வெள்ளி, ஆகஸ்ட் 04, 2006

களையிழந்தக் கச்சேரிகள்

ஒரு காலத்தில் பாமரத் தமிழ் முஸ்லிம்களைச் சுரண்டிக் கொழுத்த அரபுப் பாட்டுக் கச்சேரிகளைத் தாங்கிப் பிடிக்க வேண்டி, 'மவ்லிதுகளின் பண்பாட்டு அரசியல்' செய்வதற்கு குலாம் ரஸூல் திண்ணையில் குட்டிக் கரணமெல்லாம் போட்டுக் காட்டிப் படாத பாடு பட்டிருக்கிறார் [சுட்டி-1]. இஸ்லாத்தின் எதிரிகளாகத் திகழ்ந்த குரைஷியர்கள், அரபுக் கவிதைகளாலும் இஸ்லாத்தை இழித்துரைத்த காலகட்டத்தில், "அவர்களுக்கு(க் கவிதையால்) பதிலடி கொடுப்பீராக, உம்முடன் ஜிப்ரீல் துணையிருப்பார்" [சுட்டி-2] என்று ஹஸ்ஸான் என்ற தம் தோழருக்கு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கட்டளையிட்டதை, குலாம் எவ்வாறு திரிக்கிறார் பாருங்கள்:

"... நபிகள் நாயகத்திற்கென அமைக்கப்பட்ட தனிமிம்பாரில் (மேடை) நபிநாயகத்தை புகழ்ந்து ஹஸ்ஸான் இப்னு தாபித் கவிதை பாட அல்லாஹ்வின் தூதரைப் புகழும் காலமெல்லாம் பரிசுத்த ஆவியைக் கொண்டு ஹஸ்ஸானை நிச்சயமாக அல்லாஹ் வலிமைப்படுத்துகிறான் என நபிகள் நாயகம் வாழ்த்தியதும், ஹதீஸ்கிரந்தங்களின் சரித்திர சம்பவங்களாக நிலை பெற்றுள்ளன"

'ஹதீஸ் கிரந்தங்கள்' என்ற பெயரில் புரோகிதர்கள் 'புருடா' விட்டதெல்லாம் மலையேறி நீண்ட காலம் ஆகிவிட்டது என்பதை அவர் புரிந்து கொள்வது நலம் பயக்கும். நபித்தோழர்களில் ஓரிருவர் - வாதத்தைத் தொடர்ந்து முடிவை எட்டுவதற்காக - நபியைப் புகழ்ந்து பாடியதாகவே இருக்கட்டும். அந்தப் புகழ்ப் பாக்களை, "உங்கள் வீட்டில் பாடினால் செல்வம் கூரையைப் பொத்துக் கொண்டு கொட்டும்; நோய்கள் ஓடிப்போம்; மகிழ்ச்சி தாண்டவமாடும்" என்றெல்லாம் கடந்தகாலப் புரோகிதர்கள் கதையளந்து, சமகாலப் பாமர முஸ்லிம்களை ஏமாற்றியதுபோல், எந்த நபித்தோழரும் பாட்டுப்பாடி வயிறு வளர்க்கவில்லை. நபித்தோழர்களின் வசைக் கவிகளின் நீட்சிதான் மவ்லிது என்னும் - ஐந்திற்கும் பத்துக்கும்; ஐம்பதுக்கும் நூறுக்கும், கூலி வாங்கிக் கொண்டு, பேசிய கூலிக்குத் தகுந்தாற்போல் கச்சேரியின் நேரத்தைச் சமன் செய்து கொண்டு பாடப்படும் - 'பிறந்தநாள்' புகழ்ப் பாடல்கள் என்பது கடைந்தெடுத்த புரட்டல்லாமல் வேறென்ன? "மவ்லாய ஸல்லி வஸல்லிம் தாஇமன் அபதா" (எம் தலைவா! என்றென்றும் எப்போதும் அருள்மழை பொழிவாயாக) என்பது மவ்லிதின் தலையாய ஒரு வரி. ஓர் அங்கீகாரத்துக்காக மவ்லிதில் புகுத்தப் பட்ட, கவிஞர் பூஸரீயின் 'கஸீதத்துல் புர்தா'வின் முதல் வரிதானது. ஒரு காவியத்தைப் புனையத் தொடங்கிய, அரபு மொழியில் வியக்கத் தக்கப் புலமை பெற்றிருந்த பூஸரிக்கு, இரண்டாவது அடி எழுத முடியவில்லையாம். அப்புறமென்ன? புராணத்துக்கு 'இஸ்லாமிய முத்திரை' பெறுவதற்காக அவர் கனவு காண வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப் பட்டார். "அலா ஹபீக்க கைரில் கல்கி குல்லி ஹிமி" (அனைத்துப் படைப்புகளிலும் சிறந்தவரும் அதிமுக்கியமானவரும் உன் அன்புக்குரிய[நபிய]வரின் மீது) என்ற இரண்டாவது அடியை எடுத்துக் கொடுக்கக் கவிஞரின் கனவில் நபியே வந்து தற்புகழ்ச்சி செய்து கொண்டதும் அதுவே தமிழில் 'புரவலர் போர்த்திய பொன்னாடை'யுமானதும் பழங்கதை. ஆனால், உண்மை நிலை நேரெதிர்:

கவிதையை நாம் அவருக்குக் கற்றுக் கொடுக்கவில்லை; அவருக்கு அது தகுதியானதன்று"

என்று அல்லாஹ் [036:069] அறுதியிட்டுக் கூறுகிறான். மேலும் சொற்களுக்குச் சொந்தக்காரன் சொல்கிறான்:

"இஃது ஒரு கவிஞனின் சொல்லன்று ..." [069:041];

குலாமோ "திருக்குர்ஆனே தன்னை கவிதையாக அடையாளப்படுத்திக் கொள்கிறது" என்று திருகுதாளம் செய்யப் பார்க்கிறார். 1400 ஆண்டுகளுக்கும் முன்னர் நிறைவடைந்து விட்ட இஸ்லாத்திற்குள் 400 ஆண்டுகளுக்கு முன்னர் வந்து புகுந்து ஆட்டம் போட்டு ஓய்ந்து, களையிழந்துபோன மவ்லிதுக் கச்சேரிகளுக்குக் களையூட்டுவதற்காகக் குர்ஆனுடைய சொற்களைக் குப்பையில் வீசும்படி குலாம் வழங்கும் அறிவுரை, நம்மைப் பொருத்தவரை செல்லாக் காசுதான்.
***
உலகத்தில் இலவசமாகக் கிடைப்பது அறிவுரை ஒன்றுதான்.
"அண்மையில் சுன்னத் வல் ஜாமாத்துக்கும் தமிழ்நாடு தவ்ஹீது ஜாமத்துக்கும் இரண்டு நாட்களாக நடைபெற்ற விவாதத்தில் சுன்னத் வல் ஜாமத்தின் மௌலவி ஜாமாலி நன்றாக பதில் சொல்லியிருக்கிறார். விவாத சி.டிக்கள் விற்பனையில் உள்ளது வஹ்ஹாபி வாங்கிபடித்து தெளிவடைவாரென்று நம்புகிறேன்"
இது முஜீபுரஹ்மான் எனக்குத் திண்ணையில் வழங்கிய அறிவுரை [சுட்டி-3]. அவருக்கு என் நன்றி!
முயன்றும் முடியவில்லை என்பதால் என்னுடைய தோல்வியை இங்கு நான் ஒப்புக் கொண்டேயாக வேண்டும்; அதுதான் எழுத்து நேர்மையுங்கூட. சீ.டீக்களை என்னால் 'படிக்க' முடியவில்லை; ஆனால் நல்லவேளை பாருங்கள், என்னுடைய சீ.டீ. ரோம் படித்தது! எனவே, என்னால் பார்க்க-கேட்க முடிந்தது. ஒளிப்பதிவு சுமார் ரகம்தான் என்றாலும் ஜாமாலி வகையாராக்களின் முகங்களில் தோன்றிய திடுக்கங்களின்போது தெளிவாகவே இருந்தது. நான் மட்டும் பார்த்தால் போதுமா? ஆர்வமும் நேரமும் உள்ள திண்ணை வாசகர்களும் பார்த்து-கேட்டுப் பயனடையட்டுமே! [சுட்டி-4]. ஆர்வமிருந்தும் நேரம் அதிகமில்லாதவர்களுக்கு விவாதச் சுருக்கம் படிக்கக் கிடைக்கிறது [சுட்டி-5] என்பதாக சீ.டீ. கொடுத்த அன்பர்கள் தெரிவித்தனர், அவர்களுக்கும் என் நன்றி!
***
"கடவுள் இல்லை" என்று சொல்லும் நாத்திகர்கள் யாரும் அதற்குச் சான்றுகள் தர வேண்டியதில்லை. "உண்டு" என்று வாதிப்பவரே சான்றுகளை முன்வைக்க வேண்டும். மீண்டும் மீண்டும், "இல்லை என்று நிரூபிக்கட்டும் பார்கலாம்" என்று 'மண்ணாந்தை'த் தனமாக சூபி வெற்றுச் சவடால் விடாமல் சற்றே அறிவைப் பயன்படுத்தி எழுத முன்வந்தால் மேற்கொண்டு பதில் தரலாம். இன்னொரு விண்ணப்பம்: கபா, அல்லா, இபுராகீம் முதலிய இஸ்லாம் தொடர்புடைய சொற்களை முஸ்லிம்கள் யாரிடத்திலாவது கேட்டு எழுதினால் என் திண்ணை வாசக நண்பருக்கு நான் விளக்கம் சொல்லும் நேரம் மிச்சமாகும்; நன்றி!
ஃஃஃ

புதன், ஜூலை 26, 2006

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 4

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்து மக்கத்துக்காரர்கள் பல தெய்வக் கொள்கையிலும் சிலை வழிபாட்டிலும் பற்றுறுதி கொண்டிருந்தார்கள். இந்நிலையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், "வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை" என்ற ஏகத்துவக் கொள்கையை அவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். இதைக் கேட்ட, பல தெய்வக் கொள்கையில் ஊறிப் போயிருந்த மக்கத்தவர், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் குறிப்பிட்டு, "பித்துப் பிடித்த ஒரு கவிஞருக்காக நாங்கள் எங்களுடைய கடவுளர்களை விட்டு விடுவோமோ?" எனப் பிராலாபித்தனர் [அல்குர்ஆன் 037:036]. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்த்துப் பைத்தியக்காரக் கவிஞர் என்றும் அவர்கள் எடுத்தோதிய அல்குர்ஆனைக் கவிதை என்றும் ஒதுக்கித் தள்ளக்கூடிய அளவுக்கு அந்த மக்கள் தங்களுடைய பல தெய்வக் கொள்கையில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால், நம்முடைய முஸ்லிம் சகோதரர்களில் பலர் - "ஏகஇறைக் கொள்கையில் திடமான ஈமான் கொண்டிருக்கிறோம்" எனக் கூறிக் கொள்பவர்கள் - பைத்தியக்காரக் கவிஞர்களைப் போன்று பாடியுள்ளவர்களை எல்லாம் "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் (கனவில்) அடியெடுத்துக் கொடுக்கப்பட்டவர்கள்" என்றும் அக்கவிஞர்களின் பொய்யான கற்பனைகளையெல்லாம் வேதம் போன்றும் காதலித்துத் திரிகின்றனர். மக்கத்துக்காரர்கள் வேதத்தைக் கவிதை எனத் தூற்றினர்; இவர்களோ கவிதையை வேதம் எனப் போற்றுகின்றனர். இருசாராரையும் ஒப்பு நோக்கினால், மக்கத்துக் குரைஷியருக்கு அவர்தம் பல தெய்வக் கொள்கையிலிருந்த பிடிமானம்கூட நம்மவருக்குத் தங்களுடைய ஏகஇறைக் கொள்கையில் இல்லாமற் போனது பரிதாபத்திற்குரியதன்றோ! இவர்கள், இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்ட வேதப் புத்தகங்கள் என்பதுபோல் அவற்றின் மீது குன்றாத பக்தி கொண்டிருக்கின்றனர். இந்த இலக்கியங்களில் காணப்படும் முரண்பாடுகளைக் குர்ஆன்-ஹதீஸ் ஒளியில் எடுத்துரைத்தால் இந்த இலக்கியப் பித்தர்கள் கொதித்தெழுகின்றனர். அல்லாஹ்வின் வேதமும் அந்த வேதத்துக்கு விளக்கமாக அமைந்த, உறுதி செய்யப்பட்ட அவனுடைய தூதரின் வாழ்வியலும்தாம் முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்டவை. அவையல்லா எவையும் முற்றிலும் முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் இருந்துவிட இயலாது. இதனையும் அல்லாஹ்வே தன் வேதத்தில் ஐயத்திற்கிடமின்றி எடுத்துரைக்கின்றான்:
"இந்தக் குர் ஆனை அவர்கள் ஆழ்ந்து நோக்கக் கூடாதா? இஃது அல்லாஹ்வையன்றி யாரிடமிருந்தாவது அருளப்பட்டிருந்தால் இதில் அநேக முரண்பாடுகளைக் கண்டிருப்பார்களே!" [004:082].
மனிதர்களுள் மிகச் சிறந்த அறிஞர்களைத் தேர்ந்தெடுத்து, அந்த அறிஞர்களால் கண்ணும் கருத்துமாக வரையப்பட்ட அரசியல் சாசனச் சட்டங்களேகூட முரண்பாடுகளின் மொத்த உருவமாக அலைக்கழிக்கப் படுவதையும் பலமுறை அவை திருத்தப்படுவதையும் நாம் கண்டு வருகிறோம். அறிவுப் பூர்வமாக அணுகாமல் வெறும் உணர்வுப் பூர்வமாகவும் கற்பனை ரீதியாகவும் செயல்பட்டு, கவிதை புனைகின்ற நிலையிலேயே பெரும்பான்மையான கவிஞர்கள் திகழ்ந்துள்ளார்கள். எனவே, இந்த உணர்ச்சிப் படையல்களில் முரண்பாடே இடம் பெற்றிருக்க இயலாது என்று எங்ஙனம் கூறவியலும்? "Poet's appeal is sensuous, not intellectual. His function is not to prove, but to make to feel" (கவிஞனுடைய அணுகுமுறை உணர்வுப் பூர்வமானது; அறிவுப் பூர்வமானதன்று. அவனது பணி மெய்ப்பித்துக் காட்டுவதன்று; உணரச் செய்வது மட்டுமே) என நெய்ல்ஸன் என்னும் அறிஞர் தமது Essentials of Poetry என்னும் நூலில் குறிப்பிடுகின்றார். ஏனைய கவிஞர்களுக்கு இந்த அணுகுமுறை பொருந்தி வரலாம். ஆனால், இஸ்லாமியக் கவிஞனுக்கு இந்த விதியை நாம் செலுத்தவியலாது. ஏனெனில், குர்ஆன்- ஹதீஸ் கூறிடும் உண்மைகளை மெய்ப்பித்துக் காட்டுதலைப் புறக்கணித்துவிட்டு வெறும் உணர்வுகளுக்கு அடிமையாகி மனம்போன போக்கில் பாடுவதற்கு இஸ்லாத்தில் அனுமதி கிடையாது. -தொடரும், இன்ஷா அல்லாஹ்.

சனி, ஜூலை 22, 2006

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 3

இறைவன் சொல்லாத ஒன்றை, அவன் மீது இட்டுக்கட்டிக் கற்பனை செய்து பொய்யுரைப்பது மாபெரும் பாவச் செயலாகும். இவ்வாறு எவர் பொய்யுரைக்கத் துணிகிறாரோ அவருக்கு இறைவன் மாபெரும் தண்டனையை வழங்கியே தீருவான் என்று இறைமறை வன்மையாக எச்சரித்துக் கூறுகின்றது. இறைவனுடைய படைப்புகளிலெல்லாம் அவனுக்கு மிகவும் நேசத்துக்குரிய படைப்பாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் திகழுகின்றார்கள். இறைவன் மீது இல்லாத ஒன்றை இட்டுக்கட்டி மிகைப்படுத்திக் கூறுதலாகிய வெறுக்கத்தக்கச் செயலை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கிஞ்சிற்றும் நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள். அப்படியிருந்தும்
இஃது ஒரு கவிஞனின் சொல்லன்று. எனினும் நீங்கள் வெகு சொற்பமாகவே நம்புகின்றீர்கள். (இஃது) ஒரு குறிகாரரின் சொல்லுமன்று. எனினும் நீங்கள் வெகு சொற்பமாகவே அறிவுரை பெறுகின்றீர்கள். (இஃது) அகிலங்களின் இறைவனால் அருளப்பட்டது. ஒரு சொல்லையேனும் (நபியாகிய) அவர் எம் மீது கற்பிதமாய்க் கூறினால், அவரை வலக்கரப்பிடியாகப் பிடித்து அவருடைய உயிர்நாடியைத் துண்டித்து விடுவோம் [069:041-046].
என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் குறித்து இறைவன் எச்சரிக்கிறான். இந்த எச்சரிக்கை, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வாயிலாக நம் அனைவருக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கையேயாகும். இந்த அளவுக்குக் கடுமையான கண்டனத்தையும் தண்டனையையும் இறைவன் பிரகடனப்படுத்திய பின்னரும் இதையெல்லாம் பொய்யாக்கிப் புறந்தள்ளிவிட்டு, தம் மனம்போன போக்கில் செயல்படுபவர்களையும் நாம் காணுகின்றோம். இதையும், "உங்களில் இதைப் பொய்யெனக் கொள்பவர் உள்ளனர் என்பதைத் திண்ணமாக நாமறிவோம்" என்பதாக [069:049] இறைவன் முன்னறிவிப்புச் செய்துள்ளான். இவை மட்டுமின்றி, அல்லாஹ்வின் மீது கற்பனையாகப் பொய்யுரைப்பதனை மிக வன்மையாகக் கண்டிக்கக்கூடிய ஏராளமான இறைவசனங்கள் இறைமறையில் மேலும் இடம் பெற்றுள்ளன: [003:024, 003:094, 004:048, 004:050, 005:101, 006:093, 006:138, 006:140, 006:144, 007:037, 007:152, 010:017, 010:039, 010:060, 011:018, 011:035, 016:056, 016:087, 016:105, 016:116, 017:073, 018:015, 020:061, 029:013, 029:068, 034:008, 046:008, 061:007]. அல்லாஹ்வின் மீது கற்பனையாகப் பொய்யுரைப்பவர்கள் அநியாயக்காரர்கள், வழிகேடர்கள், சாபத்திற்குரியவர்கள், நரகவாசிகள், பாவிகள் என்றெல்லாம் இவ்வசனங்களில் கடுமையாகக் கண்டித்துள்ளான் இறைவன். - தொடரும், இன்ஷா அல்லாஹ்.

