ஞாயிறு, செப்டம்பர் 08, 2024

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 42

’அகத்தீசன் சதகம்’ என்பது குணங்குடியார் எழுதியுள்ள ஒரு பாடல் நூல். இதில் நூறு பாடல்கள் உள்ளன. பத்து நிலைகளின் கீழ் பத்துப் பத்துப் பாடல்களாக இவை பாடப்பட்டுள்ளன.

குருவருள் நிலை, தவ நிலை, துறவி நிலை, நியம நிலை, வளி நிலை, தொகை நிலை, பொறை நிலை, காட்சி நிலை, தியான நிலை, சமாதி நிலை ஆகியன பத்து நிலைகளாகும். இந்நூலின் பாடல்கள் அனைத்திலும் கடைசி வரி ஒன்று போலவே அமைந்துள்ளது. 

மா குணங்குடி வாழும் என் அகத்தீசனே! மவுன தேசிக நாதனே! என்பது அந்த வரியாகும்.

அகத்தீசன் சதகத்தில் ‘குருவருள் நிலை’யின் கீழுள்ள ஏழாவது பாடலை மட்டும் இங்கு ஒருசோற்றுப் பதமாகப் பார்ப்போம்:

முத்துநவ ரத்தினமே, முழுவயிர மலையே, என் முன்னின்றுனருள் புரியவும்

முச்சுடர் பரப்பு செம்பொற் கமலடியை நான் முத்தமிடவருள் புரியவும்

சித்தனே சித்தன் தொழு முத்தனே செவியுலுப தேசமெற் கருள் புரியவும்

தெட்சிணா மூர்த்தமே படம்வைத் திக்கணஞ் சின்மயமருள் புரியவும்

அத்தனே யப்பனே ஐயனே யுய்யவென யடிமை கொண்டருள் புரியவும்

ஆனந்தமான பரமானந்த திருநடனமாடி நின்றருள் புரியவும்

வைத்த கருணைக்குரிய தவராஜ சிங்கமே வரவேண்டு மென்றனக்கருகே

மா குணங்குடி வாழும் என் அகத்தீசனே! மவுன தேசிக நாதனே! 

இப்படி அமையும் குணங்குடிப் பாடல்களில் சுட்டப்படும் ‘மவுன தேசிகன்’, தாயுமானவருடைய மௌனகுரு சுவாமிகளின் என்லார்ஜ் ஸைஸ் போலவே காணப்படுகின்றார்.

- தொடரும்

சனி, நவம்பர் 12, 2022

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள்-41

குணங்குடியாருடைய வாழ்க்கைமுறை பற்றியும் அவருடைய ஆன்மஞான பரிபாஷைகள் பற்றியும் அவர் வாய்மொழியாகவே நிறைய பாடல்களைப் பார்க்கின்றோம். குணங்குடியாரின் வாழ்க்கை முறைகள் அவருடைய ஒரிஜினல் வாழ்க்கையன்று. மாறாக, அது வேறொரு மூலபாடத்தின் மறுபதிப்பேயாகும். இப்படிப்பட்ட மறுபதிப்பு வாழ்க்கையைக் குணங்குடியாரிடம் மட்டுமல்ல, இன்னும் பல இஸ்லாமிய ஸூஃபிக் கவிஞர்களிடமும் நாம் நிறையவே காணலாம்.

தமிழ்நாட்டின் சில ஞானிகளுக்கே உரிய இத்தகைய வாழ்க்கை முறைகளைத்தான் நம் தமிழகத்தின் தர்காக்களின் ஸூஃபிக் கவிஞர்களும் கடைப்பிடித்துள்ளனர்.

குணங்குடியாரின் ஆன்மீக வாழ்க்கைமுறை எப்படி இருந்தது? என்பதற்கு விடைகாண வேண்டுமென்றால் தாயுமானவரின் வாழ்க்கை முறையைத் தெரிந்துகொண்டாலே போதுமானதாகும். ஆகவே, தாயுமானவரின் வாழ்க்கை முறையைப் பற்றி இங்கு நாம் சுருக்கமாகக் காண்போம். இதைக் காண்பதன் மூலம் பின்வரும் பகுதிகளில் குணங்குடியாரை மட்டுமின்றி பீரப்பா போன்றோரையும் நாம் எளிதில் புரிந்துகொள்ள வசதியாயிருக்கும்.

