கருத்துகள்:

புதுச்சுவடி சொன்னது…

பேராசிரியர் ஹஸ்ஸான் அவர்களின் சிறந்த ஆய்வு நூலை வலைப்பூவில் பதிவது பாராட்டத் தக்க சேவை.

இஸ்லாமின் பெயரால் தமிழ் முஸ்லிம் சமூகத்தில் செருகப்பட்ட புதுமைகளையும் புகுத்தல்களையும் அடையாளம் காட்டும் நூல் இது.

இணைய உலகில் வலம் வரும் ஸூஃபிப் பித்தர்களின் சித்தம் தெளிய இச்சேவை தேவை.

வஹ்ஹாபிக்கு வாழ்த்துக்கள்.

வஹ்ஹாபி சொன்னது…

தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிகள், புதுச்சுவடி!