சனி, ஜூலை 15, 2006

500 டாலர் நகைச்சுவை

மவ்லிதுகளின் ஒரேயொரு சொல்லெடுத்தும் பொருள் சொல்லாத 'மவ்லிதுகளின் அர்த்தப் பரப்புகள்' திண்ணையில் சென்ற வாரம் பரத்தப் பட்டிருந்தன. அதில், "அரபு மொழியிலமைந்த மவ்லிதுகளை நேரடி மொழிப்பெயர்ப்பை அளித்து அதற்கு மாசு கற்பிக்கும் உள்நோக்க வியாக்கியானம் செய்யும் அரசியல் வகாபிகளிடம் காணப்படுகிறது" என்ற அறிவார்ந்த? குற்றச்சாட்டு முன்வைக்கப் பட்டதால் எதிர்வினை எழுத வேண்டியதாயிற்று. இல்லாததை மடியிலிருந்து எடுத்துப் போட்டால்தானே 'உள்நோக்க வியாக்கியானம்' என்று சீறிப் பாயலாம்? நேரடி மொழிபெயர்ப்பிலேயே மாசு படுகிறதென்றால் விளக்கம் சொல்லப் புகுந்தால் என்னவாகும்? மவ்லிது என்றால் தமிழில் 'பிறப்பு' என்ற பொருளையும் அதுவே மீலாது என்று வழங்கப் படுகிறது என்ற சிறு விளக்கத்தையுங்கூட அவ்வளவு பெரிய 'பரப்பில்' காண முடியவில்லை! எவராலும் பெற்றெடுக்கப் படாத, எவரையும் பெற்றெடுக்காத [112: 003] ஏக இறைவனுக்கும் மவ்லிது; எவருக்கும் பிறந்தநாள் கொண்டாடாத இறைத்தூதருக்கும் மவ்லிது. போதாதென்று, அரபு விழுமியங்களுக்கும் ஒரு மவ்லிது பாடுகிறார் கட்டுரையாளர். இவருடைய பாட்டுக்குக் குர்ஆனையும் ஹதீஸையும் தஃப்ஸீரையும் தாளம் போடச் சொல்லிக் கெஞ்சுவதுதான் இதில் உச்சகட்ட நகைச்சுவை:
"மவ்லிதுகள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலகட்டத்திலேயே இறைவனை புகழ்ந்தும்,நாயகத்தைப் புகழ்ந்தும்,அரபு விழுமியங்களை புகழ்ந்தும் பாடப்பட்டிருப்பதற்கு புனித நூல்களான திருகுர் ஆன்,ஹதீதுகள், குர்ஆன் விரிவுரைகள்,ஹதீது விரிவுரைகள் மற்றும் வரலாற்று நூல்களில் பதிவுகள் நிறைய இருக்கிறது"
முஜீப் ரஹ்மானின் மேற்காணும் நகைச்சுவைக்கு 500 டாலர் காத்திருக்கின்றது. பரிசு பெறுவதற்காக அவர் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: mawlid@muttaqun.com மவ்லிது ஆர்வமுள்ள வாசகர்களுக்குத் தமிழில் மவ்லிது இலவசமாகக் கிடைக்குமிடம்: http://www.angelfire.com/tv2/avmaulid/
ஃஃஃ

வெள்ளி, ஜூலை 07, 2006

நியாயமான கேள்விகள்

'கபாவில் சமாதியா?' என்ற தலைப்பில் 'சூபிமுகமது' என்பார் திண்ணையில் [சுட்டி-1] எனக்காகச் சில கேள்விகளை வைத்திருந்தார்: 1) தர்காக்களில் அடங்கப்பட்டிருக்கும் இறைநேசர்களது-சூபிஞானிகளின் நினைவிடங்களை நாடிச்செல்வதை திருக்குரானோ ஹதிசோ தடுக்கிறது என்று ஆதாரம் காட்டமுடியுமா? பதில்: முடியும் [சுட்டிகள் 2 முதல் 8 வரை] 2) இஸ்லாமியர்களின் ஹஜ் வழிபாடு பிற சமயத்தவரின் பார்வையில் ஒருவகை சமாதி/கல் வணக்கமாகவே கருதப்படுகிறது. பதில்: அது பிற சமயத்தவரின் பார்வை. 3) பணக்காரர்கள் மக்காவின் கபாவுக்கு செல்கிறார்கள். அங்குதான் அல்லாவின் சமாதி இருக்கிறது. பதில்: இல்லை. அல்லாஹ்வுக்கு சமாதி இருப்பதாகச் சொல்லும் சூபிதான் சமாதியைப் படம் பிடித்துப் போட வேண்டும். 4) அரபு பழங்குடிகள் அல்லா என்னும் ஆண்கடவுளை சிலையாக வணங்கி வந்துள்ளார்கள் என்பது சமூக வரலாறு. பதில்: வளமான கற்பனையைச் 'சமூக வரலாறு' என்றெல்லாம் அறிவுடையோர் எவரும் கூறுவதில்லை. சூபி அவ்வாறு கூறிக் கொள்வதில் எனக்கு அட்டியில்லை. 5) கறுப்புக் கல்லை தொட்டு முத்தமிடுவது பிறருக்கு கல் வணக்கமாகவே படுகிறது. பதில்: பிறருக்குத்தானே? படட்டும். ஆனால் முஸ்லிம்களின் நிலைப்பாடு வேறு [சுட்டி-9] 6) கபாவின் உட்புறத்தில் என்ன இருக்கிறது வகாபி ஆதாரத்தோடு சொல்லமுடியுமா? பதில்: முடியும். இப்போது காற்று இருக்கிறது. ஆண்டுக்கு ஒருமுறை கஅபாவின் உட்புறத்தைத் தூய்மை செய்வதைத் தொலைக்காட்சியில் காட்டுவர். அப்போதுத் துப்புரவுத் தொழிலாளர்களையும் பார்க்கலாம். 7) மக்காவின் புனித எல்லைமுழுவதும் மகாமு இபுராகீம் என்றே அழைக்கப்படுகிறது. பதில்: இல்லை. 'ஹரம்' (புனிதம்) என்று அழைக்கப் படுகிறது. 8) கபாவிற்கு உள்ளே அஷ்ட கோண வடிவ மகாம் ஏ இபுராகீமின் பீடம் உள்ளது என்றொரு கருத்தும் உள்ளது. பதில்: யாரிடமுள்ளது? 9) ஹஸ்ருல் அஸ்வத் கறுப்புக்கல்லை ஸ்ங்கே அஷ்வேத என்னும் பொருள்படும் வெண்மை அல்லாத கல் எனவும் இது சிவலிங்கத்திற்கு ஒப்பானது எனவும் கூட பொருள் கொள்ளப்படுகிறது. பதில்: யாரால் கொள்ளப் படுகிறது?
***
பதில்கள் முடிவுற்று, கேள்விகள் தொடர்கின்றன: திண்ணை வாசக நண்பர்: பூனக்குட்டி வெளியே வந்து பொத்துன்னு விழுந்துடுச்சே தெரியுமா? நான்: என்ன சொல்றீங்க? நண்பர்: சூபிமுகமது என்ற பெயரில் திண்ணையிலெ எழுதுற ஆளு முஸ்லிமில்லே! நான்: எப்படிச் சொல்றீங்க? நண்பர்: அல்லாவின் சமாதி, அல்லாவின் சிலை, கபாவுக்குள்ளே இபுராகீம் பீடம், ஸ்ங்கே அஷ்வேத, சிவலிங்கம் அப்டில்லாம் எழுதுறது இருக்கட்டும். ஒரு முஸ்லிமுக்கு இப்டியெல்லாம் நினைக்க முடியுமா? இது அவ்ளவும் ஆர்.எஸ்.எஸ் சைட்டிலேர்ந்து சுட்டது. நான்: இருக்கட்டும். யாராயிருந்தா என்ன? சூபின்னோ முகமதுன்னோ முஸ்லிமல்லாதவங்க உண்மையிலேயே பேரு வச்சிகிட்டா நீங்க கேஸா போட முடியும்? நண்பர்: முடியாதுதான். ஆனா இஸ்லாத்துக்கு எதிரான கருத்துக்களை சந்தேகம்ங்கிற பேர்ல எழுதி திண்ணையை ஏமாத்தலாமா முடியாதா? இதையே ஒரு கிரிஸ்டின் பேர்லெயோ இந்து பேர்லெயோ எழுதி இருந்தா ... திண்ணை பப்ளிஷ் செய்யுமா? நியாயமான கேள்விகள்!
ஃஃஃ
சுட்டிகள்: 1. http://www.thinnai.com/?module=displaystory&story_id=80606303&format=html 2. http://www.chittarkottai.com/vetrikappal/vetrikappal3.html 3. http://www.chittarkottai.com/vetrikappal/vetrikappal4.html 4. http://www.chittarkottai.com/vetrikappal/vetrikappal6.html 5. http://www.chittarkottai.com/vetrikappal/vetrikappal7.html 6. http://www.chittarkottai.com/vetrikappal/vetrikappal8.html 7. http://www.chittarkottai.com/vetrikappal/vetrikappal9.html 8. http://wahhabipage.blogspot.com/2006_02_01_wahhabipage_archive.html 9. http://www.islamworld.net/black_stone.htm

உடன்படிக்கையில் இரு மறுப்புகள்

முஸ்லிம்களின் வேதமான அல்குர்ஆன் அருளப் பட்டது "படைத்த உம் இறைவனின் பெயரால் ஓதுவீராக!" என்ற முதல் கட்டளையோடு [096:001]. இறைமறையை, "படைத்த என் இறைவனின் பெயரால் ..." என்று எந்த முஸ்லிமும் ஓதத் தொடங்குவதில்லையே அது ஏன்? என்று ஹமீது ஜா.பர் சிந்திக்க வேண்டும். மேற்காணும் கட்டளையில் ஆளப் பட்டிருக்கும் 'இறைவன்' என்ற ஒரு சொல்லுக்குள் புதைந்திருக்கும் 'அளவற்ற அருளாளன்(அர்ரஹ்மான்)', 'நிகரற்ற அன்பாளன்(அர்ரஹீம்)', 'வணங்குதற்குரியவன்(அல்லாஹ்)' பெயரால் ஓதுமாறு அல்லாஹ்வின் தூதர், (வஹ்ஹாபிகளின் தலைவர்,) முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கற்றுத் தந்ததால் "பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்" என்று தொடங்குகிறோம். சுட்டப் படுபவனை விடுத்து, சொல்லை மட்டும் எடுத்துப் பார்த்தால் 'அல்லாஹ்' (அல்-இலாஹ்) வணங்குதற்குரியவன் என்ற ஒரே பண்பைத்தான் குறிக்குமேயன்றி அவனுடைய எல்லாப் பண்புகளையும் அச்சொல் உள்ளடக்கி நிற்கவில்லை என்பதையும் கூடுதல் விளக்கமாகச் சொல்லாம். "வஹ்ஹாபே, ரஸ்ஸாக்கே! ஜப்பாரே! என் பாவங்களை மன்னித்து விடு" என்று இறைவனை விளித்து வேண்டினாலும் என் பாவங்களை அவன் மன்னிப்பான் என்ற நம்பிக்கையோடு, "ஏன் என்னை கஃப்பாரே என்று விளிக்கவில்லை?" என்று அந்தக் கருணையாளன் எதிர் கேள்வி கேட்க மாட்டான் என்ற உறுதி எனக்குண்டு.
***
இஸ்லாமிய வரலாற்றின் திருப்புமுனையாக அமைந்த 'ஹுதைபிய்யா உடன்படிக்கை' சுவையானதும்கூட. மக்காவிலுள்ள புனித இறையில்லமான கஅபாவில் உம்ரா வழிபாடு செய்வதற்காக மதீனாவிலிருந்து புறப்பட்டு வந்த முஸ்லிம்களைத் தடுத்துத் திருப்பியனுப்பிய நிகழ்வின் தொடக்கம் அது. முஸ்லிம்களுக்குப் பாதகமாகவும் மக்கத்துக் குரைஷியருக்குச் சாதகமாகவும் ஹிஜிரி ஆறாம் ஆண்டு (கி.பி 628) எழுதப் பட்ட அந்த உடன்படிக்கை, பிற்காலத்தில் குரைஷியராலே மீறப் பட்டு, முஸ்லிம்களுக்குச் சாதகமாக மாறிப் போனது.
The Meccans deliberately made their terms as rigorous and provocative as they could, but Muhammad refused to be provoked. As always he wanted peace not bloodshed, therefore he accepted all the terms with all the hardships and all the humiliation they implied. This treaty is known as the Treaty of Hudaibia. It was one of the most outstanding events in the life of Muhammad. According to R.V.C. Bodley in "The Messenger" (London, 1946, p. 257), "In point of fact, that the treaty was Mohammad's masterpiece of diplomacy. It was a triumph." Tor Andrae writes in "Mohammed the Man and his Faith" (London, 1936, p. 229) that, "The self-control which Mohammed revealed at Hodaibiya, his ability to bear occasional humiliation in unimportant issues, in order to achieve an exalted goal, shows that he was a person of unique ability."
"அளவற்ற அருளாளன்(அர்ரஹ்மான்), நிகரற்ற அன்பாளன்(அர்ரஹீம்), அல்லாஹ்வின் பெயரால்.
(முஸ்லிம்களின் சார்பாக) அல்லாஹ்வின் தூதர் முஹம்மதுக்கும் (முஸ்லிமல்லாத குரைஷியரின் சார்பாக) அம்ருடைய மகன் ஸுஹலுக்கும் இடையே எழுதப் படும் ..." என்று தொடங்கும் அந்த உடன்படிக்கையின் முதலிரு வரிகளிலேயே இரண்டு மறுப்புகளைக் குரைஷிப் பிரதிநிதி ஸுஹைல் தெரிவித்தார். "அல்லாஹ்வின் தூதர் என்று நம்பியிருந்தால் உம்மை மக்காவை விட்டு நாங்கள் துரத்தியிருப்போமா? உம்மோடு போர் புரிந்திருப்போமா?" என்பது ஸுஹைலின் இரண்டாவது மறுப்பு. இனி, திண்ணையில் எழுதிய ஹமீது ஜா.பரின் கடித வரிகளில் சிலவற்றை நினைவு கூர்ந்து விட்டு, மீதியைத் தொடர்வோம்:

"இறைவனின் எல்லா பெயர்களையும் எல்லா இடத்திலும் உபயோகிக்க முடியாது மட்டுமல்ல உபயோகிக்கவும் கூடாது. அப்படி உபயோகித்தால் அதன் தன்மை முரண்பாடாகிவிடும்."

"அல்லாஹ் சொன்னான் என்றால் அவனது அனைத்து திருநாமங்களும் அவற்றின் பண்புகளும் உள்ளடங்கிவிடுகின்றன."