‘தாயுமானவர் திருப்பாடல் திரட்டு’ (அமெரிகன் டைமன் அச்சகம், சென்னை. 1919) என்னும் நூலின் 13ஆவது பக்கத்தில் தாயுமான சுவாமிகள் சரித்திரத்தைப் பற்றிப் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது:

தாயுமானவர் சிவயோகமும், சிவத்தோடு இரண்டறக் கலந்து நிற்றலாகிய அத்துவைத சாயுச்சிய ஆனந்தமும் கைவரப் பெற்றவர். தாயுமானவருடைய குருவாகிய மௌனகுரு சுவாமிகள் தாயுமானவரை நோக்கி, “சும்மா இரு” எனத் திருவாய் மலர்ந்தருளி உபதேசித்தார். பின்னர் ஒருமுறை தாயுமானவரை அருகழைத்து அவருக்கு ஆன்ம ஞானத்தைப் போதித்து, “ஏ மாணவா! நீ அஞ்செழுத்தால் சில ஆகமப் பூஜைகளை செவ்வனே செய்து முடித்து, வெளிப்புலன்களிலே சிந்தை நாடா வண்ணம் சரீரத்தை, சிரசு, கழுத்து, இடை முதலிய அவயங்கள் நேராகத் தம்பத்தைப் போல் அசையாது நிறுத்தி, இடை பிங்கலைகளின் வழித்தாக இயங்கா நின்ற பிராணவாயுவை அம்ச காயத்திரியாகிய அஜபா மந்திரத்தினாலே தடுத்து, சுழுமுனை நாடியின் வழியாகச் செலுத்தி, இருகண்களும் புருவ மத்தியே நாடியவண்ணமாகச் சிதாகாயமாகிய ஆன்ம நிலய அந்தர் முக நாட்டத்தில் மனத்தை நிலைநிறுத்தித் தியானமாகச் சமாதியிலிருந்து சதா நிஷ்டை புரிந்து வருவாயாக! இதுவே மெஞ்ஞான நிட்டையாகிய சிவயோகமாம். இங்ஙனம் சதா நிஷ்டையிலிருந்து வருங்கால் அந்தர் முகத்திலே நாத ஒலிகளும் விந்து ஒலிகளும் தோன்றும். அவற்றுள் அழுந்தாது ஆன்மாவின்கண் அழுந்தி உறைந்து நிற்றல் வேண்டும். அப்போது அகண்ட பரிபூரணாகார சிற்சிகோதய சின்மயானந்த வஸ்துவாகிய சிவோதயப் பிரகாசமுண்டாகி உன்னை விழுங்கி நிற்குமாதலால், அந்நிலையில் உன் செயல் ஒழிந்து, நீ சிவத்துடன் இரண்டறக் கலந்து, அத்துவைத நிலையடைந்துவிடுவாய். அப்போது  எங்கும் நீ நிவனொன்றையே காண்பாய். இதுவே சித்தாந்த மஹாவாக்கிய உண்மைப் பொருளாகும். இந்நிலையே சலியாது நிலை பெறுக!”

மௌனகுரு சுவாமிகள் தாயுமானவருக்குப் போதித்த இந்த வாழ்க்கையைத்தான் குணங்குடியாரும் மேற்கொண்டிருக்கின்றார். நபி (ஸல்) நமக்குப் போதித்துத் தந்த வாழ்க்கையைப் பற்றி இவர் அலட்டிக்கொண்டதாகத் தெரியவில்லை.

… தொடரும்

வியாழன், அக்டோபர் 13, 2022

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள்-40

கி.பி 1705ஆம் ஆண்டிலிருந்து 1742ஆம் ஆண்டுவரை வாழ்ந்திருந்த தாயுமானவர், ஒரு இந்துமத ஸூஃபிக் கவிஞர். குணங்குடி மஸ்தான் என்ற இஸ்லாமியச் சித்தரோ கி.பி.1788ஆம் ஆண்டில் தொண்டியில் பிறந்தவர். தாயுமானவர் இறந்து, 47 ஆண்டுகளுக்குப் பிறகு குணங்குடி மஸ்தான் பிறக்கின்றார்.

தாயுமானவர் ஒரு ‘முஷ்ரிக்’ கவிஞர். இதில் யாருக்கும் சந்தேகமேயில்லை. இந்த முஷ்ரிக்கின் வழித்தடத்தில் அப்படியே கால் பதித்துக் கவி தொடுக்கின்றார் குணங்குடியார்.

தாயுமான சுவாமிகள் திருப்பாடல் திரட்டு’ நூலின் முகப்புப் பக்கத்தில், ஶ்ரீ தாயுமான சுவாமிகளின்’ உருவப் படமொன்று இடம்பெற்றிருக்கக் காணலாம்.


அதுபோலக் ‘குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்கள் திருவாய் மலர்ந்தருளிய திருப்பாடல் திரட்டி’லும் குணங்குடி மஸ்தானின் உருவப் படமொன்று தவறாமல் தரப்பட்டிருக்கும்.

இரண்டு உருவப் படங்களிலும் எப்படி ஒரு கோவணம் மட்டுமே உடையாக இருக்கின்றதோ இதுபோல இரண்டு புலவர்களின் பாடல்களிலும் ஒரே அத்துவைதக் கோவணமே இழையோடிக் கிடப்பதைக் காணலாம்.

எவன் இன்னொரு சமயத்தவரின் கலாச்சாரங்களை தன்னில் வரித்துக்கொண்டு, அவர்களைப் போன்று செயல்படுகின்றானோ அவனும் அவர்களைச் சார்ந்தவன்தான்” என்பது நபிமொழி (அபூதாவூத் 4031).

பிறரின் ஆச்சார-அநுஷ்டானங்களைப் பின்பற்றி, அதுபோன்று நடப்பவன் நம்மைச் சார்ந்தவனல்லன்” என்பதும் நபிமொழி (திர்மிதீ).

மேற்காணும் நபிமொழிகளைப் படித்தறிந்துள்ள நாம், தாயுமானவரின் பிரதிபலிப்பைக் குணங்குடியாரிடம் பார்க்கின்றபோது எத்தகைய முடிவுக்கு வரவேண்டியதிருக்கும்?

அப்படி என்னதான் தாயுமானவரின் பிரதிபலிப்புக் குணங்குடியாரிடம் காணப்படுகிறது என வினவலாம். இரண்டு பேருடைய பாடல் போக்குகள், கருத்துப் பரிமாற்றங்கள், சொல்லடுக்குகள் ஆகியவை மட்டுமல்லாது வாழ்க்கை முறைகளிலும் தாயுமானவரை அப்படியே பின்பற்றி வாழ்கின்றார் குணங்குடியார்.

- தொடரும்

திங்கள், ஜனவரி 24, 2022

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 39

குணங்குடி மஸ்தான், அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களைத் தன்னுடைய ஆன்மீக குருவாகவும் அதற்கும் மேலாக, அல்லாஹ்வுக்கே இணையாகவும் பல பாடல்களில் பாடிச் செல்கின்றார். அத்துவைதக் கவிதைகளைக் குஞ்சு பொரிப்பதற்காக அவர் தமிழ்நாட்டுத் தாயுமானவரிடமிருந்து ஏகப்பட்ட முட்டைகளை எடுத்துக் கொள்கின்றார். தாயுமானவரின் முட்டைகளை மட்டுமல்ல, அவரின் கவிதைப் பறவைகளைக்கூட அப்படியே வளைத்துப் பிடித்து, இலேசாகச் சாயம் தடவி தன்னுடையதாகவே காட்டிக் கொள்கின்றார்.

அப்படிப்பட்ட இடங்களில் மாற்றாருக்குரிய கடவுள் பெயர்கள், அவர்களுடைய பக்திநெறிக் குறியீடுகள் ஆகியவைகூட அப்படியே குணங்குடியாருடைய கவிதை(?)களிலும் இடம்பெறுகின்றன. நந்தீஸ்வரன், மனோன்மணி, வாலை, அம்பலம், சிவம், தட்சிணாமூர்த்தி, மூர்த்தி, திருநடனம், திருக்கூத்து, சிவயோகம், சின்மயம், சிவராஜயோகம், சச்சிதானந்தம், பஞ்சாட்சரம், சரியை, கிரியை, யோகம், ஞானம், பசுபதி, பாசம் போன்ற சொல்லாட்சிகளுக்குக் குணங்குடிப் பாடல்களில் குறைவே இருக்காது.