இதையேதான் ஸுஹைல் முதல் மறுப்பாக வெளியிட்டார்: "அளவற்ற அருளாளனா? யாரது புதுக் கடவுள்? அல்லாஹ்வின் பெயரால் என்று மட்டும் இருக்கட்டும்".
ஹமீது ஜா.பரின் "வஹ்ஹாபா? யாரு ... பண்டாரி வஹாபா?" என்ற கேள்வி ஸுஹைலைத்தான் எனக்கு நினைவூட்டுகிறது.
ஃஃஃ

செவ்வாய், ஜூலை 04, 2006

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 2

அல்குர்ஆனின் கூற்றை மெய்ப்பிப்பது போலவே, இலக்கியங்கள் அனைத்திலும் ஏராளமான பொய்கள் இடம் பெற்றிருப்பதைக் காண்கிறோம். கவிஞர்கள், தாம் கேள்விப்பட்டதை எல்லாம் அப்படியே காவியமாகவும் கவிதையாகவும் வெறும் சுவைக்காகப் பாடிக் குவித்துள்ளமையே இதற்குக் காரணமாகும். தாம் கேள்விப்பட்டவை எந்த அளவுக்கு உண்மையானவை எனச் சிந்தித்து, சீர்தூக்கிப் பார்த்து மெய்ப்பொருளைக் காணுகின்ற அறிவு பெறுதலை அடகு வைத்து விடுகின்றது கவிதையுள்ளம். பெரும்பாலானக் கவிஞர்கள் நிகழாதவற்றையெல்லாம் நிகழ்ந்தது போலக் கற்பனை செய்து பாடித் தீர்த்தனர். அத்தகைய பொய்ப் பாடிகளை - கவிஞர்களை - ஒரு கூட்டம் பின்பற்றி வழிகேட்டில் மூழ்கிக் கிடக்கக் காண்கிறோம். இந்நிலை, அல்குர்ஆன் அருளப்படுவதற்கு முன்னரும் இருந்தது; பின்னரும் இருந்தது; இன்றும் இருக்கின்றது.
உண்மைகள் வேதங்கள் என்போம் - பிறிது --- உள்ள முறைகள் கதையெனக் கண்டோம் நன்று புராணங்கள் செய்தார் - அதில் --- நல்ல கதைகள் பலப்பலத் தந்தார் கவிதை மிக நல்லதேனும் - அக் --- கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்.
என இதனையே தமிழ்ப் பெருங்கவிஞர் பாரதியாரும் பாடுகின்றார். புராணக் கவிதைகள் பலவற்றைக் கவிஞர்கள் பாடினர். கவிதை நன்றாகத்தான் இருக்கின்றது. எனினும் அக்கவிதை சொல்லும் கதைகள் அனைத்தும் கடைந்தெடுத்தப் பொய்களாகும் என்கிறார் கவி பாரதி. கவிஞர் சுரதா கூறுகின்றார்:
எதார்த்தத்தில் எது உண்மையோ அதை நம்மவர்கள் ஒப்புக் கொள்வதில்லை. அடிப்படையை மறந்து விட்டுப் பின்னாளில் அதன் மீது எழுந்தக் கற்பனையைப் பெரிதாக நினைக்கின்றோம். ஒரு நாட்டில் ஒழுக்கம் இருக்க வேண்டுமென்றால் இலக்கியம் வளரக் கூடாது என்று கூடக் கூறுவேன். ஏனென்றால் அது கவர்ச்சி மயக்கத்தை உண்டாக்கும். மூலப் பொருளைக் காட்டாது. இலக்கியம் வந்த பிறகு உழைப்பு வீணாகி விட்டது. இன்னொன்று, கவிதை நயம் பார்க்க ஆரம்பித்து விட்டோம். "அருமையாக எழுதியிருக்கிறான்" என்று சொல்கிறானே தவிர சரியாக எழுதியிருக்கிறான்" என்று சொல்கிறானா? -நேர்காணல் சுபமங்களா, ஆகஸ்ட் 1993.
கவிதை இலக்கியத்தின் தீமையைக் கவிஞர் சுரதா இங்குத் தெள்ளத் தெளிவாகச் சுட்டிக் காட்டியுள்ளார். பெரும்பாலான கவிஞர்களின் பொய்க்கவிதை காரணமாக, கவிதை இலக்கியமே கூடாது என்று சொல்லும் அளவுக்கு ஒரேயடியாக இதனை ஒழித்துக் கட்டக் குரல் கொடுக்கிறார் சுரதா. ஆனால், அல்குர் ஆன் இலக்கியத்தை - கவிதையைச் சில நிபந்தனைகளுடன் ஏற்றுக் கொள்கிறது. "தங்களுக்கு அநீதி இழைக்கப் பட்டதற்காகப் பதிலுக்குக் கவிதை பாடுபவர்களாகிய - நம்பிக்கை கொண்ட - நற்செயல்கள் புரிகின்ற - அல்லாஹ்வை அதிகம் நினைவு கூர்கின்ற கவிஞர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்கின்றான்" எனக் குர்ஆன் [026:227] கூறுகிறது. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் எதிரிகளுக்குக் கவிதையால் பதிலடி தருகின்ற கவிஞர்களைக் கீழ்க்காணும் ஹதீஸில் ஊக்குவித்துள்ளார்கள்: "அவர்களுக்கு பதிலடி கொடுங்கள், உம்முடன் ஜிப்ரீல் துணையிருப்பார்" - முஸ்லிம் 4541. நல்ல கவிதைகளைப் பாடுவோருடன் வானவர் ஜிப்ரீல் இருப்பது போலவே, தீய கவிதைகளைப் பாடுவோருடன் ஷைத்தான் கலந்திருக்கிறான். எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருளின் மெய்ப்பொருளை அறியும் ஆர்வம் கொள்ளாமல், தாம் கேள்விப் பட்டதையெல்லாம் கூறுவோரும் கவிஞர்களுள் உளர். அவர்கள் பொய்யையே புகல்கின்றனர். பொய்யுரைக்கும் அந்தப் பாவிகள் ஒவ்வொருவர் மீதும் ஷைத்தான்கள் புகுந்து விடுகின்றனர். இப்படிப் பட்ட இயல்புடைய கவிஞர்களையும் இக்கவிஞர்களைப் பின்பற்றுகிறவர்களையும் 'பாவிகள்' எனவும் 'வழிகேடர்கள்' எனவும் ஒருசேர இறைவன் கண்டித்துள்ளான். அந்த இறைவசனங்களின் அடிப்படையில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களை அணுகும்போது ஷைத்தான்கள் கோலோச்சுகின்ற எத்தனையோ பொய்மொழிகள் அவற்றினூடே விரவிக் கலந்துள்ளமையைக் காண முடிகின்றது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்த்து மக்காவின் இறைநிராகரிப்பாளர்கள், "இவர் ஒரு கவிஞர்" என்று பழிக்குற்றம் சாட்டினர் [021:005]. அவர்களுக்குப் பதிலுரைப்பதைப்போல, "நாம் இவருக்குக் கவிதையைக் கற்றுக் கொடுக்கவில்லை; அது இவருக்குத் தகுமானதன்று" [036:069] என்று அல்லாஹ் தன் மறையில் தெளிவுறுத்தினான். வருங்காலத்தில் உறுதியாக இன்னதுதான் நிகழும் என்பதை அறியாத நிலையில் அதைப் பற்றிப் பொய்யாக முன்னறிவிப்புக் கூறுகின்ற குறிகாரனையும் பகுத்தறிவிழந்து உளறுகின்ற பைத்தியக் காரனையும் பொய்புனைந்து பாடும் கவிஞனையும் ஒருசேர வைத்துப் பேசுகின்ற திருமறை வசனங்களும் [052:029-030] காணக் கிடைக்கின்றன. கவிஞர்கள் தங்களுடைய கவித்திறனால் பொய்யான ஒன்றையும் மெய்போலப் பாடிவிடுகின்ற சாதுர்யம் படைத்தவர்கள். இறைவன் சொல்லாதவற்றை "இறைவன் சொன்னான்" என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறாதவற்றை "நபி கூறினார்" என்றும் பாடும் தன்மையை நம் தமிழ்க் கவிஞர்களிடம் பரவலாகக் காண முடிகிறது. தாம் கேள்விப் பட்டதையெல்லாம் எடுத்து வைத்துக் கொண்டுக் கவிதை புனைகின்ற இவர்களுள் பெரும்பாலோர் பொய்யர்களே எனும் இறைவசனத்திற்கேற்ப, இல்லாதவற்றையெல்லாம் இருப்பதுபோலச் சில கவிஞர்கள் பாடிச் சென்றுள்ளனர். - தொடரும், இன்ஷா அல்லாஹ்.

திங்கள், ஜூலை 03, 2006

ஒரு 40 பக்க நோட்டும் இரு நிகழ்வுகளும்

"வகாபிகள் தர்காக்களை இடிக்க கடப்பாரைகளை தூக்கிக் கொண்டு வ்ருகிறார்கள். சூபிஞானிகளின் சமாதிகளை தோண்டிப்பார்க்க மண்வெட்டிகளோடு அலைந்து திரிகிறார்கள்"
என்பதாக குலாம் ரஸூல் திண்ணையில் குற்றம் சாட்டியிருந்தார். இக்குற்றச் சாட்டு எம் தலைவரை நோக்கியே வீசப் படுவதால் அவர்தாம் இதற்கு பதில் சொல்லத் தகுந்தவர். பிறந்த நாட்டை விட்டுத் துரத்தப் பட்ட அவர், எட்டே முக்கால் ஆண்டுகள் கழித்துத் திரும்பி வந்தபோது அந்த நாடே அவரிடம் தன்னை ஒப்படைத்தது. "இன்றைய நாளில் பழிக்குப் பழி - இரத்தத்திற்கு இரத்தம் என்பதில்லை; எல்லாருக்கும் பொது மன்னிப்பு" என்று அறிவித்தவர், உருவங்களையும் (+)உயர்த்திக் கட்டப் பட்ட சமாதிகளையும் அழித்தொழிப்பதில் மட்டும் மிக உறுதியாயிருந்தார். ஆதி இறையில்லமான கஃபாவுக்கு உள்ளே இருந்த தம் பெரும் பாட்டனார், அண்ணல் இபுராஹீமுடைய உருவத்தையும் அவர் விட்டு வைக்கவில்லை. அவர்தாம் எங்கள் தலைவர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
***
"வளக்கமா செய்யிறது .. இந்த வருஷமும் செய்யுறோம். இன்னக்கி ஒங்க தெருவுல வசூலு. எல்லாரும் எளுதியிருக்காங்க. நீங்களும் ஒங்களாலெ ஏண்டதெ .."

என் முன்னே நீட்டப் பட்ட அந்த 40 பக்க நோட்டையும் பக்கத்துத் தெருவிலிருந்து வசூலுக்கு வந்திருந்தவர்களையும் மாறி-மாறிப் பார்த்து விட்டுக் கேட்டேன்: "என்ன வசூலு?"

"அசனார்($) ஒசனாருக்கு(#) வர்ர மாசம் கந்திரில்ல? தம்பிக்கு தெரியாதா? நாங்க பெரிய தைக்கா சார்பா வந்திருக்கோம்"

"ஓ.. ஒரு தடவ ரிக்கார்ட் டான்ஸு ஆட வந்த பொண்ணுங்களோட நம்ம ஆளுக்களும் மேடையிலெ ஏறினதா ..?"

"அது பளய கத தம்பி. அதெ உடுங்க. நீங்க எளுதுங்க "

"எளுதுறது இருக்கட்டும். எனக்கு ஒரு சந்தேகம் ரொம்ப நாளா. ஒங்கள மாதிரி இதெ எல்லாம் எடுத்து நடத்துவறங்களுக்குத்தான் தெரிஞ்சிருக்கும்"

"என்னா தம்பி?"

"இல்லெ .. இந்த அசனாரு ஒசனாருங்கிறது யாரு சாபு?"

சாபுவின் முகம் சட்டென்று மாறியது. "நெசமாவே தெரியாமத்தான் கேக்கிறியளா? அசனாரு ஒசனாரு ரஸூலுல்லாவோட பேரப் புள்ளைங்க" 

"அசனாரெ மதீனாவுலேயும் ஒசனாரெ கர்பலாவுலேயுமுல்ல அடக்கிருக்கு? அப்போ .. நம்ம ஊர்ல அவுங்களுக்கு எப்டி கபுரு வந்துச்சி?"

"அது வந்து .. தம்பி .."

கூட வந்திருந்த ஒருவர் குறுக்கிட்டார் "சாபு, நோட்ட வாங்கிட்டு வாங்க. இவன் நஜாத்துக்காரன். சரியான வஹ்ஹாபியா இருப்பான்"

ஏற்கனவே வசூல் கொடுத்திருந்த நாலைந்து பேர் எங்களை நோக்கி வந்தனர். நான் சிரித்துக் கொண்டே சாபுவிடம் கேட்டேன்:

"என்ன வேணும்?"

"நோட்டு புக்கு"
***
இந்நிகழ்வுக்குப் பின் பல ஆண்டுகள் கழித்து ஒருவரிடமிருந்து எனக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது - என்னைச் சந்திக்க விரும்புவதாக. "என்ன விஷயம்?" என்று மட்டும் கேட்டேன். "பள்ளிவாசல் கட்ட வசூல் ஆரம்பிச்சிருக்கோம்; உதவி வேணும்". இடம் சொல்லி வரச் சொன்னேன். சந்தித்துக் கொண்டோம்.

எங்கோ பார்த்த நினைவு. "நீங்க ..."

அறிமுகம் செய்து கொண்டார் அந்த இளைஞர்.

"பள்ளியெ எந்த எடத்துலெ கட்டப் போறீங்க?"

"எங்க தெருப் பக்கமா நீங்க வந்து ரொம்ப நாளாயிட்டுதுன்னு நெனக்கிறேன். கட்டுமான வேல ஆரம்பிச்சாச்சு"

"ஆமா, அதான் எங்கேன்னு கேட்டேன்"

"எங்க பொறுப்புல இருந்த பெரிய தைக்கால இடிச்சுட்டுத்தான்".

வஹ்ஹாபிகளின் கடப்பாரைகளுக்கும் மண்வெட்டிகளுக்கும் வேலை இருந்து கொண்டுதானிருக்கிறது - இப்போது அவர்தம் வீட்டுத் தோட்டத்தில்.
ஃஃஃ
__________________________________________________
(+) அபுல்ஹய்யாஜ் அல்அஸதீ என்ற நபித்தோழர் கூறுகிறார்: "அல்லாஹ்வின் தூதர் என்னை நியமித்த அதே பணிக்காக உன்னை நான் நியமிக்கிறேன். உயர்(த்திக் கட்டிக் கண்ணியப் படு)த்தப் பட்ட எந்தச் சமாதியையும் தரைமட்டமாக்காமல் விட்டு வைக்காதீர் ..." என்பது அலீ அவர்களால் எனக்கு இடப் பட்டக் கட்டளையாகும். [முஸ்லிம் 1609, திர்மிதீ 970, நஸயீ 2004, அபூதாவூத் 2801, அஹ்மது 622; 703; 1012; 1111; 1175].

($) பெருமானாரின் மூத்த பேரன், அண்ணல் ஹஸன் (ரலி)

(#) பெருமானாரின் இளைய பேரன், அண்ணல் ஹுஸைன் (ரலி)

("முகமது நபியைப் பெருமானார் என்று வகாபி தனது கலங்கலான குழப்பமான மொழியில் குறிப்பிட்டு, பெயர் குழப்பத்தின் மூலமாகக் கருத்தியல் குழப்பத்தை உருவாக்கப் பார்க்கிறார்"என்ற குற்றச் சாட்டு குலாம் ரஸூலிடமிருந்து வந்தாலும் வரும்).

வெள்ளி, ஜூன் 23, 2006

பொருள் மயக்கம்

ஏக இறைவனான அல்லாஹ்வின் பல பெயர்களுள் ஒன்றுதான் 'வஹ்ஹாப்' எனும் பெயர். வஹ்ஹாப் என்ற அரபுச் சொல்லுக்கு நிகரற்ற பெருங் கொடையான் என்பது தமிழ்ப் பொருள். 'மிக்குயர்ந்த டிக்’ஷனரியிலிருந்து ...' என்ற தலைப்பில் வெளியான எனது திண்ணைக் கடிதத்தின் [சுட்டி-1] மூன்று இறைவசனங்களின் மூலம் 'வஹ்ஹாப்' என்பவன் ஏக இறைவன்தான், மனிதர்களில் எவருமல்லர் என்று சான்றுகளின் அடிப்படையில் தெளிவாக மெய்ப்பிக்கப் பட்டு விட்டது. 'நான் ஏன் வஹ்ஹாபி?' என்பதை எனது வலைப்பூவில் [சுட்டி-2] "வஹ்ஹாப்(நிகரற்றக் கொடையாளன்)ஐச் சார்ந்தவன் - வஹ்ஹாபி" என்று தெளிவாக அறிவித்து விட்டே எழுதத் தொடங்கினேன். "வஹ்ஹாப் என்றால் அல்லாஹ் என்று பொருள்" எனும் 'மொழியாக்க'த்தோடு நான் எங்கு-எப்போது மூன்று கால்களோடு நின்றேன் என்று 08.06.2006இல் திண்ணையில் எழுதிய ஹமீது ஜா.பர் [சுட்டி-3] சுட்டிக் காட்ட முடிந்தால் அவருடைய எழுத்து நேர்மையைப் பாராட்டலாம். குலாம் ரஸூல் எப்படி ரஸூல் ஆக முடியாதோ அதேபோல் முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாபோ, அவருடைய தந்தை அப்துல் வஹ்ஹாபோ, பண்டாரி (அப்துல்)வஹ்ஹாபோ அந்த நிகரற்ற ஒரேயொரு பெருங் கொடையாளனான வஹ்ஹாப் ஆக முடியவே முடியாது. எனவே, மேலும் மயங்க வேண்டாம்; மயக்க நினைக்கவும் வேண்டாம். 'திண்ணை வாசகர்கள் எல்லாம் மாங்கா மடையன்கள்' என்று ஹமீது ஜ.பர் [சுட்டி-4] சொன்னதுபோல் நான் ஒருபோதும் நினைக்க மாட்டேன். ஸலாமைப் பொருத்தவரை சாந்தி,சமாதானம் எல்லாம் சரிதான். ஆனால், 'அஸ்லம' ( أَسْـلـَمَ சரணடைந்தான்) என்ற கடந்தகால வினையிலிருந்து பெறப் படும் சொல்லே இஸ்லாம் ஆகும். சான்று:
"... (எனக்கு முற்றிலும் வழிப்பட்டவராகச்) சரணடையும் என்று (இபுராஹீமிடம் அவருடைய இறைவன்) கட்டளையிட்டபோது அவர், அகிலங்களின் இறைவனுக்கு முற்றிலும் வழிப்பட்டோனாக, இதோ, சரணடைந்து விட்டேன் என்று கூறினார்" [002:131]
என்று தன் அருள் மறையில் வஹ்ஹாபு கூறுகிறான். இப்போது ஹமீது ஜா.பரின் ஊர்க்காரரான 'பண்டாரி வகாபோ', குலாம் ரஸூல் அடிக்கடி காட்டும் 'பூச்சாண்டி வகாபோ' வாசகர்களின் நினைவுக்கு வரார் என்று நம்புகிறேன்.
நல்லவேளை, சாமீ (சீன்+அலி· ப்+மீம்+யே) என்ற அரபு வார்த்தைக்கு உயர்ந்தவன் என்று பொருள். இதுவும் இறைவனின் திருநாமங்களில் ஒன்று. அதனால் சாமீ என்றால் இறைவன் எனவே சாமீ என்று சொல்வதில் தவறில்லை என்று ·பத்வா கொடுக்காமலிருந்தார் நம் வஹாபி
என்பவை ஹமீது ஜா.பரின் அருஞ்சொல் அகராதிப் பக்கத்திலுள்ளவை. இந்தச் சாமீ எங்கிருந்து பெறப் பட்டது என்று அவர் குறிப்பிட்டால் நன்றியுடையவனாவேன்.
என்றாலும், அஸ்-ஸாமிஃ (السامع = செவியுறுபவன்) என்று அல்லாஹ்வைச் சிலவேளை நான் அழைப்பதுண்டு - மிக்குயர்ந்த டிக்'ஷனரியின். சான்றின் அடிப்படையில்:
"(நபியே,) கூறுவீராக! நீங்கள் (அவனை) அல்லாஹ் என்றழையுங்கள் அல்லது அர்ரஹ்மான் என்றழையுங்கள். எப்பெயரைக் கொண்டு அவனை நீங்கள் அழைத்தாலும், அவனுக்கு(இன்னும் பல) அழகிய பெயர்கள் [சுட்டி-5] உள ... " [017:110].
இன்னும் மயக்கம் தெளியவில்லையெனில் ... மீண்டும் திறக்கலாம், மிக்குயர்ந்த டிக்'ஷனரியை.
ஃஃஃ
சுட்டிகள்: 1: http://www.thinnai.com/?module=displaystory&story_id=80606024&format=html 2: http://wahhabipage.blogspot.com/2006/01/blog-post.html 3: http://www.thinnai.com/?module=displaystory&story_id=80606092&format=html 4: http://www.thinnai.com/?module=displaystory&story_id=80605263&format=html 5: http://hadith.al-islam.com/Display/Display.asp?hnum=3851&doc=5

வியாழன், ஜூன் 22, 2006

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 1

எது இஸ்லாமிய இலக்கியம்?