'இச்சொற்களெல்லாம் உள்ளர்த்தம் பேசும் அகமியக் கருத்துடையவை. இவை, சாமானியருக்குப் புரியாது. இவைகளுக்குரிய இஸ்லாமிய பரிபாஷையே வேறாகும். அதைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் ஆன்மீக குருவாகிய ஷெய்க்கைக் கைப்பிடித்தால்தான் இயலும்' என வாய்க்கு வந்தவாறு இஸ்லாத்தோடு முடிச்சுப் போட்டு இவற்றை சிம்பாலிசப்படுத்துவர் சிலர். குர்ஆன் - ஹதீஸைப் புறக்கணித்துவிட்டு, பிறமதச் சித்தாந்தங்களுடன் கொண்டுள்ள கள்ளத் தொடர்பை நியாயப்படுத்துவதற்காக ஸூஃபித் தோன்றல்கள் கட்டிவிடும் கதைகள்தாம் இவை.

இத்தகைய ஒரு கள்ளத் தொடர்பைத் தாயுமானவர் மூலமாக நிலைநாட்டிக் கொண்டவர்தான் குணங்குடியார். யார் இந்தத் தாயுமானவர்?

- தொடரும்

வியாழன், ஜூன் 10, 2021

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 38

 இஸ்லாமியத் தாயுமானவர்

புராண இதிகாசக் கதையளப்புகள் ஒவ்வொன்றுக்கும் எப்படி எப்படியெல்லாமோ ஸிம்பாலிக்கான உள்ளர்த்தங்களை அவரரும் அவரவர் மனம்போன போக்கில் கற்பித்துச் சொல்வார்கள். அதுபோலத்தான் குணங்குடி மஸ்தான் போன்ற ஸூஃபிக் கவிஞர்களின் பிதற்றல் கவிதைகளுக்கும் சில 'மார்க்க மேதைகள்' என்பவர்கள் உள்ளர்த்தம் கற்பிப்பார்கள். அவை பாமர வாசகனுக்குப் பிடிபடாத 'முதஷாபிஹாத்'தான சமாச்சாரங்கள் எனச் சரடு விடுவார்கள்.

வேசி என்று பேர் படைத்து வெளியில்
                           புறப்பட்டவளை
தாசி என்று சொல்லத் தகாதோ மனோன்
                           மணியே

என்று அல்லாஹ்வை விளித்துக் "குணங்குடி மஸ்தான் பாடுவதெல்லாம் அகமிய விஷயங்களாகும். இதில் குறுக்குக் கேள்வி கேட்பவன் குதர்க்கவாதி" எனக் கூறித் திரிவர் ஸூஃபிஸ விசிறிகள்.

இஸ்லாத்துக்கு முற்றிலும் முரணான இந்த ஸூஃபிசச் சரக்கு இங்குத் தமிழ்நாட்டுக்கு இறக்குமதியான போது, கூடுதலாகப் பல்வேறு கலப்படங்களுக்கு உள்ளானதை அப்பட்டமாக அறிந்துகொள்ள முடிகின்றது. குணங்குடி மஸ்தான் எனும் இந்த ஸூஃபிக் கவிஞரை இந்தக் கலப்படம் எங்ஙனம் பாதித்துள்ளது என்பதைச் சற்று அலசிப் பார்ப்போம் ...


புதன், டிசம்பர் 02, 2020

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 37

சென்னை திரிபுர சுந்தரி விலாசம் அச்சகத்தில் 1905ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட 'குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்கள்' நூலில், புலவனின் பெயருக்கு முன்னால்  இடப்பட்டுள்ள அடைமொழிகளைப் பாருங்கள்:

அலா நிய்யத்தி சுல்தான் அப்துல்காதிறு லெப்பை ஆலிம், ஆரிபு பில்லா, சாகிபு ஒலியுல்லா என்னும் இயற்பெயருடைய குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்கள் திருவாய் மலர்ந்தருளிய திருப்பாடற் றிரட்டு.

இந்த அடைமொழிகளுக்கு அருகதையானவன்தானா இந்த அம்மணப் புலவன் என்பதை, இப்புலவனுடைய தரம் தாழ்ந்த கற்பனையின் துணை கொண்டு இதனைப் படிப்பவர்களே முடிவு செய்து கொள்ளலாம்.

இது மட்டுமல்ல. இன்னும் மிகமிகக் கொச்சையான வருணனைகளும் புலவனின் பாடல்களில் ஏராளம் காணப்படுகின்றன. "அவையெல்லாம் உள்ளர்த்தம் பேசிடும் அகமிய ஞானங்கள்" எனக் கூறுவோரின் பிதற்றல்களையும் இனித் தொடர்ந்து காணலாம் ...