அல்லாஹ்விடமிருந்து பெற்ற அருள் வெளிப்பாடுகளுக்கு ஏற்ப அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்தம் சொல், செயல், அனுமதி மூலம் கற்றுத் தந்தவைகளே இஸ்லாமிய மார்க்கமாகும்.

இந்த 'தீனுல் இஸ்லாம்' என்னும் வழ்க்கை நெறிக்கான அனைத்துக் கோட்பாடுகளும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திலேயே நிறைவு செய்யப்பட்டு அவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டன. இத்தகைய இஸ்லாமிய நெறி, இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் மெல்லப் பரவத் தலைப்பட்டது.

இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்ட அக்காலத் தமிழர்கள், இலக்கியங்கள் மூலமாகவும் இஸ்லாமியக் கருத்துகளை வெளியிடலாயினர்.  

இலக்கியம் என்றால் என்ன? 

இலக்கியம் என்பதற்குப் பலரும் பலவாறாக விளக்கமளித்துள்ளனர். பல்வேறு வரைவிலக்கணங்களையும் ஒருங்கிணைத்து மிகச் சுருக்கமாகக் குறிப்பதாயின், "சொல்லின் அழகைப் புலப்படுத்தி, வாழ்க்கைக்குரிய உண்மை இலக்கினை இயம்புவது இலக்கியம்" எனலாம். கல்லின் அழகை வெளிப்படுத்தி ஒன்றை வடித்தெடுப்பதைச் சிற்பக் கலை என்று வழங்குவதுபோல், சொல்லின் அழகை வெளிப்படுத்தி வாழ்க்கை இலட்சியத்தைச் சுட்டுவது இலக்கியக் கலையாகும்.

உலகெங்கிலுமுள்ள எழுத்து வடிவமுடைய மொழிகள் அனைத்தும் ஏராளமான இலக்கியங்களைப் பெற்றுத் திகழ்கின்றன. அதற்கேற்ப, தொண்மையும் செம்மையும் உடைய நம் தமிழ் மொழியிலும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாகப் பல்வகைப்பட்ட இலக்கியங்கள் தோன்றியுள்ளன. ஐரோப்பியத் தொழில் புரட்சியின் விளைவாக அச்சு இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டப் பின்னர்தான் உரைநடை வடிவம் புகழ் பெறலாயிற்று. அதுவரை இலக்கிய உலகில் மட்டுமின்றி வேறு பல துறைகளிலும் செய்யுள் வடிவம்தான் செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்தது. எனவே, கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் செய்யுள் வடிவிலேயே அமைந்திருந்தன.

இலக்கியம் என்று சொன்ன மாத்திரத்தில், அது செய்யுள் அல்லது கவிதையைத்தான் குறிக்கிறது என்று எண்ணுமளவுக்கு இப்போக்கு நீண்ட நெடுங்காலமாக நீடித்து வந்தது. வாழ்க்கை உண்மைகளை அழகுபடப் பாடிய இலக்கியங்கள் தமிழில் பல உள்ளன. அதேவேளையில் அழகுபடக் கூறவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக உண்மையைப் பலிபீடத்திற்கு அனுப்பி விட்டு, அழகையே ஆராதித்துக் கொண்டிருந்த இலக்கியங்களும் இங்கு ஏராளம் காணப்படுகின்றன.

உண்மைக்கு முரணான பொய்யும் புனைசுருட்டும் கற்பனையும் செவிவழிச் செய்திகளும் கண், காது, மூக்கு வைத்துப் புனையப்பட்ட கதைகளும் 'அழகியல்' என்னும் பெயர்தாங்கி இலக்கியத்தின் பாடுபொருளாகப் பவனி வரலாயின. உண்மையை இயம்ப வேண்டும் என்ற தலையாய இலக்கியப் பண்பு பின்னுக்குத் தள்ளப்பட்டது. பொய்யாயிருப்பினும் கவர்ச்சியோடு கூறினால் அது போதும், இலக்கியமாகிவிடும் என்னும் எண்ணம் படைப்பவனிடமும் படிப்பவனிடமும் பரவி ஊன்றலாயிற்று.

அல்குர்ஆன் அருளப்பட்டக் காலத்திலும் இந்நிலைதான் உலக இலக்கியங்கள் அனைத்திலும் மேலோங்கி இருந்தது. எனவே, இறைவன் 'இலக்கியப் படைப்பாளிகள்' என்னும் பொருள்படும் தலைப்பிலேயே ஓர் அத்தியாயத்தை வழங்கி வழிகாட்டிக் கொடுத்தான். அக்காலத்தின் இலக்கியம் என்பதே கவிதை வடிவில்தான் இருந்தது என்பதை முன்னர் கண்டோம். எனவே, கவிதை அல்லது செய்யுள் வடிவில் இலக்கியம் படைப்பவர்கள் 'கவிஞர்கள்' என அழைக்கப்பட்டனர். இலக்கியப் படைப்பாளிகள் என்னும் பொருள் தரக்கூடிய 'கவிஞர்கள்' என்ற தலைப்பில் அமைந்த அல்குர் ஆனின் 26ஆவது அத்தியாயம், இலக்கியம் பற்றிய கருத்துகளை மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது:
"ஷைத்தான்கள் யார் மீது இறங்குகிறார்கள் என்பதை (நபியே) உமக்கு அறிவிக்கட்டுமா?" "இட்டுக் கட்டும் ஒவ்வொரு பாவியின் மீதும்" "ஒட்டுக் கேட்கும் அவர்கள் பெரும்பாலும் பொய்யர்களே!" "மேலும் கவிஞர்களை வழிகேடர்தாம் பின்பற்றுவர்." "நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு திடலாகத் தட்டழிந்து திரிவதை நீர் பார்க்கவில்லயா?" "நிச்சயமாக அவர்கள் செய்யாதவற்றைச் செய்ததாகக் கூறுகின்றனர்" "(அவர்களுள்) நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்து, அல்லாஹ்வை அதிகம் நினைவு கூர்ந்து, அநீதி இழைக்கப்பட்ட பின்னர் (கவிப்)பழி தீர்த்துக் கொண்டோரைத் தவிர (மற்றோர் குற்றவாளிகளே!) தாங்கள் செல்லுமிடம் எதுவென அநீதி இழைத்தவர்கள் அதிவிரைவில் அறிந்து கொள்வார்கள். -அல்குர்ஆன் 026:221-227.
இஸ்லாம் இலக்கியங்களை ஏற்றுக் கொள்கிறது; வரவேற்கிறது. உண்மையை-யதார்த்தத்தை அழகுறப்பாடி, வாழ்க்கை இலட்சியத்தை எடுத்தியம்பும் இலக்கியங்களை இஸ்லாம் எதிர்க்கவில்லை. மாறாக, உண்மையை மொட்டையடித்துவிட்டு, அதன் தலையில் பொய்மை அல்லது அளவுக்கு மீறிய கற்பனை என்னும் சவுரிமுடியை வைத்து, பொய்க் கற்பனைச் செய்திகளையே அதிகமாக நீட்டிப்பின்னிடும் நச்சிலக்கியங்களை இஸ்லாம் கடுமையாகக் கண்டிக்கிறது. இப்படிப்பட்ட நச்சுக் கவிஞர்களை - பொய்யர்களை - அல்குர்ஆன், 'ஷைத்தான்கள்' என்றே அடையாளம் காட்டுகின்றது. 

-தொடரும், இன்ஷா அல்லாஹ்.

ஞாயிறு, ஜூன் 04, 2006

நன்றி, இபுனு பஷீர் - 2

சகோதரர் இபுனு பஷீர் அவர்களின் அனுமதி பெற்று, அவருடைய கடிதம் நன்றியுடன் இங்கு மீள்பதிவு செய்யப் படுகிறது: 



1. "இஸ்லாத்தை வகாபிசமாகவும், வகாபை அல்லாவாகவும் உருவகப்படுத்தி எழுதும் திண்ணை எழுத்தாளர் வகாபியின் குரல் அப்பட்டமான ஒரு வரலாற்று மோசடியாகும்." என்று இரண்டு வாரங்களுக்கு முன்பு சொன்ன ஹெச்.ஜி. ரசூல் சென்ற வாரம், " திருகுரான் பிரதி கூறும் வகாப் என்ற சொல் அல்லாவைக் குறிப்பதாகும்.திண்ணையில் கடந்த சில மாதங்களாக விவாதிக்கப்பட்டு வரும் வகாப் என்ற பெயர் வகாபிச தோற்றமூலவரான முகமது இப்னு அப்துல் வகாபை குறிப்பதாகும். இரண்டும் வேறு வேறானதாகும் ." என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.  

இதையேதான் நான் எனது முந்திய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். வஹ்ஹாப் ஆகிய அல்லாஹ்வும் அப்துல் வஹ்ஹாப் என்ற பெயர் கொண்ட மனிதரும் வேறு வேறு என்பது தெளிவாக தெரியும் நிலையில், உருவகப்படுத்தலும், வரலாற்று மோசடியும் எங்கிருந்து வந்தது? எழுத்தாளர் வஹ்ஹாபி, அப்துல் வஹ்ஹாபை அல்லாஹ்வாக உருவகப்படுத்தி யிருந்தார் என்றால் அதை ஹெச்.ஜி.ரசூல் சுட்டிக் காட்ட முடியுமா? 

2. "அல்லாவின் வேதம் அல்குரான். இமாம் வகாபின் வேதத்தின் பெயர் கிதாப் அல் தவ்கீத்.இதன் வழி நடப்பதே வகாபிசம். இது கஷ்புஷ் ஷீபுஹாத்,முக்தஸ்ருல் இஸ்லாம்,நஸீகத்துல் முஸ்லிமீன்,உள்ளிட்ட நூல்களின் சாரத்தையும் கொண்டதாகும்." என்பது ஹெச்.ஜி.ரசூலின் கூற்று. நான் தெளிவு படுத்திக் கொள்வதற்காக கேட்கிறேன், அல்-குர்ஆனின் கொள்கைகளிலிருந்து இமாம் அப்துல் வஹ்ஹாபின் கிதாப் அல் தவ்ஹீத் எவ்வாறு வேறுபடுகிறது? ஹெச்.ஜி.ரசூல் விளக்குவாரா? 

-நன்றி: திண்ணை 

இனி, ‘திண்ணை’யில் வராத கடைசிப் பகுதி! 
3. திண்ணையில் வந்த கடிதம் ஒன்றை படித்ததன் விளைவாக எனக்கு தோன்றிய ஒரு சிறு கவிதை! 
ஆடுகள் முட்டிக் கொள்கின்றன,  
சில தூண்டி விடப்பட்டு.. 
சில தூண்டிலில் இடப்பட்டு.. 
நரிகளும் ஓநாய்களும் கூட்டணி அமைத்து காத்திருக்கின்றன, 
நாக்குகளை தொங்கப் போட்டுக் கொண்டு! 

நன்றி - http://ibnubasheer.blogsome.com/2006/06/02/hgrasool2/

சனி, ஜூன் 03, 2006

நன்றி, இபுனு பஷீர் - 1

சகோதரர் இபுனு பஷீர் அவர்களின் அனுமதி பெற்று, அவருடைய கடிதம் நன்றியுடன் இங்கு மீள்பதிவு செய்யப் படுகிறது:

திண்ணையில் ஹெச்.ஜி.ரசூல் என்பவர் ‘அல்லாவும் வகாபும்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். (முன் குறிப்பு: ஹெச்.ஜி.ரசூல் வஹாபிசம் பற்றி முன்பு திண்ணையில் எழுதிய ஒரு கட்டுரைக்கு ‘வஹ்ஹாபி’ என்ற பெயரிலேயே ஒருவர் பதில் / விளக்கம் கொடுத்தார். அதிலிருந்து விவாதம் தொடங்கியது.) ரசூல் தனது கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:
‘இஸ்லாத்தை வகாபிசமாகவும், வகாபை அல்லாவாகவும் உருவகப்படுத்தி எழுதும் திண்ணை எழுத்தாளர் வகாபியின் குரல் அப்பட்டமான ஒரு வரலாற்று மோசடியாகும். வகாபிகளின் தலைவரென முகமது நபியைச் சொல்வதும், வகாபுடைய கருத்துக்களே அல்குர்ஆன் என்று கூறுவதும் வாசகர்களை குழப்பத்தில் ஆழ்த்தும் ஒரு தந்திர உத்தியாகும். தொடர்ந்து கருத்தியல் மோசடி நிகழ்த்தும் அவர் முதலில் இதை நிறுத்திக் கொண்டால் நல்லது. இல்லையெனில் வகாபிய மொழியில் இது மாபெரும் ஷிர்க். (இணை வைத்தல்) ஆகும். இணைவைப்பவர்களுக்கு மறுமையில் கொழுந்துவிட்டெரியும் பாழ்நரகம் தான் கதி.’ 
இஸ்லாத்தை வஹ்ஹாபிசமாகவும் வஹ்ஹாபை அல்லாஹ்வாகவும் உருவகப்படுத்துவது தவறா? இல்லவே இல்லை! குர்ஆனில் குறிப்பிடப்படும் இறைவனின் பெயர்களுள் ஒன்றே வஹ்ஹாப் என்பது! அத்தியாயம் 3 வசனம் 8 "இன்னக அன்தல் வஹ்ஹாப்" என இறைவனை குறிப்பிடுகிறது. இதன் பொருள் ‘நிச்சயமாக நீயே பெரும் கொடையாளி!’ என்பதாகும். மேலும் இறைவசனம் 17:110 இவ்வாறு கூறுகிறது: "நீங்கள் (இறைவனை) அல்லாஹ் என்று அழையுங்கள்; அல்லது அர்ரஹ்மான் என்று அழையுங்கள். எப்பெயரைக் கொண்டு அவனை நீங்கள் அழைத்தாலும், அவனுக்கு(ப் பல) அழகிய திருநாமங்கள் இருக்கின்றன" குர்ஆனிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு பெயரைக் கொண்டு இறைவனை அழைப்பது எப்படி மோசடியாகும் என்பதை ஹெச்.ஜி.ரசூல் தான் விளக்க வேண்டும். 

ஹெச்.ஜி.ரசூல் மேலும் சொல்கிறார், ‘அல்லாவும், வகாபும் எவ்வாறு வேறுபடுகின்றனர் என்பதை இனி கவனிப்போம். அல்லாவிற்கு பிறப்பு கிடையாது. வாப்பா, உம்மா கிடையாது. வகாபி கி.பி.1703-ல் மத்திய அரேபியாவின் நஜ்து பகுதியில் பனுதமீம் குலத்தில் பிறந்தவர். இவரது முழுப்பெயர் முகம்மது இப்ன் அப்துல் வகாப். இவரது வாப்பாவின் பெயர் ஷெய்க் இப்ன் அப்துல் வகாப்.' 

இதைத் தொடர்ந்து, வஹ்ஹாபிசத்தை தோற்றுவித்தவர் என இவர்களால் ‘குற்றம் சுமத்தப்படும்’ முகம்மது இப்ன் அப்துல் வகாப் என்ற மனிதரைப் பற்றி தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார் ரசூல். 

இங்குதான் அவரது அசட்டு வாதம் வெளிப்படுகிறது. இறைவனின் பெயர்களுள் ஒன்று வஹ்ஹாப் (பெரும் கொடையாளி) என்பதை முன்பு பார்த்தோம்.அப்துல் வஹ்ஹாப் என்பது மனிதர்கள் வைத்துக் கொள்ளும் பெயர். இதற்கு ‘வஹ்ஹாபின் அடிமை’ என்பது பொருள். ரசூல் குறிப்பிடும் மனிதரின் பெயரும் அப்துல் வஹ்ஹாப் தான்! இறைவனின் பெயர்களோடு ‘அப்துல்’ என சேர்த்து ‘இறைவனின் அடிமை’ என பொருள் வரும்படியாக பெயர் வைத்துக்கொள்வது நடைமுறையில் உள்ள பழக்கமே. அப்துல்லா, அப்துர் ரஹ்மான் என இதற்கு பல உதாரணங்களை தரலாம். இது எப்படி ‘ஷிர்க்’ இணைவைத்தலாகும் என்பதையும் ஹெச்.ஜி.ரசூல்தான் விளக்க வேண்டும். 

இவர் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை பக்கம் தப்பித்தவறிகூட போகாமல் இருப்பது நல்லது. அங்கு ‘Chief Minister’ என்றும் ‘PA to Chief Minister’ என்றும் இரு பெயர்ப்பலகைகளை பார்த்தார் என்றால், ‘முதலமைச்சருக்கு கீழே பணிபுரியும் நீ எப்படி Chief Minister என்று பெயர் வைத்துக் கொள்ளலாம்?’ என்று அந்த PA மீது பாய்ந்தாலும் பாய்ந்து விடுவார்! 

பின்குறிப்பு: "இன்றைக்கு தமிழ் இஸ்லாமிய சமூகத்தின் சிறந்த சிந்தனையாளர்களுள் ரசூல் முதன்மையானவர் எனலாம்." - நேசகுமார். நல்ல ஜோக்! 

நன்றி - http://ibnubasheer.blogsome.com/2006/05/17/hgrasool/

வெள்ளி, ஜூன் 02, 2006

மிக்குயர்ந்த டிக்'ஷனரியிலிருந்து ...

கடந்த வாரத் திண்ணை (25.05.2006) இதழில் 'அறிவு ஜீவிகள் .........?!' என்ற தலைப்பில் ஒரு ஒரு கடிதம் வெளியாகி இருந்தது. அதில்,
"இஸ்லாம் என்றால் என்ன பொருள் என்றே தெரியாமல் வெறும் ஏட்டறிவை அதையும் சரியாகப் புரிந்துக்கொள்ளாமல் தனக்குத் தோன்றியபடி விளக்கம் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்"
என்று கடிதம் எழுதிய ஹமீது ஜா· பர் என்பார் யாரைப் பற்றியோ குறைப் பட்டுக் கொண்டிருக்கிறார். 'இஸ்லாம் என்றால் என்ன பொருள்?' என்பதை அவராவது சொல்லித் தந்திருந்தால் அவரது கடிதம் முழுமை பெற்றிருக்கும். போகட்டும்.
"எந்த டிக்ஷனரியில் இருக்கிறது வஹ்ஹாப் என்றால் இறைவன்/அல்லாஹ் என்று?"
என்ற கேள்வியை அவர் திண்ணையில் முன்வைத்திருக்கிறார். 'சொன்னால் பிழையாகும்' என்ற அய்யப்பாடோ 'சுருட்டி மறைக்க' வேண்டிய கட்டாயமோ எனக்கில்லாததால் அவருடைய கேள்விக்கு பதில் - மிக்குயர்ந்த டிக்'ஷனரியான அல்குர்ஆனிலிருந்து:
'வ-ஹ-ப' என்ற வேரடி வினையிலிருந்து பிறந்த சொல் 'வஹ்ஹாப்' என்பதாம். பார்க்க: 003:008, 006:0084, 014:038, 019:049, 019:050, 021:072, 021:090, 026:021, 029:027, 038:30, 038:043.
"எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர்வழியை அறிவித்ததன் பின்னர், எங்களுடைய உள்ளங்கள் தடம் புரண்டு விடுமாறுச் செய்து விடாதே! உன் அருளை எங்களுக்கு அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெரும் கொடையாளி [இன்னக்க அன்த்தல் வஹ்ஹாப்]" 003:008.
"அனைவரையும் மிகைத்த பெரும் கொடையாளியான உங்கள் இறைவனின் [ரப்பிக்கல் அஸீஸில் வஹ்ஹாப்] அருட் கிடங்கு அவர்களிடம்தான் இருக்கின்றதா?" 038:009.
"என் இறைவனே! என்னுடைய குற்றங்களை மன்னித்து விடு! எனக்குப் பின்னர் எவருமே அடைய முடியாத ஓர் ஆட்சியை எனக்கு நீ அளித்தருள் புரிவாயாக! நிச்சயமாக நீயே பெரும் கொடையாளி [இன்னக்க அன்த்தல் வஹ்ஹாப்] என்று (ஸுலைமான்) பிரார்த்தனை செய்தார்." 038:35.
[...] குறிகளுக்குள் உள்ளவை அரபுமொழி உச்சரிப்பாகும். இங்கு 'வஹ்ஹாப்' என்பவன் யார் என்று சான்றுகளின் அடிப்படையில் மெய்ப்பிக்கப் பட்டு விட்டது.
இனி, 'தெரியவில்லை'களில் பட்டியலிடப்பட வேண்டிய பெயர் எதுவென முடிவு செய்ய வேண்டியது திண்ணை வாசகர்களின் பொறுப்பு.
***
அடுத்து, ஓட்டைப் பானை எதுவெனெ இனங் கண்டு கொள்ளக் கூடிய இன்னொரு கூடுதல் பொறுப்பையும் திண்ணை வாசகர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

"சமாதிகள் தரைமட்டமாக்கப் படவேண்டும்" என்ற தன் தலைவரின் கட்டளைக்கானத் தாரகைச் சான்றுகளைத் திண்ணையில் வைத்து, எல்லாப் பானைகளிலும் ஒருவர் நீர் வார்க்கிறார் - ஓட்டைப் பானை உட்பட.

முக்கால்வாசி கருகிப் போன பின்னரும் தம் சமாதிக் காதலைக் கைவிட முடியாமல் புலம்பிக் கொண்டிருக்கிறார் இன்னொருவர்.

தானாகப் புலம்பிக் கொண்டிருக்கட்டும்; ஆனால், புலம்பலுக்கு ஏன் " நபி முகமது முன் வைத்த அறவியல் கொள்கைகள்" என்ற பொய்ப் பெயர்?

சிறியதென்று எண்ணி ஏமாறிப் போனேன். பானையின் ஓட்டை இவ்வளவு பெரிதா?
ஃஃஃ

வியாழன், மே 18, 2006

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - முன்னுரை (சுருக்கம்)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்! அனைத்துப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! மனித குலம் இம்மண்ணில் நல்லவண்ணம் வாழவேண்டும் என்பதற்காக, மனிதனைப் படைத்த இறைவன் வழங்கிய வாழ்வியல் நெறியே அல்குர்ஆன் ஆகும். இந்த வாழ்வியல் நெறிக்கேற்ப எப்படி வாழ வேண்டும் என்பதற்கு முன்மாதிரியாகத் திகழ்ந்துப் பெருவாழ்வு வாழ்ந்து சென்றவர் பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்களாவர். இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரங்கள் அல்குர்ஆன் என்னும் இறைமறையும் ஹதீஸ் என்னும் நபி நெறியுமேயாம். இலக்கியம் உள்ளிட்ட மனித வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் அழகிய வழிகாட்டுதல்களை இஸ்லாம் வழங்கியுள்ளது. இலக்கியத் தளத்தில் நின்று தூய இஸ்லாத்தின் உன்னதக் கொள்கைகளை மேலோங்கச் செய்கின்ற நூல்கள் உலகெங்கும் தோன்றியுள்ளன. தமிழ் மண்ணில் இஸ்லாம் பரவிய ஆரம்பக் காலகட்டங்களில் 'இஸ்லாமியக் கொள்கைகளை எடுத்தியம்புவதற்காக' எனச் சொல்லிக் கொண்டு, தமிழ் இலக்கியங்கள் பல புனையப் பட்டன. இஸ்லாமியப் பழந்தமிழ் இலக்கியம் எனச் சொன்ன மாத்திரத்தில், உமறுப் புலவரின் சீறாப்புராணமும் குணங்குடி மஸ்தானின் ஞானப்பாடல்களும் உடனடியாக நினைக்கத் தக்க அளவுக்கு முதலிடம் வகிக்கின்றன. தக்கலை பீர்முஹம்மது ஸாஹிபு, கோட்டாறு ஞானியார் ஸாஹிபு போன்ற ஸூஃபிப் புலவர்களின் பாடல்கள் அந்தந்த வட்டாரங்களில் சிறப்பாகப் போற்றிப் பயிலப் படுகின்றன. இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் என அறியப் படுகின்ற இந்த நூல்கள், இஸ்லாம் காட்டுகின்ற இலக்கிய நெறிப்படி அமைந்திருக்கின்றனவா? இஸ்லாமியக் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் இந்த இலக்கியங்கள் எந்த அளவுக்கு மேம்படுத்திப் பாடியுள்ளன? திருமறை-நபிநெறி வெளிச்சத்துடன் இந்த இலக்கியக் கழனியில் 'இறங்கி'ப் பார்க்கிற போது, பயிர்கள் அளவுக்குக் களைகளும் மலிந்துள்ளமையைக் காண முடிகின்றது. இன்னும் சொல்லப் போனால் பயிர்களை விடக் களைகளே மிகுதி எனலாம். இந்த இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களில் காப்பிய மரபும் சைவசித்தாந்த மரபுகளுமே ஆதிக்கம் செலுத்துகின்றன. இவற்றுக்கு இஸ்லாமியச் சாயம் பூசும் முயற்சியிலேயே முஸ்லிம் புலவர்கள் சிரத்தை எடுத்துள்ளனர். உமறுப் புலவரின் விபரீதக் கற்பனையில் இஸ்லாமிய மாண்புகள் மலினப் படுத்தப் பட்டுள்ளன. ஓரிறைக் கொள்கையைக் கொச்சைப் படுத்துகின்ற அத்துவைதச் சீழ்வடியும் கவிதைகளைப் பாடிப்பாடி, ஞானக் கவிஞர்கள் இலக்கியத் தாகம் தணித்துள்ளனர். இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களின் குணம் நாடி, அவற்றைப் பாராட்டுகின்ற வகையில் பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆனால், அவற்றில் குணத்தைக் காட்டிலும் மலிந்து காணப் படும் குற்றங்களைப் பேசுகின்ற முழுநூல் எதுவும் இதுவரை வெளிவந்ததில்லை. முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் மீது முஸ்லிம் அறிஞர் பெருமக்கள் கொண்டிருக்கும் பாசத்திரையானது, உண்மையைப் புலனாய்ந்திடும் முயற்சிக்குத் தடை போட்டிருக்கலாம்!.
"நம்பிக்கையாளர்களே! நீங்கள் நீதியின் மீது நிலைத்திருங்கள். உங்களுக்கோ (உங்களின்) பெற்றோருக்கோ (உங்களின்) நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்காளாக இருங்கள் ..."
என இறைமறை குர்ஆன் [004:135] எடுத்துரைத்துள்ளது.

இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் எனப் பெயர் பண்ணிக் கொண்டு, தூய இஸ்லாத்திற்கு அநீதி இழைத்துள்ளன பல இலக்கியங்கள். இவற்றைப் பாடியோர் நமது புலவர் பெருமக்களாகிய 'அப்பா'மார்களாக இருக்கலாம். இந்த இலக்கிய அநீதியை எடுத்துரைப்பது, அந்தப் புலவர் பெருமக்களுக்கு விரோதமிழைப்பது போலிருந்தாலும் கூட, அல்லாஹ்வுக்காக நாம் உண்மை சாட்சியுரைத்திட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தை முன்னிருத்தியே 'இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள்' என்னும் இந்நூல் எழுதப் பட்டுள்ளது.

இஸ்லாத்துக்கு விரோதமாகப் "பொய்யையும் புனைசுருட்டையும் பாடுகின்ற கவிஞர்கள் மீது ஷைத்தான்கள் இறங்குகின்றனர்" என இறைமறை குர்ஆன் எச்சரிக்கிறது.

இஸ்லாத்துக்கு அநீதி இழைத்து இலக்கியம் பாடிவந்த ஒரு கவிஞனை 'ஷைத்தான்' என்றும் அவனது கவிதையை 'நாற்றமெடுத்த சீழ்' என்றும் நபி (ஸல்) அவர்கள், கடுமையான சொற்களால் வைதுள்ளனர்.

அப்பழுக்கற்ற இஸ்லாமியத் தடாகத்தில் அப்பாமார்களின் பாடல்கள் நஞ்சைக் கலந்துள்ளன. இதைக் காணும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நெஞ்சம் கொதிப்பது இயல்பே! அந்த நெஞ்சக் கொதிப்பு, இந்நூலில் சில இடங்களில் வெம்மையான சொற்களில் வெளிப் பட்டிருக்கலாம். அதுவுங்கூட நபி (ஸல்) அவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றியதே என்பதை வாசகர்கள் கவனத்தில் கொள்வார்களாக!

இம்முயற்சியில் எம்மை ஈடுபடச் செய்த எல்லாம் வல்ல இறைவனுக்குச் சிரம் பணிந்து நன்றி பாராட்டுகிறேன்.

- ஹஸ்ஸான்

யாருக்குச் சொந்தம்?

சென்ற வாரத் திண்ணை [11.05.2006] இதழில் வெளியான மூன்று கடிதங்களுக்கு இங்கு நான் பதில் சொல்லியாக வேண்டும். முதலாவதாக,
"ஏகப்பட்ட அரபு மொழி மற்றும் இஸ்லாமிய சமய வழக்கிலுள்ள சொற்களைப் போட்டு விளக்கங்கள், அல்லது இஸ்லாமிய உட்பிரிவுகள் பற்றிய சண்டைகள் - ஒரு தமிழ் வாசகனுக்கு இதனால் என்ன பயன்?? ஒவ்வொரு திண்ணை இதழிலும் இந்த இஸ்லாமியக் கருத்துத் தீவிரவாதத்திற்கு ஏன் இடமளிக்க வேண்டும்?"
என்று ஒரு கண்டனக் குரல். வேற்றுமொழிப் பெயர்ச் சொற்களை அப்படியே குறிப்பதால் திண்ணையில் தீவிரவாதம் எப்படி ஏற்படும் என்று எனக்கு விளங்கவே இல்லை. தாய்மொழிப் பற்று ஒவ்வொரு தமிழனுக்கும் தேவையே. அதற்காக, 'மிஸ்ஸிஸ்ஸிப்பி' என்ற ஊரின் பெயர்ச் சொல்லை "சிப்பி என்பவள் செல்வி" என்று தமிழில் எழுதினாலோ 'மிடில்ஸெக்ஸ்'ஐ "நடு இனம்" என்றோ வேறு ஏதாவது தமிழ்ச் சொல்லால் எழுதினாலோ நன்றாகவா இருக்கும்? திண்ணையில் 'கடித இலக்கியம்' எழுதுபவரின் பெயரை, 'அவைத் தலைவர்' என்று நாம் தமிழில் எழுதுவது சபாநாயகம் அவர்களுக்குப் பெருமை சேர்க்குமா? அதுவும், 'மஹாத்மா'வைக் குறித்து 'பரமாத்மா'வின் 'ஜீவாத்மா'க்கள் திண்ணையில் சொல்லாடிக் கொண்டிருக்கும் 'தமிழ்ச் சூழ'லில் 'பாவாத்மா'க்களைக் குறை சொல்வதற்கு, 'ஜடாயு'வின் 'அந்தராத்மா'வுக்கு எப்படித்தான் மனம் வந்ததோ!.
***
இரண்டாவதாக,
"தமிழில் தொழுகை நடத்துவதற்கு வகாபி மறுப்பு தெரிவிப்பதற்கு காரணம் ஒருவேளை இப்படியான திருக்குர்ஆனிய சில வசனங்களை எப்படி வெளியே எல்லோருக்கும் தெரியும்படி சொல்வது என்ற தயக்கமாக இருப்பின் அல்லாவின் வார்த்தைகள் தான் அவை என்ற வகையில் அந்த தயக்கத்தை விட்டொழிக்க முயல வேண்டும் இவ்வசனங்கள் சொல்லப்பட்ட சூழலையும் கருத்திற்கொள்ள வேண்டும். என்பதே எனது வேண்டுகோள்"
என்று சூபி எனக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். குர்ஆன் பிரதிகளை யாராவது பதுக்கி வைத்துக் கொண்டு அஞ்சியஞ்சி விற்கிறார்களா என்ன? இத்தனை விரைவில் காலம்தான் எப்படி மாறிப் போய்விட்டது பாருங்கள்! சூபிகளே குர்ஆனுடைய 'சில' வசனங்களை எடுத்தெழுதுவது மகிழ்வுக்குரிய மாற்றம்தான்! - நோக்கம் எதுவாக இருப்பினும். அஃதென்ன 'சில வசனங்கள்'? அனைத்து வசனங்களையும் உள்ளடக்கிய குர்ஆன் பதிப்புகள், தமிழ் உட்பட உலகின் எல்லா மொழிகளிலும் மூலைக்கு மூலை கிடைக்கிறதே! காசு கொடுத்து வாங்கிப் படிக்க இயலாதவர்களுக்கு இப்போது வலைத் தளங்களிலும் குர்ஆன் 'வெளியே தெரியும்படி' திறந்துதான் கிடக்கிறது! திறந்து கிடந்ததைப் படித்துத்தான் கேட் ஸ்டீவன்ஸ், யூஸுஃப் இஸ்லாமாக மாறிதாகக் கூறுகிறார்:
Following a bout of TB early in his career he undertook an ongoing search for peace and ultimate spiritual truth. After almost drowning in the Pacific Ocean at Malibu he received a translation of the Qur'an as a gift from his elder brother, David. His spiritual quest for answers was fulfilled and he embraced Islam in December, 1977. Six months later he changed his name to Yusuf Islam, walked away from the music business to start a new life and raise a family.
முழுச் செய்தியையும் இங்குப் படிக்கலாம்: http://www.yusufislam.org.uk/biodata.htm உள்ளேயே பூட்டி வைக்காமல், எல்லாருக்கும் வெளியே தெரியும்படி உள்ள குர்ஆனினால் ஈர்க்கப் பட்டோரின் பட்டியல் வெகு நீளம் என்பதும் அதில் குலசையைச் சேர்ந்த தமிழ் வலைப் பதிவர் http://iniyaislam.blogspot.com/ ஒருவரும் அடக்கம் என்பதும் சூபிக்குத் தெரியாமலிருக்க வாய்ப்புண்டு. கனவுலக முகமூடியைக் கழட்டி விட்டு, நனவுலகிற்கு சூபி வரவேண்டும் என்பதே என் அவா.
***
இறுதியாக, 'அல்லாவும் வகாபும்' என்ற தலைப்பில் ஒரு கடிதம். அதிலுள்ள 'வகாபு' என்ற பெயரைப் பற்றிப் பல குழப்பமான செய்திகளுக்கு விளக்கமளிக்கும் முன், நான் என்ன எழுத வேண்டும், அதை எப்படி எழுத வேண்டும் என்று நான்தான் முடிவு செய்ய முடியும்; வேறு யாரும் முடிவு செய்ய முடியாது - குறிப்பாக, குலாம் ரசூல் செய்யக் கூடாது. இனி,
"அல்லாவின் 99 திருநாங்களில் வகாப் என்று திருத்தல்வாதம் செய்தாலும் இச்சூழ்நிலையில் அதை ஏற்றுக்கொள்ள முடியாது"
என்று கடிதம் எழுதிய குலாம் குறிப்பிடுகிறார். பாவம், அவருக்கு என்ன சூழ்நிலையோ? இவர் ஏற்றுக் கொண்டாலும் மறுத்தாலும் உண்மை, உண்மையில்லை என்றாகி விடுமா என்ன?. மீண்டும் சில பெயர்ச் சொற்களையும் உரிச் சொற்களையும் ஆகு பெயர்களையும் வேற்று மொழியில் பயன் படுத்துவதற்காக ஜடாயு அவர்கள் என் மீது கோபம் கொள்ளக் கூடாது. அவற்றைப் பயன் படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு நான் தள்ளப் பட்டுள்ளேன் - அறியாமையை அகற்றும் விளக்கத்திற்காக. bin / ibn என்ற அரபுச் சொல் s/o என்று ஆங்கிலத்தில் பயன் படுத்தப் படும் சொல்லுக்கு ஒப்பானதாகும். மு.க. ஸ்டாலின் என்ற பெயர்ச் சொல்லை அரபியில், 'ஸ்டாலின் bin கருணாநிதி bin முத்துவேல்' என்று குறிப்பிடுவர். 1. "அப்துல்வஹ்ஹாபின் மகன் பெயர் முஹம்மது", அதே "முஹம்மதின் தந்தை பெயர் ஷெய்க்", "அந்த ஷெய்க் உடைய தந்தை அப்துல்வஹ்ஹாப் ஆவார்". எனில், முஹம்மது என்பாருக்கு அப்துல்வஹ்ஹாப் தந்தையா தாத்தாவா? குழப்பந்தானே! குழப்புவது நானல்ல; குலாம்:
"வகாபி கி.பி.1703-ல் மத்திய அரேபியாவின் நஜ்து பகுதியில் பனுதமீம் குலத்தில் பிறந்தவர். இவரது முழுப்பெயர் முகம்மது இப்ன் அப்துல் வகாப். இவரது வாப்பாவின் பெயர் ஷெய்க் இப்ன் அப்துல் வகாப்"