ஞாயிறு, மே 10, 2020

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 36

உன்னை அலங்கரித்து, உனக்குச் சுவையானவற்றை உண்ணத் தந்து, இப்படியாக உனக்குப் பணிவிடை செய்ய நான் தயாராக இருக்கும்போது நீ ஏன் என்னை ஏறெடுத்தும் பாராமல் இருக்கின்றாய் மனோன்மணியே?

உனக்கு என் மீது ஆசை இல்லையோ?

                        எனக் கேட்கின்றான் கவிஞன்.

உன் மீதுள் ஆசித்து உயிர் பொருள் உன் தாளுக்கு அளிப்ப
   என் மீதில் ஆசை உனக்கில்லை ஏன் மனோன்மணியே

என அமைகிறது பாடல். இது மட்டுமன்று, இன்னும் சொல்கின்றான் கவிஞன்.

என்னுடைய காசையும் பணத்தையும் வாங்கிக்கொண்டு, நீ என் ஒருவனை மட்டுமே அணைத்துக்கொள்ளாமல், கண்டவனையெல்லாம் கட்டி அணைத்துக்கொள்கின்றாயே? இப்படி நீ வேசியாயிருப்பாய் என்பது தெரிந்திருந்தால் நான் காசு பணத்தை உன்னிடம் காட்டாமலே இருந்திருப்பேன் என்கின்றான் புலவன்.

வேசைக் குணத்தை விரும்புவாய் என்றறிந்தால்
   காசைப் பணத்தை நான் காட்டேன் மனோன்மணியே

இப்படி வேசி என்ற பெயரைப் பெற்று, வீட்டிலிருந்து வெளியேறி ஊர் சுற்றித் திரிகின்ற உன்னை 'தாசி' என்று சொன்னாலும் தகுமன்றோ என மகத்துவம் மிக்க வல்ல அல்லாஹ்வைப் பார்த்து பிறமதச் சித்தாந்தத்திற்குச் சோரம் போன இந்தக் கழிசடைக் கவிஞன் குறிப்பிடுகின்றான்.

இது மட்டுமல்ல, இறைவனாகிய இந்தத் தாசியைக் கூட்டிக் கொடுப்பதாகக்கூட (லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்) கற்பனை செய்து, கற்பனையில் இழிந்த நிலைக்கு இறங்கிச் செல்கின்றான் புலவன். வேசியாக, தாசியாக நீ இருக்கும்போது தடி போலிருக்கும் நான் உன்னை எப்படி ஜாதிகெட்டக் குணங்குடியாருக்குக் கூட்டிக் கொடுப்பேன்? எனக் கேட்கின்றான் கவிஞன்.

வேசி என்று பேர் படைத்து வெளியில் புறப்பட்டவளைத்
   தாசி என்று சொல்லத் தகாதோ மனோன்மணியே

தடி போலிருந்து உனை யான் சாதிகெட்ட பாழுங் குணங்
   குடியார்க்கு எப்படிக் கூட்டிக் கொடுப்பேன் மனோன்மணியே

என இவ்வளவும் சொல்லி, இகழ்ந்து பாடி, அல்லாஹ்வாகிய காதலியோடு ஊடல் கொள்கின்றான் இப்புலவன். இனி, ஊடல் நீங்கிக் கூடல் நிலைக்கு வந்து புலவன் புலம்புபவைப் பின்னால் அணிவகுக்கின்றன.

இங்ஙனமாக ஏக அல்லாஹ்வுடைய மகோன்னதத்துக்கு மாசு கற்பிக்கின்ற வகையில் மாப்பிள்ளை-பெண்டாட்டி உறவு பேசி இறைவனைப் பெண்டாள நினைக்கின்றான் இச்சண்டாளக் கவிஞன்.

இந்தப் புலவனெல்லாம் மாபெரும் இறைநேசனாம். மெஞ்ஞான நாதாவாம்; ஸூஃபித் திலகமாம். இப்புலவனுடைய பாடல் நூலின் பழைய பதிப்பு ஒன்றில் இப்புலவனின் பெயருக்கு முன்னால் கொடுக்கப்பட்டுள்ள அடைமொழிகளைப் பார்ப்போம் …