இங்குக் குழப்பப் பட்டவர், முஹம்மது s/o அப்துல்வஹ்ஹாப் s/o ஸுலைமான் என்பவராவார். உறுதிப் படுத்திக் கொள்வதற்கும் கூடுதல் தகவல்களுக்குமான சுட்டி : http://www.ahya.org/amm/modules.php?name=Sections&op=viewarticle&artid=180 . மேற்படி முஹம்மது என்பார் தனெக்கென ஒரு கொள்கையைப் புதிதாக ஏற்படுத்திக் கொண்டு அதை மக்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனப் போராடவில்லை. இறைமறையும் நபிவழிமுறையுமே தமது உயிர் மூச்சு என்றார். கடிதம் எழுதியவரின் அதிமுக்கியக் கவலைக்கும் ஆத்திரத்திற்கும் காரணம் என்னவென்றால், வஹ்ஹாபிகளின் தலைவர் முஹம்மது நபியின் மறைவுக்குப் பிறகுக் கொஞ்சங் கொஞ்சமாக அரபு குலாம்களால் புதிதாக ஏற்படுத்தப் பட்ட சமாதி வழிபாட்டையும் வழிபாடு நடந்த சமாதிகளையும் முஹம்மது bin அப்துல்வஹ்ஹாப் தரைமட்டமாக்கினார் என்பதே. அந்தத் தரைமட்டச் சேவையையும் தமது தலைவரின் கட்டளைப்படியே செய்தார் என்பதுதான் சான்றுகளின் அடிப்படையில் அமைந்த வரலாறு. இதோ ஒரு ஹதீஸ் - ஒன்பது சான்றுகளுடன்: அபுல்ஹய்யாஜ் அல்அஸதீ என்ற நபித்தோழர் கூறுகிறார்: "அல்லாஹ்வின் தூதர் என்னை நியமித்த அதே பணிக்காக உன்னை நான் நியமிக்கிறேன். உயர்(த்திக் கட்டிக் கண்ணியப் படு)த்தப் பட்ட எந்தச் சமாதியையும் தரைமட்டமாக்காமல் விட்டு வைக்காதீர் ..." என்பது அலீ அவர்களால் எனக்கு இடப் பட்டக் கட்டளையாகும். [முஸ்லிம் 1609, திர்மிதீ 970, நஸயீ 2004, அபூதாவூத் 2801, அஹ்மது 622; 703; 1012; 1111; 1175]. தரைமட்டச் சேவைக்கான/தேவைக்கான இன்னும் கூடுதல் சான்றுகள் திண்ணை இதழின் 24.02.200 பதிப்பில் எனது கடித இறுதியில் கிடைக்கும். இனி வஹ்ஹாபிஸத்துக்கு வருவோம். நேபாளத்தின் சிறையிலுள்ள மாவோயிஸ்டுகளை அவ்வரசு விடுதலை செய்யப் போவதாக அண்மைச் செய்திகள் கூறுகின்றன. மாவோயிஸத்தைப் பின்பற்றுபவர்களே மாவோயிஸ்டுகளாவர். சீனப் புரட்சித் தலைவர் மாவோ ஸெடுங்கின் கொள்கை-கோட்பாடுகள்தாம் அவருடைய முதற் பெயரால் மாவோயிஸம் என்று வழங்கப் படுகிறது. முஹம்மது [bin அப்துல்வஹ்ஹாப்] என்பவருடைய தனித்த கொள்கை-கோட்பாடு என்று ஒன்றிருந்து, அதை இஸத்தோடு இணைத்து வழங்குவதென்றாலும் 'முஹம்மதிஸம்' என்றல்லவா சொல்ல வேண்டும்? மாறாக, ஏன் வஹ்ஹாபிஸம் என்று சொல்லுகின்றனர்/எழுதுகின்றனர்? இந்த இடத்தில்தான் மேற்கத்திய பூர்ஷ்வாக்களின் நரித்தனம் ஒளிந்திருக்கிறது. முஹம்மதிஸம் என்று சொல்லி விட்டால் நபி முஹம்மதின் கொள்கை என்று உலக மக்கள் புரிந்து கொண்டு விடுவர் என்ற அச்சமும் முஸ்லிம்களைக் கூறு போட வேண்டிய தந்திரமும் சேர்ந்து உருவானதே 'வஹ்ஹாபிஸம்' என்ற சொல். கார்ல் மார்க்ஸின் பெயரால் மார்க்ஸிஸம், விளாடிமீர் லெனினின் பெயரால் லெனினிஸம், ஜோஸஃப் ஸ்டாலினின் பெயரால் ஸ்டாலினிஸம் ஆகியவற்றைப் போல் இரண்டாவது பெயரில் ஓர் இஸத்தை இணைத்து வழங்குவதென்றாலும் நியாயப்படி, 'அப்துல்வஹ்ஹாபிஸம்' என்றுதான் வழங்க வேண்டும்.

ஏனெனில், அப்துல்வஹ்ஹாப் என்பது இரண்டு பெயர்கள் அல்ல; ஒரு பெயர்தான் [அப்த்+அல்லாஹ்= அல்லாஹ்வின் அடிமை என்பதுபோல், அப்த்+அல்வஹ்ஹாப்=பெருங் கொடையாளனின் அடிமை]. பலவேளைகளில் தந்திரங்கள் வெற்றி பெற்றாலும் சிலவேளைகளில் உண்மைகளின் முன் தந்திரங்கள் தோற்றுவிடும். மொழியறிவின்றி, தந்திர நோக்கோடு தவறாகக் கொடுக்கப்பட்டிருப்பினும், இறைவனின் பண்புப் பெயர்களுள் ஒன்றான அல்வஹ்ஹாப் [பெருங்கொடையாளன்] என்ற பெயராலேயே அவனுடைய மார்க்கமான இஸ்லாமை 'வஹ்ஹாபிஸம்' என்று வழங்குவதிலும் அந்தப் பெருங்கொடையாளனைச் சார்ந்து நிற்பவரை 'வஹ்ஹாபி' என்று அழைப்பதிலும் நபிகளாரை 'வஹ்ஹாபிகளின் தலைவர்' என்று குறிப்பிடுவதிலும் குழப்பமேதுமில்லை என்பதை அறிவுடையோர் புரிந்து கொள்வர் - குலாமுக்கு வேண்டுமானால் குழப்பமாகவே இருந்து விட்டுப் போகட்டும்.

கேள்வி: 'வஹ்ஹாபி' என்று அழைக்கப் படுவோர் யார்? பதில் : இஸ்லாமிய மார்க்கத்தை அதன் பழைமையான தூய வடிவில் கடைப் பிடிப்போர்.
மேற்காணும் வினாவும் விடையும் எந்த வஹ்ஹாபியும் புதிதாகக் கண்டு பிடித்துச் சொன்னதன்று. மாறாக, +2 வகுப்பிற்கான 'வரலாறு, நவீன உலகம்' என்ற பாடத்திற்கான தினமணி நாளிதழின் மாதிரி வினா-விடைப் பகுதியில் வெளிவந்ததாகும். நாள்: 19 மார்ச் 1984. 'பழைமையான தூய வடிவு' என்றாலே முந்நூறு ஆண்டுகளுக்கே முன்னர் பிறந்த, புதியவரான முஹம்மது அப்துல்வஹ்ஹாப் ஸுலைமான் என்ற 'முழுப் பெயரை' உடையவருக்குப் பழையதில் எவ்விதப் புதிய ஆளுமையும் இல்லை என்பது தெளிவு. [bin நவீனத்துவம் முடிவுக்கு வந்து அதிநவீனத்துவம் ஆரம்பித்து விட்டதால் இப்போதெல்லாம் யாரும் bin போட்டு எழுதுவதில்லை]. என்னுடைய ஆக்கங்களுக்கான 'வஹ்ஹாபிஸ'ச் சான்றுகள் அனைத்தும் வஹ்ஹாபுடைய வேதமான அல்குர் ஆனிலிருந்தும் வஹ்ஹாபிகளின் தலைவர் முஹம்மது நபியவர்களின் வழிமுறைகளிலிருந்துமே எடுத்தாளப் படுகின்றனவேயன்றி, முஹம்மது bin அப்துல்வஹ்ஹாப் என்பவரின் 'கிதாபுத் தவ்ஹீத்' என்ற நூலிலிருந்தன்று. 2. அன்னார் எழுதியவற்றுள், நஸீஹத்துல் என்றும் முஸ்லிமீன் என்றும் இரு நூல்களைக் குறிப்பிடுகிறார் குலாம். 'நஸீஹத்துல் முஸ்லிமீன்' [முஸ்லிம்களுக்கு அறிவுரை] என்பது ஒரேயொரு தலைப்பாகும்; இரண்டன்று. தெரியாதவற்றைத் தெரிந்தவர்கள் யாரிடமாவது கேட்டெழுதுவது குற்றமன்று; தெரியாதவற்றைத் தெரிந்ததுபோல் பாசாங்கு செய்து கொண்டு எழுதுவதே குற்றம்.
3. "இமாம் வகாப் அறுநூறுபேர் கொண்ட படையுடன் நேரடியாகப் பங்கேற்று உமர் பின் அல்கதாபின் சகோதரர் அஸ்வரின் சமாதி மக்பராவை இடித்து தள்ளி நிர்மூலமாக்கினார்"

இதுவும் 'அரபு வகைப் பட்ட' வரலாற்று ஆசிரியராகத் தன்னைத் திண்ணைக்கு அறிமுகப் படுத்த முயன்றுள்ள குலாம் எழுதியதுதான். அண்ணல் உமருக்கு அஸ்வர் என்றொரு சகோதரர் இருந்தார் என்பதை மட்டும் சான்றுகளோடு குலாம் நிரூபித்து விட்டால், அவரைப் பேராசிரியர் என்றே அழைக்க நான் தயார். சரி, இல்லையெனில்?

"அப்பட்டமான முட்டாள்தனமும், சமகால வரலாற்று மோசடியாகும்"

இவைதாம் குலாமின் திண்ணைக் கடிதத்தின் இறுதிச் சொற்கள்.

அவை 'யாருக்குச் சொந்தம்?' என்று முடிவுக்கு வர வேண்டியது வாசகர்களின் பொறுப்பு.

மயிலாஞ்சி எல்லையோடு நிறுத்திக் கொண்டிருந்தால் 'சவை நடுவே நீட்டோலை வாசியா' வரிசையில் வந்து நிற்க வேண்டிய நிலை குலாமுக்கு ஏற்பட்டிருக்காது!

ஃஃஃ

வெள்ளி, மே 12, 2006

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - அறிமுகம்

'இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள்' என்ற பெயரில், இஸ்லாமியக் கல்வி வெளியீட்டு நிறுவனத்தாரால் 1999இல் ஓர் ஆய்வு நூல் வெளியிடப் பட்டது. மதுரை வக்ஃபு போர்டு கல்லூரியில் பணியாற்றியத் தமிழ்த்துறைப் பேராசிரியரும் எனது அன்புக்குரியவருமான சகோதரர் 'ஹஸ்ஸான்' என்ற ஜமாலுத்தீன் அவர்களின் தெள்ளு தமிழ் நடையில் வெளிவந்த இவ்வாய்வு நூலை, வலைப்பூவில் பதிக்க வேண்டும் என்பது எனது நீண்டகால ஆசை! என் ஆசைக்கு இரு காரணங்கள் உள. 1. அன்னாரின் பேச்சிலும் எழுத்திலும் எனக்கு எப்போதும் ஓர் ஈர்ப்பு உண்டு. 2. அன்னார் மறைந்து விட்டார்; அவர் எழுத்து மறையக் கூடாது. எனவே, அவருடைய மகனாரின் அனுமதி பெற்று என்னாசையை நிறைவேற்றும் முகமாக, இவ்வாரம் முதல் இங்குப் பதிக்கத் தொடங்குகிறேன். இந்நூலுக்கு 'இஸ்லாத்துக்கு எதிரான இலக்கியங்கள்' என்ற தலைப்பே மிகப் பொருத்தமானது என்பது என் கருத்து.  

பேரா. ஹஸ்ஸானோடு பணியாற்றிய முனைவர் 'AMSA' கபீர், M.A. PhD அவர்கள், இந்நூலுக்கு வழங்கிய அணிந்துரையின் சுருக்கம்: 
லக்கிய வளமையும் இலக்கணச் செழுமையும் எண்ணவியலாத் தொன்மையுங் கொண்ட நம் தாய்மொழித் தமிழை, சமயங்களே வளர்த்தன எனலாம். அந்தளவுக்குத் தமிழ் இலக்கியத்தில் சமயங்களின் பங்களிப்பு அமைந்திருக்கிறது. ஐம்பெருங் காப்பியங்களாயினும் நீதி நூல்களாயினும் சிற்றிலக்கியங்களாயினும் அவை சமயம் சார்ந்தே அல்லது சமயச் சார்பார்ளாராலே இயற்றப் பட்டுள்ளன. சமணரும் பெளத்தரும் சைவரும் வைணரும் வழங்கிய அளவுக்கு முஸ்லிம்களும் எண்ணிலா இலக்கியங்களைப் படைத்துத் தமிழுக்கு அணி சேர்த்தனர்.  

பதினான்காம் நூற்றாண்டின் 'பல்சந்த மாலை' முதல் இன்று வரை இஸ்லாமியர் வழங்கிய - வழங்குகின்றத் தமிழ் இலக்கியங்கள் ஏராளம்; ஏராளம். இவற்றைப் பிறருக்கு அறிமுகப் படுத்தி, தமிழுக்கு எங்கள் பங்களிப்பும் எவருக்கும் குறைந்ததன்று என்று காட்ட, "இஸ்லாம் எங்கள் வழி; இன்பத் தமிழ் எங்கள் மொழி" என்ற முழக்கத்துடன் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடுகள் பல நடத்தப் பட்டன. நம் தமிழரும் இவற்றோடு அறிமுகம் பெற்றனர்; இவைதாம் இஸ்லாமிய வாழ்வியல் சட்டங்களின் தொகுப்பு என எண்ணத் துவங்கினர்; முஸ்லிம்களில் பலரும் இப்பாடல்களையே இஸ்லாத்தின் ஆதாரமாகக் காட்டத் தலைப் பட்டனர். 

தமிழகத்தில் எண்பதுகளில் ஏற்பட்ட 'ஏகத்துவ மறுபுரட்சி'க்குப் பின், இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களை இஸ்லாத்தின் அடிப்படையான குர்ஆன்-ஹதீஸ் ஒளியில் நாம் ஆய்வு செய்தபோது, 'ஐயகோ, கைசேதமே!' என்றெல்லாம் துயருறும் அளவுக்கு இஸ்லாத்தின் அடிப்படைக்கே முரணான - அடிப்படையையே தகர்க்கின்ற அளவுக்கு அபத்தங்களும் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் செய்திகளும் பொய்களும் அவற்றில் மலிந்திருப்பதைக் கண்டோம்!. எவற்றை "ஆஹா, பாரீர் எம் இலக்கியங்களை" என்று பெருமையுடன் காட்டினோமோ அவற்றையே, "ஐயோ, தொடாதீர்! இஸ்லாத்தையே தகர்கின்றன இவை" என அடையாளம் காட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டோம்.  

அடையாளத்துக்காகச் சில சான்றுகளைக் காட்டுவது இங்குப் பொருத்தமாக அமையும் எனக் கருதுகிறேன். பெருமானாரின் மனைவியராம் முஸ்லிம்களின் அன்னையரைப் பற்றியும் பெருமானாரின் அன்பு மகளார் ஃபாத்திமா அவர்களைப் பற்றியும் உமருப் புலவர் வரம்பு கடந்து வருணித்துள்ளார். அலீ-ஃபாத்திமா திருமணத்தின்போது, அலீ அவர்கள் திருமண உலா வரும் வேளையில் எழுபருவப் பெண்களும் அலீ அவர்களின் அழகைக் கண்டு காதல் கொண்டு நின்றனர் என்பதாக உமருப் புலவர் பாடிச் செல்கிறார்:
" குவிபெருந்தானை நாப்பண் கூண்டவை அலீயென்றோதும் பவனியின் தருவை நோக்கிப் பல கொடி படர்ந்ததன்றே"
(ஃபாத்திமா திருமணப் படலம், பாடல்: 135) நபித்தோழியராம் ஸஹாபிப் பெண்களை இவ்வாறு தரக்குறைவாகப் புலவர் வருணித்துச் செல்வதை இந்நூலாசிரியர் விளக்கமாக எடுத்தெழுதியுள்ளார். இந்துமதச் சித்தாந்தத்தின் 'ஜெராக்ஸ் காப்பி'யாகவே குணங்குடி மஸ்தானின் பாடல்கள் காணக் கிடைக்கின்றன என்பதை இந்நூல் தக்க ஆதாரங்களுடன் எடுத்துரைத்துள்ளது. 

'அஞ்ஞானக் குணங்குடி', 'சன்னியாசியின் சல்லாபம்', 'இஸ்லாமியத் தாயுமானவர்', 'ஜெதிபு யோகம்' ஆகிய தலைப்புகளின்கீழ் ஆசிரியர் இதனை நன்கு ஆராய்ந்துள்ளார்.
"ஆதியை அறிய வேண்டில் அழகிய நிலைமை நான்காம் ஓதிய ஷரீஅத்தென்றும் உவந்திடும் தரீகதென்றும் நீதி சேர் ஹகீகத் தென்றும் நெறியுள்ள மஃரிபத்தால் ஆதியைக் காணலாம் என்று அகுமதர் அருளிச் செய்தார்" (ஞானமணி மாலை, பாடல் : 11)
போன்ற பீரப்பாவின் பாடல்கள் மெய்யான ஹதீஸுக்கு வெளிப்படையாகவே முரண்பட்டு அமைந்துள்ளன. 'அல்லாஹ்தான் முஹம்மது நபியாக அவதரித்தான்' என்ற கேடுகெட்ட அவதாரக் கொள்கையைப் பீரப்பா இஸ்லாத்தின் பெயரால் இட்டுக் கட்டிப் பாடியுள்ளார்.
"இப்புவியில் ஊனுருவாய் நீ அகுமது ஆனவனே"
(ஞானப் புகழ்ச்சி, பாடல் : 134)
"நீயே உனக்கு சுஜூது செய்தாய் பின் நினைந்துருவாய் நீயே புவிக்குள் ரசூலாக வந்தவன்"
(ஞானப் புகழ்ச்சி, பாடல் : 118) இம்மாதிரிப் பாடல்களை மாபெரும் ஸூஃபிஸ இலக்கியங்களாக இஸ்லாமியர் போற்றிப் பயிலுகின்றனர். இஸ்லாத்தின் அடிப்படைக்கே வேட்டு வைக்கின்ற இந்த இலக்கிய முரண்பாடுகள் பற்றி எவரும் வாய் திறப்பதில்லை. மாறாக, இவற்றையே இஸ்லாமியக் கொள்கைகள் எனப் பெரும்பாலான முஸ்லிம்களும் மற்றோரும் நம்பியிருந்தனர்; நம்பியிருக்கின்றனர். அந்தத் தவறான நம்பிக்கையை இந்நூல் தகர்த்து விடும் என்பதில் ஐயமில்லை. 
 
- தொடரும், இன்ஷா அல்லாஹ்.

வெள்ளி, மே 05, 2006

தொடரும் வெளிச்சம் - பளீரென்று

"முஸ்லிம்களின் இறைவணக்கத்தில் குர்ஆனுடைய வசனங்கள் ஓதப் படுவதன் காரணம், அரபு வகைப் பட்டுப் போவதோ அல்லாஹ்வுக்கு அரபியைத் தவிர வேறு மொழி தெரியாது என்பதோ உலகில் சிறந்த மொழி அரபிதான் என்பதோவல்ல" என்ற எனது விளக்கத்துக்குப் பதிலாக,
"பிராமணர்கள் கருவறை மொழியாக சமஸ்கிருதத்தை புனிதப்படுத்தி வைத்திருப்பதுபோல் வகாபிகள் அரபு மொழியையும் புனிதப்படுத்தி சொர்க்கத்தின் மொழி அரபு என்று புனைவுபடுத்தியும் வைத்துள்ளார்கள்"
என்று இம்முறை தனது தலைச்சோற்றை இங்குப் புதுக் கூட்டுக் கறி சகிதம்
பரிமாற முனைந்துள்ளார் சூபி. வஹ்ஹாபிஸத்தின் (அல்லது இஸ்லாத்தின்) பார்வையில் மொழி எதுவாக இருப்பினும் அது, தகவல் பரிமாறிக் கொள்ளக் கூடிய ஒரு கருவி; அவ்வளவுதான் - அவ்வளவேதான். அதனாற்றான் ரோமாபுரிக் காரரான ஸுஹைப் அவர்களும் பாரசீக ஸல்மான் அவர்களும் ஆப்பிரிக்க பிலால் அவர்களும் வஹ்ஹாபிகளின் தலைவருக்கு உற்றத் தோழர்களாகத் திகழ முடிந்தது. 

வஹ்ஹாபுடைய வார்த்தைகளைப் படித்தாலே சூபிகளுக்குத் தானாகவே பொங்கும் - அலுப்பும் சலிப்பும். புழுத்துப்போன புத்திகட்கு எட்டுகின்றவரை இறைவசனம் குறித்த வஹ்ஹாபிகளின் அலுத்துப்போன விளக்கங்கள் திரும்பத் திரும்பச் சொல்லப்படத்தானே வேண்டும்? முக்கால்வாசி அலுத்து விட்டார் சூபி; முழுமையாக்க எனக்கு மனமில்லை என்றாலும் 'வஹ்ஹாபை வணங்குவதற்கு அரபுமொழி எதற்கு?' என்ற எனது மிகச் சிறு முன்விளக்கத்தைத் திண்ணை வாசகர்கள் ஒப்பிட்டு நோக்குவதற்காக: 

1- "... தொழுகையில் குர்ஆனிலிருந்து உங்களுக்கு இயன்றதை ஓதிக் கொள்ளுங்கள் ..." [073:020] என்பது அல்லாஹ்வின் கட்டளை.

2- அல்லாஹ்வுடைய குர்ஆன் வசனங்கள் அரபு மொழியில் அருளப் பட்டவை - காரணம்,

3- குர்ஆனை உலக மாந்தருக்கு அறிமுகப் படுத்திய நபிகள் நாயகத்துக்கு அரபு மொழி மட்டும்தான் தெரியும்.

4- ஒருவருக்குத் தெரிந்த மொழியில் வேதம் அருளப்பட்டால்தான் மற்றவர்களுக்கு அதை எடுத்துச் சொல்ல முடியும்.

5- உலகளாவிய ஓர் இறைவணக்கம் என்பது ஒரு மொழியில்தான் இருக்க முடியும்.

குர்ஆன் தமிழில் மொழி பெயர்க்கப் பட்டிருக்கிறதாம். அதனால் தமிழ்த் தொழுகைதான் வேண்டுமாம். தமிழில் மட்டுமின்றி உலகமொழிகள் பெரும்பாலானவற்றில் குர்ஆன் மொழி பெயர்க்கப் பட்டு விட்டது என்பதையும் இங்குச் சொல்லி வைக்க வேண்டியதாகி விட்டது. மொழித் தழுவல்கள் நூறைத் தாண்டினாலும் மூலம் ஒன்றுதான் - அன்றிலிருந்து இன்றுவரை. 

வஹ்ஹாபுடைய கட்டளையைப் புறந்தள்ளி விட்டு, தன் தலைச் சோற்றுச் சவால் பந்தியில் 'வஹ்ஹாபி எப்படி வந்து உட்காருவான்?' என்பதைப் பரிமாறும்போதுகூட எண்ணிப் பார்க்கவில்லை சூபி. வஹ்ஹாபிகளின் தலைவருடைய திருமணத்தைப் பற்றி சூபி குறிப்பிட்ட பின்னரும், 'சோறு இன்னும் குழைந்து விடுமே' என்பதற்காக அவருக்கு நான் பதில் சொல்லாவிட்டால் - அது நன்றாகவாயிருக்கும்? "... இச்சலுகை நாம் உமக்களித்திருக்கும் சிறப்பாகும் ..." அல் குர் ஆன் 033:050. 

கொசுறு - அன்னை ஹதீஜா அவர்களைத் திருமணம் செய்யும்போது அண்ணலார் வெறும் அப்துல்லாஹ்வின் மகன்தாம் - அல்லாஹ்வின் தூதரல்லர்; வஹ்ஹாபிகளின் தலைவருமல்லர். "வரலாற்று ரீதியான உண்மை" என்று பரிமாறலில் கொஞ்சம் சிந்திக் கிடந்தது, எந்த வரலாறு என்ற முகவரி இல்லாது. அண்ணல் இபுராஹீம் நபி அரபியரல்லர் என்று நான் எழுதியதை நிரூபிப்பதற்கு அன்னாரின் பர்த் ஸர்டிஃபிகேட்டை இங்கு அட்டாச் செய்ய வேண்டியதில்ல; அன்னாரது தந்தையிலிருந்து தொடங்கி அவரது பேரப் பிள்ளைகளின் அரபு மொழிக்கு அப்பாற் பட்டப் பெயர்களைத் தெரிந்திருந்தாலே போதுமானது. அதற்குக் குர்ஆனைப் பார்த்துப் படிக்கவாவது தெரிந்திருக்கக் கூடிய 'அடிப்படை அறிவு' வேண்டும்; அவ்வளவே! 

மிர்சா குலாம், எலிஜா முகமது, ரஷாத்கலீபா வழியில் யார் வேண்டுமானாலும் தன்னை நபி என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் கழிப்பிடத்திற்கு உள்ளே சென்றால் வேலையை முடித்துக் கொண்டுச் சீக்கிரம் திரும்பிவிட வேண்டும். காரணம், மிர்சா நப்பி செத்துப் போனது கக்கூஸில்! 

முன்னொரு காலத்தில் சூரக்கோட்டை மைனருக்கு(க் கல்யாணம் ஆகாமலே)ச் சொந்தமாயிருந்து, பின்னர் சுந்தருக்குக் கல்யாணமாகிச் சொந்தப் பட்ட, 'அதி நவீன முஸ்லிம்', 'கற்பு புகழ்' குஷ்பு அம்மணிக்கோ கல்யாணமே ஆகாமல் ஷிப்லிக்குத் தாயான 'உயரதி நவீன முஸ்லிம்' அஸ்ரா நுமானிக்கோ 'தன்னினமே தனக்குதவி' என்று போதுமென்ற பொன்மனம் படைத்த 'முன்நவீன லெஸ்பியன் முஸ்லிம்' இர்ஷாத் மஞ்சானிக்கோ இன்னபிற முன்-பின் நவீன முஸ்லிம்களுக்கோ தன் ஆதரவுக் கரத்தை சூபி நீட்டிக் கொள்ளட்டும்; நமக்குக் கவலையில்லை - அன்னை மர்யம் அவர்களுக்கு வேண்டாம் என்பதே நமது வேண்டுகோள்! தலைப்பின் கருவைக் காணோமே எனத் திண்ணை வாசகர்கள் தேடி அலுத்துவிட்டிருக்கலாம்! மூன்றாவது பாயிண்டில்தான் சூபியின் வெளிச்சம் - அதுவும் பளீரென அடிக்கிறது:
"நபிமுகமது மூலமாக கி .பி.ஏழாம் நூற்றாண்டில் இஸ்லாம் அறிமுகமாகிறது"
என்று. 

"எங்கள் இறைவா! எங்களின் வழித்தோன்றல்களுக்கு உன்னுடைய வேத வசனங்களை ஓதிக் காட்டி, உன்னுடைய வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுப்பதற்காக அவர்களிலிருந்தே ஒரு தூதரை அவர்களுக்கு அனுப்பி வைப்பாயாக ..." 002:129 என்று அண்ணல் இபுராஹீம் அவர்களும் அண்ணல் இஸ்மாயீல் அவர்களும் அல்லாஹ்விடம் வேண்டி நின்றனர். அண்ணல் இஸ்மாயீல் அவர்களின் வழித்தோன்றியவர்தாம் வஹ்ஹாபிகளின் தலைவர் முஹம்மது நபி. அண்ணல் இபுராஹீம் அவர்களையும் அண்ணல் இஸ்மாயீல் அவர்களையும் இஸ்லாத்துக்கு எப்போது சூபி 'உள் வாங்க'ப் போகிறாரோ தெரியாது.  

"இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்காக அல்லாஹ்வினால் அனுப்பப் பட்ட தூதன். எனக்கு (அருளப் படுவதற்கு) முன்னர் அருளப் பட்ட தவ்ராத்தையும் நான் உண்மைப் படுத்துகிறேன். மேலும், எனக்குப் பின்னர் 'அஹ்மது' எனும் பெயருடைய ஒரு தூதர் வருவதைப் பற்றிய தகவலையும் உங்களுக்கு நற்செய்தியாகக் கூறுகிறேன் ..." 061:005 என்று அண்ணல் ஈஸா என்ற அல்லாஹ்வின் தூதர், அல்லாஹ்வின் இறுதித் தூதரைப் பற்றி நற்செய்தி கூறினார். 
 
"நம்பிக்கையாளர்களே! உங்களின் மார்க்கமாக நூஹுக்கு அறிவுறுத்திய (ஓரிறைக் கொள்கை) அறவுரைகளையே (அடிப்படையாக அல்லாஹ்) ஆக்கியிருக்கின்றான். (முஹம்மதே!) நாம் உமக்கு வஹீயின் மூலம் அறிவிப்பதும் இபுராஹீம், மூஸா, ஈஸா ஆகியோருக்கு அறிவுறுத்தியதும் "ஓரிறைக் கொள்கையில் உறுதி குலையாமல் ஒருமித்து நில்லுங்கள்; பிரிந்து விடாதீர்கள் ...என்பதே" 042:013. பட்டியலில் அண்ணல் நூஹ் அவர்கள் முதல் அண்ணல் ஈஸா அவர்கள் ஈறாகக் காத்துக் கிடக்கின்றனர். 

சூபி மனது வைத்தால் 'உள் வாங்க'லாம்! 

இவ்வார இறுதியாக ஒரு வேண்டுகோள்: எல்லாவற்றிற்கும் ஓர் எல்லை வைத்துக் கொள்வது நல்லது - வெளிச்சம் போடுவது உட்பட. அப்பப்பா ... சென்ற வாரம் கண்கள் மிகவும் கூசி விட்டன!
ஃஃஃ

வெள்ளி, ஏப்ரல் 21, 2006

எதிர்மறைகள்

சென்ற வாரத் திண்ணையில் ஒரு வித்தையைக் காண நேர்ந்தது. 'தவ்ஹீது பிராமணீயம்' என்ற மொட்டைத் தலையில் சடை பிண்ணி அதை முழங்காலுக்கு முடிச்சுப் போட முயன்றதை வெறும் வித்தை என்று கூறுவதைவிட 'கண்கட்டு வித்தை' என்றே கூறலாம். 

கட்டுகளை அவிழ்ப்பதற்கு முன்னர் இங்கு ஆளப்படும் சில கலைச் சொற்களைச் சொல்லி விடுவது நல்லது:
வஹ்ஹாப்=இறைவன்/அல்லாஹ், 
வஹ்ஹாபிஸம்=வஹ்ஹாபினால் வழங்கப் பட்ட வாழ்க்கைநெறி/இஸ்லாம், 
வஹ்ஹாபி=வஹ்ஹாபிஸத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டவர் /வஹ்ஹாபைச் சார்ந்தவர்/முஸ்லிம்.

வித்தையில் அவிழ்த்து விடப் பட்ட சொற்களை இங்கு எடுத்தாள வேண்டியிருப்பதால், பிராமணர்களின் சுட்டு விரல் என்னை நோக்கி நீளாது என்ற நம்பிக்கையோடு, மறுக்க முடியாத ஒப்பீடுகள் - சான்றுகளுடன்:

ஒவ்வொன்றாகப் பார்ப்போமெனினும் பிராமணீயம் என்று சொன்னவுடனே முதலாவதாக நினைவுக்கு வருவது புரோகிதம்தான்.  

1. புரோகிதம் இஸ்லாமிய மார்க்க மேதைகளுள் நால்வரான இமாம்கள் மாலிக், அபூ ஹனீஃபா, ஷாபியீ மற்றும் இபுனு ஹன்பல் ஆகியோரின் பெயரை மட்டும் பயன் படுத்திக் கொண்டு, இஸ்லாத்துக்கு எதிரான (இம்ரானா) தீர்ப்புகளைக் கூறி மக்களை மடையர்களாக்கும் முல்லாப் புரோகிதர்கள், சமாதிகளைக் காட்டிச் சுரண்டிப் பிழைக்கும் 'சாபு'ப் புரோகிதர்கள், ஒரேயொரு நேர்வழியான இஸ்லாத்தைப் பலவாறு துண்டிக்கத் துடிக்கும் எழுத்துப் புரோகிதர்கள் ஆகிய அத்தனைப் புரோகிதர்களுக்கும் எதிராக உரத்துக் குரல் கொடுப்பது வஹ்ஹாபிஸம் மட்டுமே.

முந்நூறுக்கும் மேற்பட்ட சிலைகளை இறையில்லமான கஃபாவைச் சுற்றிலும் வைத்து நடந்து கொண்டிருந்த புரோகிதத்துக்குச் சாவு மணி அடித்ததுதான் வஹ்ஹாபிகளின் தலைவர் முஹம்மது நபி அவர்கள் செய்த அறப்பணிகளுள் தலையாயது. 

அந்தப் பழைய புரோகிதர்கள் தங்கள் தொழிலுக்குச் சொன்னக் காரணம்: "...அல்லாஹ்விடம் எங்களை அண்மித்து வைப்பர் என்பதற்காகவே இவர்களை நாங்கள் வழிபடுகிறோம் ..." [039:003]. மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையே பாலமாக இருப்பவர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளும் தற்காலப் புரோகிதர்கள் தமிழகத்தில் அதிகமாகப் புழங்குவது 'பண்பாட்டு மரபியல்' என்று முன்,பின்,அதி,நவீனத்துவ அறிவுசீவிகளால் தூக்கி நிறுத்த முயலும் சமாதி வழிபாடு நடக்கும் தர்ஹாக்களில்தான்.

"எனக்கும் என் அடியானுக்கும் இடையில் யாரும் புரோகிதம் செய்யத் தேவையில்லை" என்று வஹ்ஹாப் தன் மறையில் அறிவுறுத்துகிறான் [002:186].  

2. வர்க்க பேதம் முழு மனுக்குலமும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் [004:001] என்றும் வஹ்ஹாபிஸத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட எல்லா முஸ்லிம்களும் சகோதரர்களே [049:010] என்றும் வஹ்ஹாப் வரையறுத்துக் கூறி விட்டான். 

அடுத்து, "மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; (உங்களது தந்தையும் ஒருவரே!) அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஓர் அரபிக்கும் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஓர் அரபி அல்லாதவருக்கும் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் கருப்பரை விடவோ, எந்த ஒரு கருப்பருக்கும் வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்" என்று வஹ்ஹாபிகளின் தலைவரும் வர்க்க பேதத்தைத் தம் காலடியில் போட்டு மூடி விட்டார். 

திரு. கொடிக்கால் செல்லப்பா (இன்று கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ்) என்ற மூதறிஞர் தனது சொந்த வாழ்க்கைச் சுவடுகளின் அடிப்படையில் கன்னியாகுமரி - விவேகானந்தா கேந்திரத்தில் 1986 அக்டோபர் 2இல் நடைபெற்ற 'தீண்டாமை ஒழிப்பில் காந்திஜீயின் பங்கு' என்ற கருத்தரங்கில் ஆற்றிய உரையின் சிறு பகுதி:
"இஸ்லாமியக் குடும்பத்தில் பங்கு பெறும் எல்லா மனிதர்களும் எந்த இனத்தை, எந்தக் குலத்தை, எந்த நாட்டைச் சார்ந்தவரானாலும் முழுக்க முழுக்க சமமான உரிமைகளுடன் பங்கு பெற முடியும். அவ்வாறு பங்கு பெற்றுச் சிறப்புடன் வாழ்ந்து வருகின்றனர்.அங்கே இன பேதமில்லை; நிற பேதமில்லை; புதிதாக வந்தவர்கள் என்ற அடைமொழி எதுவும் இல்லை. இஸ்லாத்தில் இணைந்து விட்டார்கள் என்றால் அங்கே இரண்டறக் கலந்துவிடுகின்ற நிலையே ஏற்பட்டு விடுகின்றது. கடலிலே நதிகள் கலந்துவிட்ட பின்பு, அங்கே நதிகள் என்று பிரித்து பார்க்க முடிவதில்லை. நதி கடலாகி விடுகிறது. இதுவே, இஸ்லாத்தில் இணைகின்றவர்களின் நிலை."  

3. வேதம் ஓதுதல் "ஓதுவீர்!" என்ற முதல் சொல்லோடு அருளப் பட்ட வேதம் [096:001] உலகிலேயே வஹ்ஹாபிகளின் வேதம் மட்டுமே. "முழு மனுக்குலமும் ஓதி உணர வேண்டியது" என்று பல இடங்களில் [002:185], [047:24], [054:17], [081:027] தன்னுடைய வேதத்தை வஹ்ஹாப் பொதுவில் வைக்கிறான்.  

4. தன்னை உயர்த்திப் பிறரைத் தாழ்த்துதல் தன்னைத் தானே உயர்த்திக் கொண்டு தம்பட்டம் அடிப்பதற்கு வஹ்ஹாபிகளுக்குத் தடையிருப்பது [053:32] போலவே பிறரைப் பற்றி இல்லாத குறை கூறித் திரிவதைப் பற்றியும் [104:001] தடையிருக்கிறது.  

5. மதிக்கப் படுதல் வட்டிச் சுரண்டல், வரதட்சணைக் கொடுமை, சமாதிகளைக் காட்டி நடக்கும் வழிப்பறிக் கொள்ளை, இஸ்லாத்தில் இடையில் புகுத்தப் பட்டப் பொல்லாப் புதுமைகள், மன்னிப்பில்லாப் பாவமான இறைவனுக்கு இணை கற்பித்தல் ஆகிய வன் கொடுமைகளை எதிர்த்துக் குரல் கொடுத்ததற்காகத் தொழ முடியாமல் தடுக்கப் பட்டவர்கள், அடி-உதைகளைப் பரிசாகப் பெற்றவர்கள், ஊர் விலக்கம் செய்யப் பட்டவர்கள், பொய் வழக்குகளால் சிறை வைக்கப் பட்டவர்கள் இன்னும் எத்தனையோ இன்னல்களை ஏற்றுக் கொண்டவர்கள் வஹ்ஹாபிகள். 
இது போன்ற எவ்வளவோ எதிர்மறைகள் பிராமணீயத்துக்கும் வஹ்ஹாபிஸத்துக்கும் உள்ளன என்பதுதான் யதார்த்தம். இவற்றையெல்லாம் அறியாமல், இரண்டும் ஒன்றுதான் என்று 'கண்கட்டு வித்தை' காட்டுகிற கட்டுரை இடம் பெற்ற திண்ணையின் அதே இதழிலேயே வித்தைக் காரரின் 'தேவதைகளின் சொந்தக் குழந்தை' விமர்சனக் கூட்டத்தில் நடந்தவை தொகுக்கப் பட்டு வெளியாகி இருந்தன. 

அதில் கட்டுரையாளரின் எழுத்தைக் குறித்து யூசுப் என்பார் கூறுகிறார் "எதார்த்தம் தவறுதல் என்பது மனநிலை பிறழ்வேயாகும்".
ஃஃஃ
எடுத்தாளப் பட்டச் சுட்டிகள்:

வெள்ளி, ஏப்ரல் 14, 2006

மீண்டும் வெளிச்சம்

அல்குர்ஆன் என்ற இறைவேதம், அரபியருக்கோ ஏனைய முஸ்லிம்களுக்கோ மட்டுமான தனிச் சொத்தன்று (081:027) என்பதைக்கூட அறியாமல், "முஸ்லிம்களின் அல்குர்ஆன் அரபுமொழி சார்ந்தது" என்று எழுதித் தம் அறியாமையை வெளிச்சம் போட்டுக் காட்டுதல் சூபிக்குத் தேவைதானா?

மேற்காண்பது திண்ணையின் 30 மார்ச் 2006 பதிப்பில் வெளியான எனது கடிதத்தின் ஒரு சொற்றொடர்.

"அல்குர்ஆன் அரபு மொழி சார்ந்தது இல்லை என்று கூறி எவ்வளவு அப்பட்டமாக வாசகர்களை வகாபி குழப்பப் பார்க்கிறார்." இது சூபியின் குற்றச்சாட்டு

"இந்தக் குர் ஆனை அரபு மொழியில் அருளியிருக்கிறோம் - நீங்கள் நல்லறிவு பெறுவதற்காக" - இது அல் குர் ஆன் 012:002.
இலண்டன் ரெவரெண்ட் பாதிரியார் வீட்டுப் பிள்ளை மர்மட்யூக் பிக்தால் என்பாருக்கு அரபு மொழிப் பயிற்றுவிக்கப் பட்டது. எதற்காக? குர் ஆனைக் குறை காண வேண்டும் என்பதற்காக! குர் ஆனில் பிழை தேடப் புகுந்த அவர்தாம், பின்னாளில் இஸ்லாத்தைத் தழுவியதோடு மட்டுமின்றி குர் ஆனுக்கு ஆங்கிலத்தில் விரிவுரையும் எழுதினார் என்பது பலருக்கும் தெரியும். 

சூபி எழுதியிருப்பதுபோல், அல்குர்ஆன் அரபு மொழி 'சார்ந்தது' (?) இல்லை; வஹ்ஹாபின் வார்த்தைகள் 'தெளிவான அரபு மொழி'யில் அருளப் பெற்றவைதாம் என்பது 'சூரியன்' நக்கீரன் வரைக்கும் தெரிந்த வெள்ளிடை மலை செய்தியாகும். நான் சூபியை இடைமறித்தது "முஸ்லிம்களின் அல்குர் ஆன்" என்று அவர் குறிப்பிட்டதைத்தான். அதற்காகத்தான் 081:027 வசனத்தையும் சான்றாக வைத்திருந்தேன்.

குர் ஆனை மேற்கோள் காட்டினாலே சூபிகளுக்கு மிரட்சி ஏற்பட்டு விடும். அதற்காக சொல்ல வேண்டியதைச் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லாமல் விட முடியுமோ? "... இது மிகத் தெளிவான அரபு மொழியில் (அருளப் பெற்று) உள்ளது" 016:103. ஒரு கருப் பொருள் குறித்த முழு அறிவும் அடிப்படை அறிவும் யாவை என்பதற்கு ஓர் உவமையைப் பார்ப்போமா?

'தமிழில் எழுதுதல்' என்ற ஒரு கருவுக்குத் தமிழின் உயிர் எழுத்துகள் 12ஐயும் மெய் எழுத்துகள் 18ஐயும் உயிர்மெய் 216ஐயும் ஆய்தம் 1ஐயும் சேர்த்து 247 எழுத்துகள் பற்றிய 'முழு அறிவு' கட்டாயம் தேவை. தமிழைச் சீரிய முறையில் தெளிவாக எழுத, அடிப்படை அறிவுக்கு மேற்கொண்டு இலக்கணங்கள் தெரிந்திருக்க வேண்டும். சூபியைவிடச் சிறப்பாக எழுத அடிப்படை அறிவே போதும்.

காலத்திற்கேற்றவாறு வேதங்களில் அல்லாஹ்வால் ஏற்படுத்தப் பட்ட மாற்றங்களை, 'அல்லாஹ்வுக்கே முழு அறிவு இல்லை' என்றுக் கூற விழைதலைவிட அறியாமை ஏதுமுண்டா?.
 " ... இன்றைய நாளில் உங்களுடைய மார்க்கத்தை நிறைவு செய்து விட்டேன்; என்னுடைய அருட்கொடை (இறைமறை)யையும் முழுமையாக்கி விட்டேன்; உங்களுடைய வாழும் வழியாக இஸ்லாமை ஏற்றுக் கொண்டேன்." என்று அல்லாஹ் கூறுகிறான் [005:003].
'இன்றைய நாளில்', 'நிறைவு', 'முழுமை' ஆகிய சொற்கள் உணர்த்துவது யாதெனில், 'இதற்கு முன்னர் முழுமை பெற்றிருக்கவில்லை' என்பதைத்தான்.

இது, சூபியின் சுரியானி, பிரியாணி போன்ற புதுக் கண்டுபிடிப்பன்று. 1400 ஆண்டுகளுக்கு முன்னர் வஹ்ஹாபே கூறியவைதாம்.

ஹஜ்ஜின்போது பலி கொடுத்தல், முடி மழித்தல் ஆகிய அனைத்தும் அரபுவகைப் பட்டதல்ல என்று முன்பே நிறுவியிருக்கிறேன். ஏனெனில், அவையனைத்தும் அண்ணல் இபுராஹீம் நபி அவர்களின் வழிமுறை; அண்ணல் இபுராஹீம் அரபியரா? என்று கேட்டிருந்தேன். என் கேள்விக்கு பதில் தராமல் தன்னுடைய அறியாமையை மீண்டும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதில் சூபி உறுதியாயிருக்கிறார். அவருடைய உறுதியை எண்ணி வியக்காமலிருக்க முடியவில்லை!.

புதிதாக சூபி புகுத்தியிருப்பது 'இஸ்லாமிய ஆடை விதிகள்' (Dress Code) அரபுவகைப் பட்டன' என்பதாகும்.

உலகில் வாழும் முஸ்லிம்கள் எல்லாரும் அரபியரைப் போன்று உடையணிந்து திரிவதாகக் கனவு கண்டிருக்கிறார். கிருத்துவப் பாதிரியார்களும் கன்னிகளும்தாம் அரபியரைப் போன்று உடையணிகின்றனர். கிழித்துக் கொண்டு திரிவது சூபிகளின் வழக்கமென்பதால் முழுக்க அணிவது முட்டாள்தனமாகத் தெரிகிறது போலும்.

மாறுபட்ட மொழிகள் பேசுவோர் வாழும் நம் நாட்டுக்கான தேசியப் பாடலாக, வங்கக் கவிஞர் தாகூரின் 'ஜன கன மன'வை நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோம் - அது பிறந்த சூழலைக் கருத்திலெடுக்காமலேயே.

முஸ்லிம்களின் இறைவணக்கத்தில் குர் ஆனுடைய வசனங்கள் ஓதப் படுவதன் காரணம், அரபு வகைப் பட்டுப் போவதோ அல்லாஹ்வுக்கு அரபியைத் தவிர வேறு மொழி தெரியாது என்பதோ உலகில் சிறந்த மொழி அரபிதான் என்பதோவல்ல. 

1- "... தொழுகையில் குர்ஆனிலிருந்து உங்களுக்கு இயன்றதை ஓதிக் கொள்ளுங்கள் ..." [073:020] என்பது அல்லாஹ்வின் கட்டளை.

2- அல்லாஹ்வுடைய குர்ஆன் வசனங்கள் அரபு மொழியில் அருளப் பட்டவை - காரணம்,

3- குர்ஆனை உலக மாந்தருக்கு அறிமுகப் படுத்திய நபிகள் நாயகத்துக்கு அரபு மொழி மட்டும்தான் தெரியும்.

4- ஒருவருக்குத் தெரிந்த மொழியில் வேதம் அருளப்பட்டால்தான் மற்றவர்களுக்கு அதை எடுத்துச் சொல்ல முடியும்.

உலகளாவிய ஓர் இறைவணக்கம் என்பது ஒரு மொழியில்தான் இருக்க முடியும். நபிகள் நாயகம் தமிழகத்தில் பிறந்திருந்தால் குர் ஆன் தமிழில்தான் அருளப் பட்டிருக்கும். உலக முஸ்லிம்கள் தமிழ் மொழியில் தொழுகை நடத்திக் கொண்டிருப்பர். அப்போதும் சீனாவில் பிறந்த ஒரு பி-சூ மேதாவி, "சீன மொழியில் தொழுகை நடத்த தயாரா?" என்று வலையில் சவால் விட்டுக் கொண்டிருப்பார்.

அடுத்து,

"ஒரே நேரத்தில் நான்கு பேர் வரை திருமணம் செய்து கொள்ளலாம்" என்பது , 'காலங்கடந்த ஆணாதிக்க சிந்தனை'யன்று. மாறாக, வஹ்ஹாப் வஹ்ஹாபிகளுக்கு வழங்கியிருக்கும் அதிகளவில் வழக்கிலில்லாத அனுமதி - ஆம்; அனுமதிதான்; ஆணையன்று. கூடுதல் விபரங்களுக்கு:

1- பலதார மணம், பாவமா பரிகாரமா? - சுட்டுவிரல்

2- பலதார மணம் - இறைநேசன்

"நினைத்த நேரத்தில் முத்தலாக் சொல்லி பெண்ணை ஒடுக்குமுறை" செய்ய முடியாது. பாஸ்டன் பாலா அறிந்து வைத்திருப்பதைக்கூட அறியாத சூபியின் பார்வைக்கு: தலாக் ஒரு விளக்கம் - அபூ முஹை.

என்னுடைய சொத்தில் என் விருப்பத்திற்கு, நானே யாருக்கும் பங்கு கொடுக்க முடியாது. யாருக்கு எவ்வளவு என்று என் இறைவன் தன் மறையில் வகுத்திருக்கிறானோ அதன்படி அவரவர் எடுத்துக் கொள்வர் - நான் இறந்த பின்னர். அதில் சூபிக்குப் பங்கில்லை.

மேலும்,

தன் பிள்ளைகளின் அப்பன் பெயர் தெரியாத அம்மாப் பட்டியலை உள்ளடக்கிய 'பெண்ணிய இஸ்லாம்' போன்று இன்னும் எத்தனை இஸ்லாம்களை அறிமுகப் படுத்தினாலும் வஹ்ஹாபின் சட்டப்படி [003:019] இஸ்லாம் என்பது ஒன்றுதான் - ஒன்றே ஒன்று!